மவுசு குறையுதா??? பொறியியல் படிப்பு பாதி கூட நிரம்ப்பாத இடங்கள் குறைவது ஆர்வமா, தரமா?- ஓர் அலசல்
தமிழகத்தில் மருத்துவப் படிப்புகளுக்கு அடுத்தபடியாக அதிக மாணவர்கள் விரும்பும் படிப்பாகப் பொறியியல் இருந்து வந்தது. ஆனால் நாளுக்கு நாள் பொறியியல் படிப்பின் மீதான மோகம் குறைந்துகொண்டே செல்கிறது. இந்த ஆண்டில் காலியாக இருந்த பொறியியல் இடங்களில் 50% கூட நிரம்பாத சூழல் நிலவுகிறது.

தமிழகத்தில் உள்ள 461 பொறியியல் கல்லூரிகளில் நடப்புக் கல்வி ஆண்டில் ஒரு லட்சத்து 63 ஆயிரத்து 154 இடங்கள் காலியாக இருந்தன. அதற்கான மாணவர் சேர்க்கை முழுவதும் இணைய வழியில் நடைபெற்றது.


இதில் நான்கு சுற்றுக் கலந்தாய்வுக்கு ஒரு லட்சத்து 10 ஆயிரத்து 873 மாணவர்களே தகுதி பெற்றிருந்தனர். இதனால் மாணவர் சேர்க்கை தொடங்கும் முன்பாகவே 52 ஆயிரத்து 281 இடங்கள் காலியாகின. முதல் சுற்றுக் கலந்தாய்வில் 12 ஆயிரத்துக்கும் மேற்பட்ட இடங்களுக்கு, 7,510 மாணவர்களே தங்களுக்கான கல்லூரியைத் தேர்வு செய்தனர்.

2-வது சுற்றுக் கலந்தாய்வில் 22,903 மாணவர்களுக்கு, கலந்துகொள்ள அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. இதிலும் 13,415 மாணவர்கள் மட்டுமே தங்களுக்கான கல்லூரியைத் தேர்வு செய்தனர். அக்.16-ம் தேதி 3-வது சுற்றுக் கலந்தாய்வு முடிந்தது. இந்நிலையில், ஒரு லட்சத்து 63 ஆயிரத்து 154 காலிப் பொறியியல் இடங்களில் 71 ஆயிரத்து 195 இடங்கள் மட்டுமே நிரம்பியுள்ளன. குறிப்பாக 43.63 சதவீத இடங்களில் மட்டுமே மாணவர்கள் பொறியியல் கல்லூரிகளில் சேர்ந்துள்ளனர்.

20 பொறியியல் கல்லூரிகளில் ஒரு மாணவர் கூடச் சேரவில்லை. 103 கல்லூரிகளில் 10 சதவீதத்துக்கும் குறைவான இடங்கள் மட்டுமே நிரம்பியுள்ளன. 30 கல்லூரிகளில் 1 சதவீதத்துக்கும் குறைவான இடங்கள் மட்டுமே நிரம்பியுள்ளன. 64 கல்லூரிகளில் 5 சதவீதத்துக்கும் குறைவான இடங்கள் மட்டுமே நிரம்பியுள்ளன. 13 கல்லூரிகளில் மட்டுமே 100 சதவீத இடங்களில் மாணவர்கள் சேர்ந்துள்ளனர். 67 கல்லூரிகளில் 75% இடங்கள் நிரம்பியுள்ளன. இதனால் ஏராளமான பொறியியல் கல்லூரிகள் மூடப்படும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளன.இந்த முறை மெக்கானிக்கல், சிவில், ஏரோநாட்டிக்கல் பிரிவுகளை மாணவர்கள் அதிகம் எடுக்கவில்லை. மெக்கானிக்கல் பொதுப்பிரிவு இடங்களில் 301 கல்லூரிகளில் மாணவர்கள் சேரவில்லை. 281 கல்லூரிகளில் சிவில் படிப்புகள் நிரம்பாமல் உள்ளன.

எனினும் இது ஒரே ஆண்டில் நிகழ்ந்த மாற்றமில்லை. ஆண்டுதோறும் படிப்படியாக மாணவர் சேர்க்கை தொடர்ந்து குறைந்து வருகிறது. கலை, அறிவியல் கல்லூரிகளில் இந்த ஆண்டு அரசே 20 சதவீத இடங்களை உயர்த்தியுள்ள நிலையில், பொறியியல் கல்லூரிகளில் ஏற்கெனவே உள்ள இடங்களில் 50 சதவீதம்கூட நிரம்பாததைக் கவனிக்க வேண்டியது அவசியமாகிறது.

கல்வியாண்டு பொறியியல் இடங்கள் (நிரம்பியவை)
2017-18 89,101
2018-19 82,249
2019-20 83,396
2020-21 70,249
அதேபோல 100-க்கும் மேற்பட்ட கல்லூரிகளில் ஓரிடத்தைக் கூட மாணவர்கள் தேர்வு செய்யாததும் இங்கே கவனிக்கதக்கது. இவற்றுக்கு என்ன காரணங்கள் என்று கல்வியாளர்கள், அதிகாரிகள் சிலரிடம் பேசினோம்.

ஜெயப்பிரகாஷ் காந்தி, கல்வி ஆலோசகர்:

கடந்த சில ஆண்டுகளில் அளவுக்கதிகமான பொறியியல் கல்லூரிகள் புற்றீசல் போல முளைத்துவிட்டன. இப்போதுதான் புதுக் கல்லூரிகள் தொடங்குவது நின்றிருக்கிறது. தற்போது பொறியியல் மீது மாணவர்களின் மோகம் குறைகிறது என்பதைவிட அவர்கள் தெளிவாக உள்ளார்கள் எனலாம்.

இன்றும் வேலைவாய்ப்பை அளிக்கக்கூடிய, தலைசிறந்த பொறியியல் கல்லூரிகளுக்கு நன்கொடை அளித்துப் போகும் மாணவர்களும் இருக்கிறார்கள். கற்பித்தல், கட்டமைப்பு வசதிகள், தேர்ச்சி விகிதம், வேலைவாய்ப்பு குறைவாக உள்ள கல்லூரிகள் மட்டுமே அடிவாங்குகின்றன. முன்பைப் போல கல்லூரி குறித்துத் தெரியாமல் யாரும் சேர்வதில்லை. சமூக வலைதளங்களின் தாக்கம் மாணவர்களிடையே அதிகமாக உள்ளது. அதன் மூலம் கல்லூரிகள் குறித்த அனைத்துத் தகவல்களையும் பார்த்த பிறகே சேர முடிவெடுக்கிறார்கள்.

அதேபோல எந்தப் படிப்பாக இருந்தாலும் திறமை இருந்தால் போதும் என்ற மனநிலை பல்வேறு நிறுவனங்களுக்கு வந்துவிட்டது. அதாவது டிகிரி பார்த்து வேலை கொடுக்கும் போக்கு மாறிவிட்டது. இதனாலும் பொறியியல் படிப்புக்கான முக்கியத்துவம் குறைந்துள்ளது.

அதேபோல நிகர்நிலை, தனியார் பல்கலைக்கழகங்களை நோக்கிச் செல்லும் பொறியியல் மாணவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது. இதனாலும் அண்ணா பல்கலைக்கழகத்தின்கீழ் படிக்கும் பொறியியல் மாணவர்களின் எண்ணிக்கையில் சரிவு ஏற்பட்டுள்ளது.


ஜெயப்பிரகாஷ் காந்தி
என்ன செய்யலாம்?

* அப்துல் கலாம் சொன்னதுபோல 40 சதவீதப் பொறியியல் பாடத்திட்டத்தை மாற்றியமைக்க வேண்டும். ஒட்டுமொத்த உலகமும் டிஜிட்டல் மயமாக்கல், ஆட்டோமேஷனை நோக்கிப் பயணிப்பதால் செயற்கை நுண்ணறிவு உள்ளிட்ட தொழில்நுட்பங்கள் சார்ந்து பாடத்திட்டங்கள் மாற்றப்பட வேண்டும். உதாரணத்துக்கு ஐஐடி டெல்லியில் கணினி அறிவியலையும் மெக்கானிக்கலையும் இணைத்துப் புதிய படிப்பு தொடங்கப்பட்டிருக்கிறது.

* ஆய்வுகளுக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்பட வேண்டும். ஏஐசிடிஇ, அண்ணா பல்கலைக்கழகம் இரண்டும் இணைந்து கல்லூரிகளின் ஆராய்ச்சித் துறைகளில் குறைந்தது 10 சதவீத நிதியை ஒதுக்குவதை உறுதிப்படுத்த வேண்டும். தொழில்நுட்பங்கள் சார்ந்து கல்லூரிகள் முதலீடு செய்ய வேண்டும்.

* நன்கு செயல்படும் கல்லூரிகளுக்கு அண்ணா பல்கலைக்கழகம் சுதந்திரத்தையும் சலுகைகளையும் வழங்க வேண்டும். பாடத்திட்டத்தில் புதுமைகளைப் புகுத்த அனுமதிக்க வேண்டும்.

* தேர்வு முறையில் மாற்றம் கொண்டு வரப்பட வேண்டும். ஆன்லைனில் தேர்வு நடத்தலாம். செயல்முறைக் கற்றலை அதிகம் ஊக்கப்படுத்த வேண்டும். ஒவ்வொரு செமஸ்டரிலும் சிறிய அளவிலான ப்ரொஜெக்ட், பேப்பர் பிரசன்டேஷன் ஆகியவற்றைக் கட்டாயமாக்க வேண்டும்.

* தொழில்நுட்பத்தோடு கூடிய படிப்புகளுக்கே வாய்ப்புண்டு. பாடத்திட்டத்துக்கும் மாணவர்களின் கற்றலுக்குமான இடைவெளி அதிகமாகிக் கொண்டே செல்கிறது. அதைக் குறைக்கும் கல்லூரிகளே நிலைக்க முடியும்.

முனைவர் அருள் அறம், அண்ணா பல்கலைக்கழக ஆசிரியர் சங்கத்தின் தலைவர், அண்ணா பல்கலைக்கழக ஊடக அறிவியல் துறைத் தலைவர்:

பொறியியல் படிப்புகளை இத்தனை பேர் படிக்க வேண்டிய அவசியம் உள்ளதா என்று தெரியவில்லை. தமிழ்நாட்டுக்கு ஆண்டுதோறும் எத்தனை பொறியாளர்கள் தேவைப்படுகிறார்கள் என்று கணக்கெடுக்கிறோமா? காலியிடங்களை ஏன் இவ்வளவு அதிகரிக்க வேண்டும்? ஏன் இத்தனை பேருக்கும் சேர்க்கைக்கு அனுமதி அளிக்க வேண்டும்? என்ற கேள்விகள் எழுகின்றன.

அதேபோல பொறியியல் படிக்கும் முன் ஒரு மாணவருக்கு அடிப்படைத் தகுதி உள்ளதா என்று பரிசோதிப்பதில்லை. கணிதத்தில் ஆர்வமில்லாத மாணவரைப் பொறியியல் படிக்கச் சொல்வதும் நிகழ்கிறது. வேலை கிடைக்கும் என்ற உணர்வு, தன்னம்பிக்கை இல்லாத சூழலில், ஒரு மாணவன் நன்றாகப் படிக்க மாட்டான் என்றே உளவியல் நிபுணர்கள் கூறுகின்றனர்.

அடுத்தபடியாக வரலாறு, சமூக அறிவியல் உள்ளிட்ட பாடங்களில் வாசிப்பும் பொது அறிவும் இருந்தால், முழுமையாய்ப் படிக்காமலேயே தேர்ச்சி பெற வாய்ப்புண்டு. ஆனால், தொழில்நுட்பம் சார்ந்த பொறியியல் படிப்புகளில், படித்தால் மட்டுமே தேர்ச்சி அடையமுடியும்.


முனைவர் அருள் அறம்
அதேபோன்று பெரும்பாலான வேலைகளுக்கு ஏதாவது ஒரு பட்டப் படிப்பு போதும் என்ற சூழலில் எதற்குப் பொறியியல் படிக்க வேண்டும் என்று மாணவர்கள் நினைக்கின்றனர். தொழில்நுட்பப் படிப்பை முடித்துவிட்டு, பொதுவான வேலைக்குச் செல்லும்போது எதற்காகப் பணத்தையும் நாட்களையும் வீணாக்க வேண்டும் என்கிற மனோபாவமும் அதிகரித்து வருகிறது.

இந்த முறை கரோனா அச்சத்தால் பொருளாதார நெருக்கடி காரணமாகவும், தூரத்தில் உள்ள கல்லூரிகளில் சேர்க்க வேண்டாம் என்ற எச்சரிக்கை உணர்வாலும் சேர்க்கை குறைந்திருக்கிறது.

பாலகுருசாமி, அண்ணா பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர்:

கடந்த சில ஆண்டுகளாகவே இந்தப் போக்கு தொடங்கிவிட்டது. இதற்கு முக்கியக் காரணங்களாக சிலவற்றை நினைக்கிறேன்.

1. தேவைக்கு அதிகமாகவே இடங்களை உருவாக்கிவிட்டோம். கேட்கும் எல்லோருக்கும் ஏஐசிடிஇ பொறியியல் கல்லூரிக்கான அனுமதி அளித்துவிட்டது. தமிழ்நாட்டில் பள்ளிகள் போலப் பொறியியல் கல்லூரிகள் பெருகிவிட்டன.

2. தரம் குறைந்த கல்லூரிகளில் இருந்து வெளியே வரும் பெரும்பாலான பொறியியல் பட்டதாரிகளுக்கு வேலை கிடைக்காமல், வேலைவாய்ப்பின்மை அதிகரித்துவிட்டது. அவர்கள் கூலி வேலை செய்வதையும் உணவகங்களில் வேலை பார்ப்பதைக் கண்கூடாகப் பார்க்கிறேன். இதனாலும் பொறியியல் மீதான ஆர்வம் குறைந்து வருகிறது

3. கல்லூரிகளின் தரக் குறைவு அடுத்த காரணம். போதிய கட்டமைப்பு வசதி, தேவையான ஆசிரியர்கள் இல்லாமல் நிறையக் கல்லூரிகள் இருக்கின்றன. இருக்கும் ஆசிரியர்களும் திறன் கொண்டவர்களாக இல்லை.

4. கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக அரசிலும் அண்ணா பல்கலைக்கழகத்திலும் மலிந்த ஊழல் இன்னொரு முக்கியக் காரணம். யாரையும் கட்டுப்படுத்த முடியாததால், இந்தச் சூழல் நிலவுகிறது. இதனால் சில கல்லூரிகள் தரம் இல்லாமலும் தன்னிச்சையாகவும் தொடங்கப்படுகின்றன/ செயல்படுகின்றன.

5. மாணவர்களின் கற்றல் ஆர்வமும் குறைந்துவிட்டது. 12-ம் வகுப்பில் தேர்ச்சி பெற்றால் பொறியியல் சேரலாம் என்ற சூழலில் படிக்க வரும் மாணவர்கள் தன்முனைப்புடன் படிப்பது குறைந்து வருகிறது. சுமார் 4 லட்சம் மாணவர்கள் தமிழ்நாட்டில் அரியர் வைத்திருக்கிறார்கள். சில கல்லூரிகளில் 90 சதவீத மாணவர்கள் தேர்ச்சி பெறாமல் உள்ளனர்.

தனியார் கல்லூரிகளில் குறைந்த ஊதியம் மட்டுமே பெறும் ஆசிரியர்கள் கற்பிப்பதில் அதிக ஆர்வம் காட்டுவதில்லை. பாடத்திட்டத்தை மேம்படுத்தினால் பொறியியல் படிப்புகளின் மீதான ஆர்வம் அதிகரிக்கும் என்று கூறப்படுவதை நான் ஏற்கமாட்டேன். இருக்கும் பாடங்களை நடத்தவே போதிய/ திறமையான ஆசிரியர்கள் இல்லை. அதேபோல 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை அண்ணா பல்கலை. பாடத்திட்டங்களை மாற்றி வருகிறது. தன்னாட்சிக் கல்லூரிகள் ஆண்டுதோறும் பாடத்திட்டங்களை மேம்படுத்துகின்றன.


பாலகுருசாமி
என்ன செய்ய வேண்டும்?

அரசின் தலையீடு இல்லாமல் அண்ணா பல்கலைக்கழகம் முழுச் சுதந்திரத்துடன் செயல்பட வேண்டும். அங்கே நிலவும் ஊழல் பிரச்சினைகளைக் களைய வேண்டும். தரமற்ற சுமார் 200 பொறியியல் கல்லூரிகளை உடனடியாக மூடவேண்டும். இதைச் செய்யாததால்தான் ஏராளமான மாணவர்கள் தங்களின் எதிர்காலத்தை இழந்து நிற்கிறார்கள்.

இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

பொறியியல் மாணவர் சேர்க்கைச் செயலர் புருஷோத்தமனிடம் இதுகுறித்துக் கேட்டபோது, சேர்க்கை நன்றாகவே நடைபெற்றது என்றுகூறி முடித்துக் கொண்டார்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments