ராமநாதபுரத்தில் விமான நிலையம் அமைக்க ரூ.36.72 கோடி ஒதுக்கீடு: மத்திய விமானப் போக்குவரத்து துறை அமைச்சர் ஹர்தீப் சிங் புரி தகவல்
ராமநாதபுரத்தில் விமான நிலையம் அமைக்க ரூ.36.72 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக மாநிலங்களவையில் மத்திய விமானப் போக்குவரத்து துறை அமைச்சர் ஹர்தீப் சிங் புரி தெரிவித்துள்ளார்.

ஆன்மிக பக்தர்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகளின் வசதிக்காக 50 பேர் வரையிலும் பயணிக்கக்கூடிய சிறிய ரக விமானங்கள், 10 பேர் வரையிலும் பயணம் செல்லக்கூடிய ஹெலிகாப்டர்களுக்கான சிறிய விமானநிலையங்கள் மற்றும் ஹெலிபேட்களை நாடு முழுவதும் அமைக்கக் கூடிய பல்வேறு இடங்களை மத்திய சிவில் விமானப் போக்குவரத்துத்துறை தேர்ந்தெடுத்துள்ளது.

இதில் தமிழகத்தில் ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள ராமேசுவரமும் அடக்கம்.

இந்தியாவின் பல்வேறு இடங்களிலிருந்து ராமேசுவரத்திற்கு ஆண்டிற்கு சுமார் 2 கோடிக்கும் மேற்பட்ட ஆன்மிக பக்தர்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகள் வந்து செல்கின்றனர்.

அவர்கள் பெரும்பாலும் மதுரை மற்றும் திருச்சி மார்க்கமாக பேருந்து மற்றும் ரயில் வருகின்றனர். ராமேசுவரத்திற்கு விமானம் மூலம் யாத்திரை மற்றும் சுற்றுலா வருபவர்கள் விமானத்தில் மதுரை வரை வந்து பின்னர் 170 கீ.மீ தொலைவை 4 மணிநேரம் கார் அல்லது இதர வாகனங்களில் பயணம் செய்து வரவேண்டியுள்ளது.

இதனால் பெருமளவில் நேரவிரையமும் ஆகிறது. இதனால் இதனால் ராமநாதபுரம் பகுதியில் விமான நிலையம் அமைக்க வேண்டும் என்பது ராமேசுவரம் வரும் சுற்றுலாப் பயணிகள் மற்றும் பக்தர்களின் வேண்டுகோளாக இருந்து வந்தது.

இந்நிலையில் மாநிலங்களவையில் திமுக உறுப்பினர் வில்சன் கேட்ட கேள்விக்கு மத்திய விமானப் போக்குவரத்து துறை அமைச்சர் ஹர்தீப் சிங் புரி இன்று (பிப்ரவரி 3 புதன்கிழமை) எழுத்துப்பூர்வமாக அளித்த விவரம் வருமாறு,

உதான் திட்டத்தின் கீழ் தமிழ்நாட்டில் ராமநாதபுரம், தஞ்சை, வேலூர், நெய்வேலி ஆகிய நான்கு ஆகிய இடங்களில் விமான நிலையம் அமைக்க நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

இதில் ராமநாதபுரம் விமான நிலையத்திற்கு ரூ. 36.72 கோடியும், தஞ்சை விமான நிலையம் அமைக்க ரூ.50.59 கோடியும், வேலூர் விமான நிலையத்தக்கு ரூ.44 கோடியும், நெய்வேலி விமான நிலையத்திற்கு ரூ.30 கோடியும் ஒதுக்கப்பட்டுள்ளது.

மேலும் சேலம் விமான நிலைய விரிவாக்கத்துக்கு ரூ 35 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. என அமைச்சர் ஹர்தீப் சிங் புரி தெரிவித்துள்ளார்.

ராமேசுவரம் அருகே உச்சிப்புளி கடற்படை விமான தளத்தினை மத்திய சிவில் விமானப் போக்குவரத்துத்துறை விமான நிலையமாக மாற்ற பரீசிலிக்கப்பட்டு வருவதாக தெரிகிறது.


எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments