புதுக்கோட்டை மாவட்டத்தில் 3 கிராமங்களில் நெல் கொள்முதல் நிலையம்: 2 வாரங்களில் திறக்க உயர் நீதிமன்றம் உத்தரவு
புதுக்கோட்டை மாவட்டத்தில் 3 கிராமங்களில் 2 வாரங்களில் நெல் கொள்முதல் நிலையங்களைத் திறக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

புதுக்கோட்டை அக்ககரை வட்டத்தைச் சேர்ந்தவர் எஸ்.பட்டம்மாள் சத்தியமூர்த்தி. கறம்பக்குடி ஊராட்சி ஒன்றிய 5-வது வார்டு திமுக கவுன்சிலராக உள்ளார்.
இவர் உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் தாக்கல் செய்த மனு:

''புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட காட்டாத்தி, பட்டுவிடுதி, நெல்லையடி கொல்லை, தொண்டைமான் புஞ்சை, கழியராயன் விடுதி கிராமங்களில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் செயல்பட்டன. இந்த கிராமங்களில் சுமார் 850 ஹெக்டேர் பரப்பளவில் 750 விவசாயிகள் நெல் விவசாயம் செய்து வருகின்றனர்.

இந்நிலையில் பட்டுவிடுதி, நெல்லையடி கொல்லை, தொண்டைமான் புஞ்சை, காட்டாத்தி நெல் கொள்முதல் நிலையங்கள் மூடப்பட்டன. இதனால் இந்த கிராமத்தைச் சேர்ந்த விவசாயிகள் நெல் விற்பனைக்கு சுமார் 15 கிலோ மீட்டர் தூரம் பயணிக்க வேண்டியுள்ளது.

எனவே, பட்டுவிடுதி, கட்டாத்தி, நெல்லையடி கொல்லை, தொண்டைமான் புஞ்சை கிராமங்களில் நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கவும், நடமாடும் நெல் கொள்முதல் நிலையங்கள் அமைக்கவும், அரசாணையில் நெல் பருவம் தொடர்பான பிற மொழிச் சொற்களை நீக்கவும் உத்தரவிட வேண்டும்''.

இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது.

இந்த மனு நீதிபதிகள் என்.கிருபாகரன், பி.புகழேந்தி அமர்வில் விசாரணைக்கு வந்தது. மனுதாரர் சார்பில் வழக்கறிஞர் கணபதி சுப்பிரமணியம் வாதிட்டார்.

அரசு வழக்கறிஞர் வாதிடுகையில், ''பட்டுவிடுதி, கட்டாத்தி, நெல்லையடி கொல்லையில் நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்க வேளாண் இயக்குனர் பரிந்துரை செய்துள்ளார்'' என்றார்.

இதையடுத்து, ''வேளாண் இயக்குனர் பரிந்துரையின் அடிப்படையில் 3 கிராமங்களில் நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்க 2 வாரங்களில் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்'' என நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments