பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றவரைக் கொலை செய்த இளம்பெண்; விடுதலை செய்த திருவள்ளூர் எஸ்.பி.: குவியும் பாராட்டு




பலாத்காரத்தில் இருந்து தற்காத்துக் கொள்ள இளைஞரைக் கொலை செய்த இளம்பெண்ணை திருவள்ளூர் காவல்துறை எஸ்.பி. அரவிந்தன் விடுதலை செய்தார். அவருக்குச் சமூக வலைதளங்களில் பாராட்டுகள் குவிந்து வருகின்றன.

திருவள்ளூர் மாவட்டம், சோழவரம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கிராமத்தில் தனது பெரியம்மா குடும்பத்துடன் வசிக்கும் 19 வயது இளம்பெண் கடந்த 2-ம் தேதி வெளியில் சென்று விட்டு இரவு 8 மணி அளவில் வீட்டுக்குத் திரும்பினார். அப்போது அஜித்குமார் (24) என்பவரால் கத்தி முனையில் பக்கத்தில் உள்ள தனியிடத்துக்கு வலுக்கட்டாயமாக இழுத்துச் செல்லப்பட்டார்.



கழுத்தில் கத்தியைப் பதித்து இழுத்துச் சென்ற நபர் வேறு யாருமல்ல. அவரது பெரியம்மா மகன்தான். தன்னை விட்டுவிடும்படி இளம்பெண் கெஞ்ச, மது போதையில் இருந்த நபர் அவரைப் பலாத்காரம் செய்ய முயல, ஆவேசத்துடன் அவரைத் தள்ளி விட்டுள்ளார் இளம்பெண். தள்ளிப்போய் மரத்தில் மோதி விழுந்தவன் கத்தி எகிறி கீழே விழுந்துள்ளது. கத்தியை எடுத்த இளம்பெண் தன்னை மிரட்டிய நபரைக் கத்தியால் குத்தியுள்ளார். அந்த நபர் ரத்த வெள்ளத்தில் கீழே விழுந்தவுடன் கத்தியுடன் சோழவரம் காவல் நிலையம் வந்து நடந்ததைக் கூறி, சரணடைந்தார்.



உடனடியாக சம்பவ இடத்திற்குச் சென்ற போலீஸார் அஜித்குமாரை சோதித்துப் பார்த்தபோது அவர் இறந்துபோனது தெரியவந்தது. அவர் உடலைப் பிரேதப் பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து பொன்னேரி டிஎஸ்பி கல்பனா தத் அந்த இளம்பெண்ணிடம் விசாரணை நடத்தினார்.

விசாரணையில் கொலை செய்யப்பட்ட அஜித்குமார் மீது திருட்டு வழக்குகள் பதிவாகியுள்ளன. குடித்துவிட்டு ஊருக்குள் வம்பிழுப்பதை வழக்கமாக வைத்துள்ளார். இதனால் இவரது மனைவி, குழந்தைகளுடன் சில மாதங்களுக்கு முன்பு பிரிந்து சென்றுள்ளார். இந்நிலையில் வீட்டிலிருந்த இளம்பெண் மீது ஆசைப்பட்டு கத்திமுனையில் அவரைப் பலாத்காரம் செய்ய முயன்றது தெரியவந்தது. இளம்பெண் தன்னைத் தற்காத்துக் கொள்ளவே கொலையைச் செய்தது விசாரணையில் தெரியவந்தது.

இதுகுறித்து மாவட்ட எஸ்.பி.க்கு பொன்னேரி டிஎஸ்பி கல்பனா தத் தகவல் அளித்தார். பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றவரை இளம்பெண் தற்காப்புக்காகக் கொலை செய்தார் என்ற ஐபிசி பிரிவு 100-ன் கீழ் விடுதலை செய்து திருவள்ளூர் எஸ்.பி. அரவிந்தன் உத்தரவிட்டுள்ளார். இதையடுத்து அவரைச் சமூக வலைதளங்களில் அனைவரும் பாராட்டுகின்றனர். பெண்கள் நல ஆர்வலர்கள் மத்தியிலும் அவருக்குப் பாராட்டுகள் குவிந்து வருகின்றன.

பொதுவாக காவல் உயர் அதிகாரிகள் இதுபோன்ற விவகாரங்களில் பெரிதாகத் தலையிட மாட்டார்கள், 'கைது செய்து ரிமாண்ட் பண்ணுங்கள். நீதிமன்றம் பார்த்துக் கொள்ளட்டும்' என்பார்கள். ஆனால் தற்காப்புக்காகக் கொலை செய்த பெண்ணின் பக்கம் இருக்கும் நியாயத்தையும், அவர் சரணடைந்ததையும் கருத்தில் கொண்டு அதற்கென உள்ள பிரிவின் கீழ் விடுதலை செய்திருப்பதை அனைவரும் பாராட்டி வருகின்றனர்.

இதுகுறித்து பேட்டி அளித்துள்ள காவல்துறை எஸ்.பி. அரவிந்தன், “விசாரணையில் அஜித் என்கிற நபர் குடிபோதையில் அந்தப் பெண்ணைப் பாலியல் வன்கொடுமை செய்த முயன்றதாகத் தெரிகிறது. அவர் செய்த செயலுக்கு அவரிடமிருந்து தப்பிக்க அவரது கத்தியைப் பிடுங்கிக் கொலை செய்துள்ளார்.

அந்தப் பெண்ணின் மீது 302-வது பிரிவின் கீழ் வழக்குப் பதிவு செய்திருந்தாலும், சூழ்நிலை கருதி அவர் செய்த செயலை ஆய்வு செய்து அவர் தற்காப்புக்காக இந்தக் கொலையைச் செய்தார் என்கிற அடிப்படையில் பிரிவைத் திருத்தி ஐபிசி 100-ன் கீழ் அவரை விடுவித்துள்ளோம். அவரை விடுவித்தது குறித்த அறிக்கையை நீதிமன்றத்தில் முறைப்படி தாக்கல் செய்வோம்” எனத் தெரிவித்துள்ளார்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments