அறந்தாங்கி அருகே ஏரி உபரி நீர் திறப்பால் 50 ஏக்கர் சம்பா மூழ்கியது : குடியிருப்புகளையும் தண்ணீர் சூழ்ந்ததால் மக்கள் அவதி
புதுக்கோட்டை மாவட்டம் மணமேல்குடி தாலுகாவில் கானாடு ஏரி உள்ளது. இந்த ஏரிக்கு மழைநீர் மட்டும் நீராதாரம் ஆகும். இப்பகுதியில் கடந்த சில வாரங்களாக தொடர்ந்து மழை பெய்து வருவதால், கானாடு ஏரி முழு கொள்ளளவை எட்டியது.
உபரிநீர் போக்கி வழியாக வெளியேறும் நிலை ஏற்பட்டது. இதனால் தண்ணீர் வீணாகாமல் இருக்க அப்பகுதி விவசாயிகள், உபநீர் போக்கி (சறுக்கை)யின் மேல் மணல் மூட்டைகளை அடுக்கி, ஏரியின் கொள்ளளவை விட கூடுதலாக தண்ணீரை தேக்கியிருந்தனர். இவ்வாறு தண்ணீர் தேங்கியதால், ஆவுடையார்கோவில் வட்டத்தில் உள்ள கண்ணாக்கூர் பகுதியில் உள்ள வயல்களுக்குள் தண்ணீர் புகுந்தது. 

இதனால் அப்பகுதி விவசாயிகள் பாதிக்கப்பட்டனர். இதைத் தொடர்ந்து கண்ணாக்கூர் விவசாயிகள் பொதுப்பணித்துறை தெற்கு வெள்ளாறு வடிநிலக் கோட்ட அதிகாரிகளிடம், கானாடு ஏரியின் உபரிநீரை வெளியேற்ற நடவடிக்கை எடுக்குமாறு கோரி வந்தனர். பொதுப்பணித்துறை அதிகாரிகள் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. நேற்று காலை அறந்தாங்கி பொதுப்பணித்துறை தெற்கு வெள்ளாறு வடிநிலக் கோட்ட உதவி செயற்பொறியாளர் அலுவலகம் முன் கானாடு ஏரியின் உபரி நீரை வெளியேற்ற வேண்டும் என கோரி, காத்திருப்பு போராட்டத்தில் மக்கள் ஈடுபட்டனர்.


இதனால் பொதுப்பணித்துறை அதிகாரிகள் நேற்று கண்ணாக்கூர் பகுதி வழியாகச் சென்று, கானாடு ஏரியின் உபரிநீர் போக்கியில் வைக்கப்பட்டிருந்த மணல் மூட்டைகளை அப்புறப்படுத்தி, அவசர கால நீர்ப்போக்கியை திறந்துவிட்டனர். முன் அறிவிப்பின்றி தண்ணீர் திறக்கப்பட்டதால் உபரிநீர் போக்கி மற்றும் அவசரகால நீர்ப்போக்கி வழியாக பல நூறு கனஅடி தண்ணீர் ஆர்ப்பரித்து வெளியேறியது. அதிகளவு வெளியேறிய தண்ணீர் கானாடு அருகே உள்ள தாழனூர் ஆதிதிராவிடர் குடியிருப்புக்கு செல்லும் பாலத்தை மூழ்கடித்து சென்றதுடன், அப்பகுதி வீடுகள், சம்பா வயல்களில் புகுந்தது. சுமார் 50 ஏக்கர் சம்பா பயிர்கள் மூழ்கின.

இதனால் அவதிக்குள்ளான அப்பகுதி மக்கள், விவசாயிகள் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர்.இதையடுத்து மணமேல்குடி தாசில்தார் ஜமுனா, ஆவுடையார்கோவில் தாசில்தார் சிவக்குமார் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்றனர். அதற்குள் ஆதிதிராவிடர் குடியிருப்பை சூழ்ந்த தண்ணீரின் அளவும் அதிகரித்தது. இதைத் தொடர்ந்து கானாடு கிராமத்தினர் அவசர கால உபரிநீர் போக்கியில் இருந்து தண்ணீர் வெளியேறாமல் அடைத்தனர். தற்போது குடியிருப்பு பகுதிகளில் படிப்படியாக தண்ணீர் குறைந்து வருகிறது.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments