அரசு மானியத்தில் நாட்டுக் கோழி வளர்ப்பு: டிச.2-க்குள் விண்ணப்பிக்கலாம்.. கலெக்டர் தகவல்.!!தேசிய வேளாண்மை அபிவிருத்தி திட்டத்தின்கீழ் 2020-2021-ம் ஆண்டிற்கு தொழில் முனைவோர் பயன்பாட்டுக்கான நாட்டுக்கோழி வளர்ப்புத்திட்டம் ரூ.75 ஆயிரம் பின்னேற்பு மானிய அடிப்படையில் செயல்படுத்தப்பட உள்ளது.

முதற்கட்டமாக ஒரு ஊராட்சி ஒன்றியத்திற்கு 2 முதல் 3 பயனாளிகள் என 32 நபர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். இதில் ஆயிரம் கோழிகள் பராமரிப்பிற்கு இரவு கொட்டகை அமைக்க சொந்தமாக குறைந்தபட்சம் 2,500 சதுரஅடி இடம், தீவனம், தண்ணீர் குவளைகள் வைத்திருக்க வேண்டும். கோழி வளர்ப்பில் அனுபவம் மற்றும் ஆர்வமுள்ள விவசாயிகள், சம்பந்தப்பட்ட ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள கிராமத்தில் நிரந்தரமாக வசிப்பவராக இருக்க வேண்டும். 

பயனாளிகள் 30 சதவீதம் தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடி இனத்தை சேர்ந்தவர்களாக இருக்க வேண்டும். விதவைகள், ஆதரவற்றோர், திருநங்கைகள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு முன்னுரிமை வழங்கப்படும். 2012 முதல் 2017-ம் ஆண்டு வரை கோழி அபிவிருத்தி திட்டத்தில் பயனடைந்தவராக இருக்க கூடாது. 3 ஆண்டுகளுக்கு குறையாமல் கோழி பண்ணையை பராமரிக்க வேண்டும். 

கோழி வளர்ப்பு தொழில் மேலாண்மை, கோழி வளர்ப்பில் சிறந்த நடைமுறைகள், தடுப்பூசிகள், தீவன உற்பத்தி தொழில் நுட்பங்கள் சந்தைப்படுத்துதல், குஞ்சு பொரிப்பான் குறித்து 5 நாட்கள் பயிற்சி வழங்கப்படும். ஒரு நாளைக்கு ரூ.150 வீதம், 5 நாட்களுக்கு ரூ.750 ஊக்கத்தொகையாக வழங்கப்படும். ஒவ்வொரு பயனாளியும் இறைச்சி கோழிகளை 16 வாரங்கள் வரை வளர்க்க வேண்டும். 

இத்திட்டத்தில் பயன்பெற, கோழி வளர்ப்பில் ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் தங்கள் அருகிலுள்ள கால்நடை மருந்தக, கால்நடை உதவி மருத்துவர்களை தொடர்பு கொண்டு வருகிற 2-ந் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம். மேற்கண்ட தகவலை கலெக்டர் உமாமகேஸ்வரி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments