இலங்கை கடற்படை ரோந்துக் கப்பல் மோதி கோட்டைப்பட்டினம் துறைமுகத்தில் இருந்து சென்ற விசைப்படகு மூழ்கியது: ராமநாதபுரம் மீனவர்கள் 4 பேர் மாயம்கோட்டைப்பட்டினம் அருகே நடுக்கடலில் இலங்கை கடற்படை கப்பல் மோதியதில் விசைப்படகு மூழ்கியது. அதில் இருந்த 4 மீனவர்கள் மாயமானார்கள். இதனிடையே தேடும் பணியை துரிதப்படுத்த கோரி அப்பகுதியினர் மறியலில் ஈடுபட்டனர்.

புதுக்கோட்டை மாவட்டம் கோட்டைப்பட்டினம் பகுதியில் இருந்து ராமேசுவரம் பகுதியை சேர்ந்த மெசியா (வயது 30), நாகராஜ் (52), சாம் (28), செந்தில்குமார் (32) ஆகிய 4 மீனவர்கள் கடலுக்குள் மீன்பிடிக்க சென்றனர்.

இவர்கள் நேற்று முன்தினம் இரவு நடுக்கடலில் மீன்பிடித்தபோது, இலங்கை கடற்படையினரின் ரோந்து கப்பல் மீனவர்களின் படகின் மீது மோதி விட்டு அங்கிருந்து சென்று விட்டதாக கூறப்படுகிறது. இதனால் படகின் பின்புறம் சேதம் அடைந்து தண்ணீர் புகுந்தது.

இதனை அறிந்த மீனவர்கள் இது குறித்து வாக்கி டாக்கி மூலம் மற்ற மீனவர்களுக்கு தகவல் கொடுத்துள்ளனர். ஆனால் இலங்கை கடற்படையினர் இருந்ததால் அப்பகுதிக்குள் மற்ற மீனவர்கள் செல்லமுடியாத சூழல் ஏற்பட்டது.

இதனிடையே அந்த மீனவர்களையும், விசைப்படகையும் காணவில்லை. அந்த படகு கடலில் மூழ்கியதாக சந்தேகிக்கப்படுகிறது. அதில் சென்ற மீனவர்களின் கதி என்ன? என்ற விவரம் தெரியவில்லை. மற்ற மீனவர்கள் அளித்த தகவலின்பேரில் 3 விசைப்படகில் 12 மீனவர்கள் காணாமல் போன மீனவர்களை தேடி கடலுக்குள் சென்றனர். ஆனால் தேடும் பணியில் தொய்வு ஏற்பட்டது.

எனவே மீனவர்களை தேடும் பணியை துரிதப்படுத்த வேண்டும் என்று கூறி மீனவர்கள் கோட்டைப்பட்டினம் கிழக்கு கடற்கரை சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அதிகாரிகளின் பேச்சுவார்த்தைக்கு பின்னர் அவர்கள் போராட்டத்தை கைவிட்டனர். இதற்கிடையே மீனவர்களை கண்டுபிடிக்கும் வரை மீனவர்கள் கடலுக்குள் செல்லமாட்டார்கள் என்று மீனவ சங்கத்தினர் அறிவித்துள்ளனர்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments