7.5 சதவீத இடஒதுக்கீட்டில் மாநில அளவில் 17ம் இடம் பெற்றும் எம்பிபிஎஸ் படிப்பில் சேர முடியாமல் தவிக்கும் அறந்தாங்கி மாணவன்-அரசு உதவிபெறும் பள்ளியில் படித்ததால் சிக்கல்         


7.5 சதவீத இடஒதுக்கீட்டில் மாநில அளவில் 17ம் இடம் பெற்றும் எம்பிபிஎஸ் படிப்பில் சேர முடியாமல் அறந்தாங்கி மாணவர் தவித்து வருகிறார். அரசு உதவி பெறும் பள்ளியில் படித்ததால் சிக்கல் ஏற்பட்டுள்ளது.புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி மணிவிளான் முதல் தெருவை சேர்ந்தவர் கூலித்தொழிலாளி பஷீர்கான். இவருக்கு 2 மகன்கள், ஒரு மகள் உள்ளனர். இதில் மகாதீர்கான் கடந்த ஆண்டு அறந்தாங்கி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் பிளஸ் 2 படித்தார்.

தொடர்ந்து பள்ளிக்கல்வித்துறையின் இ.பாக்ஸ் லேர்னிங் மூலம் நீட் தேர்வு பயிற்சி பெற்று நீட் தேர்வு எழுதினார். இந்த தேர்வில் 720க்கு 300 மதிப்பெண் பெற்றார். தொடர்ந்து தமிழக அரசு சமீபத்தில் வெளியிட்ட அரசு பள்ளிக்கான 7.5 சதவீத இட உள்ஒதுக்கீட்டில் மகாதீர்கான் தமிழக அளவில் 17வது இடமும், புதுக்கோட்டை மாவட்ட அளவில் முதலிடமும் பெற்றார். அரசு பள்ளிகளுக்கான இடஒதுக்கீட்டில் புதுக்கோட்டை மாவட்ட அளவில் முதலிடம் பெற்ற மகாதீர்கான் எம்பிபிஎஸ் படிக்க அரசு கல்லூரி கிடைக்கும் என்ற நம்பிக்கையில் இருந்தார்.

இந்நிலையில் தமிழக அரசு, அரசு பள்ளிகளுக்கான எம்பிபிஎஸ் இட உள்ஒதுக்கீடு பெறுவதற்கு மாணவர்கள் 6ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை அரசு பள்ளியில் படித்திருக்க வேண்டும் என்ற விதியால், மகாதீர்கான் அரசு பள்ளி 7.5 சதவீத இட உள்ஒதுக்கீட்டின் படிக்க முடியாத நிலையை உருவாக்கி உள்ளது. மகாதீர்கான் 6ம் வகுப்பு முதல் 8ம் வகுப்பு வரை அரசு உதவிபெறும் நடுநிலைப்பள்ளியில் படித்ததால் அரசு பள்ளி மாணவர்களுக்கான எம்.பி.பி.எஸ் இட உள்ஒதுக்கீட்டில் இடம் பெற முடியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார்.

இதுகுறித்து மாணவன் மகாதீர்கான் கூறியதாவது: 6ம் வகுப்பு முதல் 8ம் வகுப்பு வரை அரசு உதவி பெறும் சத்தியமூர்த்தி நினைவு நடுநிலைப்பள்ளியிலும், 9ம்வகுப்பு முதல் 12ம்வகுப்பு வரை அறந்தாங்கி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் படித்தேன். பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் 500க்கு 458 மதிப்பெண் பெற்று பள்ளியில் முதலிடம் பெற்றேன். அதேபோல பிளஸ்2 தேர்வில் 600க்கு 504 மதிப்பெண் பெற்று பள்ளியில் முதலிடம் பெற்றேன். அதைத் தொடர்ந்து பள்ளிக் கல்வித்துறை மூலம் இ.பாக்ஸ் லேர்னிங் மூலம் நீட் தேர்வு எழுதி 720க்கு 300 மதிப்பெண் பெற்றுள்ளேன்.

எம்.பி.பி.எஸ் படிப்பிற்கு அரசு பள்ளிகளுக்கான இட உள்ஒதுக்கீட்டில் தமிழக அளவில் 17து இடமும், புதுக்கோட்டை மாவட்ட அளவில் முதலிடமும் பெற்றேன். அரசு பள்ளிகளுக்கான இட ஒதுக்கீட்டில் மாநில அளவில் நான் 17வது மாணவனாக தேர்வு செய்யப்பட்டேன். எனது எம்.பி.பி.எஸ் கனவு நினைவாகி விட்டதால் எனது குடும்பத்தினர், ஆசிரியர்கள், நண்பர்கள் மகிழ்ச்சியில் இருந்தனர்.

இந்நிலையில் நேற்று எம்பிபிஎஸ்-ல் சேர்ந்து படிக்க கல்லூரியை தேர்வு செய்வதற்கான ஆவணங்களை முதன்மை கல்வி அலுவலர் அலுவலகத்தில் சேர்ப்பதற்காக படித்த பள்ளிக்கு சென்றேன். 6ம் வகுப்பு முதல் 8ம் வகுப்பு வரை அரசு பள்ளியில் படிக்கவில்லை. அதனால் அரசு பள்ளி மாணவர்கள் எம்.பி.பி.எஸ் இட உள்ஒதுக்கீட்டின்படி கல்லூரியில் சேர முடியாது என தெரிய வந்தது. இதனால் எனது மருத்துவராகும் கனவு கலைந்து விடுமோ என்ற அச்சமும், அரசு உதவி பெறும் பள்ளியில் படித்ததால் உள்ஒதுக்கீடு வாய்ப்பு பறிபோகும் நிலை உள்ளது என்றார்.எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments