பொங்கல் பரிசு வழங்கும் பணி தொடங்கியது: 4½ லட்சம் குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ.116 கோடி வினியோகம் அமைச்சர் தகவல்




தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகையை பொதுமக்கள் சிறப்பாக கொண்டாட ஏதுவாக அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு ரேஷன் கடைகளில் பொங்கல் பரிசு தொகுப்பு மற்றும் ரூ.2,500 வழங்கப்படும் என முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்து தொடங்கி வைத்தார். மேலும் ரேஷன் கடைகளில் ஜனவரி மாதம் 4-ந் தேதி முதல் வினியோகிக்கப்படும் என்றார். அதன்படி புதுக்கோட்டை மாவட்டத்தில் ரேஷன் கடைகளில் பொங்கல் பரிசு தொகுப்பாக ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை, ஒரு முழுக் கரும்பு, 20 கிராம் உலர் திராட்சை, 20 கிராம் முந்திரி, 5 கிராம் ஏலக்காய் மற்றும் ரூ.2,500 வழங்கும் பணி நேற்று தொடங்கியது. ஏற்கனவே வழங்கப்பட்ட டோக்கன் அடிப்படையில் குடும்ப அட்டைதாரர்களுக்கு வினியோகிக்கப்பட்டன.



ரூபாய் நோட்டுகள்

ரூ.2,500 ரொக்கம் வழங்கப்பட்டதில் ரூ.500 தாள்கள் 5 என்ற வகையிலும், சில கடைகளில் ரூ.2 ஆயிரம் நோட்டு ஒன்றும், ரூ.500 நோட்டு ஒன்றும் வழங்கப்பட்டன. கரும்பினை வெட்டாமல் முழு கரும்பாகவே வழங்கப்பட்டன. இதனை பொதுமக்கள் மகிழ்ச்சியுடன் வாங்கி சென்றனர். ரேஷன் கடைகள் முன்பு பாதுகாப்பு பணிக்காக போலீசார் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர். புதுக்கோட்டையில் டி.வி.எஸ். கார்னர் அருகே அர்பன் கூட்டுறவு பண்டகசாலையில் பொங்கல் பரிசு தொகுப்பு மற்றும் ரூ.2,500 வழங்கும் திட்டத்தை சுகாதாரத்துறை அமைச்சர் டாக்டர் சி.விஜயபாஸ்கர் தொடங்கி வைத்தார். அப்போது கலெக்டர் உமாமகேஸ்வரி, கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணைபதிவாளர் உமாமகேஸ்வரி, முன்னாள் எம்.எல்.ஏ. கார்த்திக்தொண்டைமான், வேளாண் விற்பனைக்குழு தலைவர் பாஸ்கர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

ரூ.116 கோடி

முன்னதாக விராலிமலையில் கூட்டுறவு அங்காடியில் பொங்கல் பரிசு தொகுப்பினை அமைச்சர் விஜயபாஸ்கர் வழங்கி தொடங்கி வைத்து தெரிவிக்கையில், புதுக்கோட்டை மாவட்டத்தில் 1, 024 ரேஷன் கடைகளில் உள்ள 4 லட்சத்து 64 ஆயிரத்து 142 குடும்ப அட்டைதாரர்களுக்கு தமிழக அரசின் சிறப்பு பொங்கல் பரிசு தொகுப்பு மற்றும் தலா ரூ.2, 500 வீதம் மொத்தம் ரூ.116 கோடியே 3 லட்சத்து 55 ஆயிரமும் வழங்கப்படுகிறது. மேலும் கூட்டுறவுத்துறையின் சார்பில் பொதுமக்கள் தங்களது இருப்பிடங்களிலேயே பொருட்களை பெறும் வகையில் மாவட்டத்தில் 100 எண்ணிக்கையில் நடமாடும் ரேஷன் கடைகள் துவக்கி வைக்கப்பட்டுள்ளது. தமிழக அரசின் நலத்திட்ட உதவிகளை பொதுமக்கள் உரிய முறையில் பெற்று பொங்கல் பண்டிகையை சிறப்பாக கொண்டாட வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன் என்றார். ரேஷன் கடைகளில் 12-ந் தேதிவரை பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்பட உள்ளது. விடுபட்டவர்களுக்கு வருகிற 13-ந் தேதி வழங்கப்படும்.

திருவரங்குளம்

திருவரங்குளம் வட்டார பகுதிகளில் உள்ள ரேஷன் கடைகளில் பொங்கல் பரிசாக தொகுப்பு ரூ.2,500 மற்றும் பொங்கல் பொருட்களான பச்சரிசி, வெல்லம், கரும்பு உள்ளிட்ட பொருட்கள் நேற்று முதல் வழங்கப்பட்டு வருகின்றது. இந்த பொருட்களை அந்தந்த பகுதி உள்ளாட்சி நிர்வாகிகள் பொதுமக்களுக்கு வழங்கினார். திருமலை சமுத்திரம் தொடக்க கூட்டுறவு வங்கி, திருவரங்குளம், திருக்கட்டளை, வேப்பங்குடி, பூவரசகுடி, வல்லதிரா கோட்டை, கொத்தகோட்டை உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளில் பொதுமக்கள் நீண்ட வரிசையில் நின்று பொங்கல் பொருட்களை வாங்கிசென்றனர்.

ஆவுடையார்கோவில்

ஆவுடையார்கோவில் அமுதம் அங்காடியில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்பட்டது. இதனை ஆவுடையர் கோவில் தாசில்தார் சிவகுமார், துனை தாசில்தார் ஜபருல்லா மற்றும் வருவாய் ஆய்வாளர், கிராம நிர்வாக அலுவலர் மற்றும் கிராம உதவியாளர்கள் கலந்து கொண்டு பொங்கல் பொருட்களை வழங்கினர்.

அறந்தாங்கி, பொன்னமராவதி

அறந்தாங்கி அருகே நர்பவளகுடி ஊராட்சியில் குடும்ப அட்டை தாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழச்சிக்கு வடக்கு ஒன்றிய செயலாளரும், நிலவளவங்கி தலைவருமான வேலாயுதம் தலைமை தாங்கினார். ெதாடர்ந்து பொங்கல் தொகுப்பு வழங்கப்பட்டது. இதில் கூட்டுறவு சங்க தலைவர் ராஜேந்திரன், அ.தி.மு.க. ஊராட்சி ஒன்றிய கூட்டமைப்பு தலைவர் சக்திவேல் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

பொன்னமராவதி தாலுகாவில் உள்ள ரேஷன் கடைகளில் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் விழா நடைபெற்றது. இதில் வட்டாட்சியர் திருநாவுக்கரசு, தனி வருவாய் ஆய்வாளர் பாண்டி மற்றும் வட்ட பொறியாளர் கார்த்திக் ஆகியோர் குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் சிறப்பு தொகுப்பினை வழங்கி ஆய்வு செய்தனர். பொன்னமராவதி ஒன்றிய பகுதிகளில் உள்ள அனைத்து ரேஷன் கடைகளிலும் புதுக்கோட்டை மாவட்ட கூட்டுறவு ஒன்றிய தலைவர் பழனியாண்டி ெபாங்கல் தொகுப்பு வழங்கினார்.

விராலிமலையில் ஆறுமுகம் எம்.எல்.ஏ., மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் சின்னத்தம்பி, மாவட்ட பால்வளத்தலைவர் பழனியாண்டி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

ஆதனக்கோட்டை, கறம்பக்குடி

ஆதனக்கோட்டை அருகே உள்ள கணபதிபுரம், தொண்டைமான் ஊரணி, வாராப்பூர், அரியூர், மணவிடுதி, சோத்துப்பாளை வளவம்பட்டி உள்ளிட்ட பல்வேறு ஊராட்சிகளிலும் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்பட்டது. முள்ளூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் பொங்கல் பரிசான ரூ.2,500 மற்றும் கரும்பு, பச்சரிசி, சர்க்கரை உள்ளிட்ட பொங்கல் தொகுப்பினையும் மாவட்ட ஊராட்சி குழு தலைவர் ஜெயலட்சுமி குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்கி தொடங்கி வைத்தார்.

கறம்பக்குடி அருகே உள்ள மழையூர் கிராமத்தில் உள்ள ரேஷன்கடையில் பொதுமக்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு மற்றும் ரூ.2,500-ஐ அமைச்சர் விஜயபாஸ்கர் வழங்கினார். இதில் ஆறுமுகம் எம்.எல்.ஏ. மற்றும் கூட்டுறவு சங்க தலைவர்கள், அதிகாரிகள், உள்ளாட்சி பிரதிநிதிகள் கலந்துகொண்டனர்.

அரிமளம்

அரிமளம் ஊராட்சி ஒன்றியம், கடியாபட்டி ஊராட்சியில் பொங்கல் பரிசு தொகுப்பு குடும்ப அட்டைதாரர்களுக்கு ஊராட்சி மன்ற தலைவர் உமாமகேஸ்வரிசோமசுந்தரம் வழங்கினார். இந்நிகழ்ச்சியில் ஒன்றிய கவுன்சிலர் பெரியசாமி, கூட்டுறவு சங்கத் தலைவர் பொன்னையா உள்பட பலர் கலந்து கொண்டனர்.

செங்கீரை ஊராட்சியில் பொங்கல் பரிசுத் தொகுப்பை ஊராட்சி மன்ற தலைவர் அழகுகருப்பையா வழங்கினார். நிகழ்ச்சியில் ஊராட்சி துணைத்தலைவர், ஊராட்சி மன்ற உறுப்பினர்கள், பணியாளர்கள், பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர்.

காரையூர்

காரையூர் பகுதிகளில் உள்ள ரேஷன் கடைகளில் குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பினை பொன்னமராவதி வட்டாட்சியர் திருநாவுக்கரசு, தனி வருவாய் ஆய்வாளர் பாண்டி மற்றும் வட்ட பொறியாளர் கார்த்திக் ஆகியோர் வழங்கினர்.

மேலத்தானிய ரேஷன் கடையில் கூட்டுறவு சங்க தலைவர் பழனிச்சாமி பொங்கல் தொகுப்பை வழங்கினார். இதில் மேலத்தானியம் கூட்டுறவு சங்க செயலாளர் சுப்பிரமணியன், மேலத்தானியம் ஊராட்சி மன்றத் தலைவர் முருகேசன் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.

அன்னவாசல்

இலுப்பூர், சத்திரம், அன்னவாசல், பகுதிகளில் மாவட்ட கலெக்டர் உமாமகேஸ்வரி தலைமையில், அமைச்சர் விஜயபாஸ்கர் பொதுமக்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பை வழங்கினார். இதில் வருவாய் கோட்டாட்சியர் டெய்சிகுமார், ஒன்றியக்குழு தலைவர் ராமசாமி, ரவிக்குமார் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். இதேபோன்று அன்னவாசல் பேரூராட்சி பகுதிகள், முக்கண்ணாமலைப்பட்டி, அம்மாசத்திரம் உள்பட அன்னவாசல் சுற்றுவட்டார பகுதிகள் முழுவதும் நேற்று பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்பட்டன.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments