கஜா புயலால் ஆட்டோ டிரைவர் பாதிப்பு : புதிய வீடு கட்டிக் கொடுத்த பள்ளி நண்பர்கள்




கஜா புயலின்போது புதுக்கோட்டை மாவட்டத்தில் பெரும் சேதம் ஏற்பட்டது. இதில், மச்சுவாடி பகுதியை சேர்ந்த ஆட்டோ டிரைவர் முத்துக்குமார் (வயது 44) வீடும் சேதமடைந்தது. அந்த வீட்டின் மேற்கூரையில் விளம்பர பதாகைகளால் அமைத்து அவரும், அவரது மனைவி மற்றும் 4 குழந்தைகளுடன் வசித்து வந்தனர். இந்தநிலையில் ஆட்டோவை விற்ற அவர், தற்போது டிரைவர் வேலைக்கு சென்று வருகிறார்.

 
கொரோனா ஊரடங்கின்போது வெளியூர்களில் வசித்த அவரது நண்பர்கள் புதுக்கோட்டை வந்திருந்தனர். அப்போது முத்துக்குமாருடன் டி.இ.எல்.சி. பள்ளியில் படித்தவர்கள் ஒருங்கிணைந்து ஒரு வாட்ஸ்-அப் குழுவை உருவாக்கினர். அப்போது, ஏழ்மை நிலையில் வசித்து வந்த முத்துக்குமாரின் நிலையை கண்ட அவரது நண்பர்கள், அவருக்கு புதிய வீடு கட்டிக்கொடுக்க முயற்சி எடுத்தனர்.

மேலும், வாட்ஸ்-அப் குழுவில் இந்த தகவலை தெரிவித்திருந்தனர். அதன்அடிப்படையில் முத்துக்குமாருடன் 6 முதல் பிளஸ்-2 வரை படித்த நண்பர்கள் பலர் தற்போது வெளியூர் மற்றும் வெளிநாடுகளில் வசிக்கின்றனர். அவர்களும் உதவிக்கரம் நீட்டினர். நண்பர்கள் உதவியால் முத்துக்குமாருக்கு ஒரு புதிய வீட்டை அதே இடத்தில் கட்டிக் கொடுத்தனர்.

அந்த புதிய வீட்டை நண்பர்கள் திறந்து வைத்து அதன் சாவியை முத்துக்குமாரிடம் ஒப்படைத்தனர். அப்போது அவர் நண்பர்களுக்கு நன்றி தெரிவித்தார்.

கொரோனா ஊரடங்கில் பழைய நண்பரை சந்தித்ததிலும், புதிதாக தொடங்கப்பட்ட வாட்ஸ்-அப் குழுவாலும் ஆட்டோ டிரைவருக்கு விடிவு பிறந்ததை எண்ணி அவரது நண்பர்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments