தீவிர புயலாக காரைக்கால்-மாமல்லபுரம் இடையே நாளை கரையை கடக்கும் ‘நிவர்’.! வானிலை ஆய்வுமையம் தகவல்.!!



வங்கக்கடலில் நிலைக்கொண்டு இருக்கும் தாழ்வுமண்டலம் தீவிர புயலாக (நிவர்) காரைக்கால்-மாமல்லபுரம் இடையே நாளை(புதன்கிழமை) கரையை கடக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இந்த நிலையில் நிவர் புயலின் அடுத்தக்கட்டம் எப்படி இருக்கும்?, அதன் நகர்வு எங்கே இருக்கும்?, எந்த பகுதிகளில் கரையை கடக்கும்? என்பது குறித்து வானிலை ஆய்வு மையத்தின் தென் மண்டல தலைவர் எஸ்.பாலச்சந்திரன் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது:-

தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் இருக்கும் காற்றழுத்த தாழ்வு மண்டலம் சென்னைக்கு தென்கிழக்கே 520 கிலோ மீட்டர் தொலைவில் நிலை கொண்டு இருக்கிறது. இது அடுத்த 24 மணிநேரத்தில் (இன்று) புயலாகவும், அதனைத்தொடர்ந்து தீவிர புயலாகவும் வலுப்பெறக்கூடும். இது வடமேற்கு திசையில் நகர்ந்து தற்போதைய நிலவரப்படி காரைக்கால்- மாமல்லபுரம் இடையே நாளை (புதன்கிழமை) பிற்பகலில் கரையை கடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதன் காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இன்று முதல் 3 நாட்களுக்கு மழை பெய்யக்கூடும். இன்றும், நாளையும் தஞ்சை, திருவாரூர், நாகப்பட்டினம் ஆகிய டெல்டா மாவட்டங்கள் மற்றும் காஞ்சீபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர், கடலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, புதுக்கோட்டை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் அதி கனமழை பெய்யக்கூடும்.

அதேபோல் ஏனைய வடமாவட்டங்களான வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி, சேலம், தர்மபுரி, நாமக்கல், நீலகிரி, திருப்பூர், கோவை, ஈரோடு, கரூர், திருச்சி, அரியலூர், பெரம்பலூர் மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் கன முதல் மிக கனமழையும் பெய்ய வாய்ப்பு இருக்கிறது. சென்னை மற்றும் புறநகரை பொறுத்தவரையில் நகரின் சில பகுதிகளில் கனமழை பெய்யக்கூடும்.

புயல் தொடர்பாக அரசு விடுக்கும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை பொதுமக்கள் கவனமாக பின்பற்றவேண்டும். அத்தியாவசியமான உணவு, குடிநீர், மருந்து பொருட்களை கைவசம் வைத்துக்கொள்ள வேண்டும். தேவையற்ற பயணங்களை தவிர்ப்பது நல்லது.

இவ்வாறு அவர் கூறினார்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments