தேனி: `உங்க அக்கவுண்டல ரூ.49,500 போட்டாச்சு!’- ஏ.டி.எம் மையத்தில் பணம் சுருட்டிய இளம்பெண்




ஏ.டி.எம் மையத்தில் உள்ள பணம் செலுத்தும் இயந்திரத்தில் பணம் செலுத்துவது போல நடித்து, ஜவுளிக்கடை மேலாளரை ஏமாற்றிய இளம்பெண்ணை, தேனி நகர் காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே உள்ள குன்னூர் பகுதியைச் சேர்ந்தவர் நாகராஜ் (வயது 45). தேனி பழைய பேருந்துநிலையம் அருகே உள்ள ஜவுளிக்கடை ஒன்றில் மேலாளராக வேலை பார்த்து வருகிறார். வழக்கமாக, கடையின் வரவு, செலவு கணக்குகளை கையாளும் நாகராஜ், கடந்த ஜனவரி 25ம் தேதி, ரூ.50,000-த்தை எடுத்துக்கொண்டு, தேனி-பெரியகுளம் சாலையில் உள்ள எஸ்.பி.ஐ வங்கிக்குச் சென்றுள்ளார். வங்கியில் மக்கள் கூட்டம் அதிகமாக இருந்ததால், வங்கி வளாகத்தில் இருக்கும், ஏ.டி.எம் மையத்தில் உள்ள பணம் செலுத்தும் இயந்திரத்தில் பணத்தினை செலுத்த திட்டமிட்டுள்ளார்.

அப்போது, அங்கு வந்த இளம்பெண் ஒருவர், நாகராஜுக்கு உதவி செய்வதாகக் கூறியிருக்கிறார். அப்பெண்ணை நம்பி, தன்னிடம் இருந்த ரூ.50,000-த்தை அவரிடம் கொடுக்க, அப்பெண்ணோ, `இந்த இயந்திரத்தில் ரசீது வராது. நான் பணத்தை செலுத்துவிடுகிறேன்’ என கூறி, இயந்திரத்தில் பணத்தை வைத்துள்ளார்.

மொத்த பணத்தில் ரூ500 நோட்டை மட்டும் இயந்திரம் எடுத்துக்கொள்ளாததால், அதனை நாகராஜ் கையில் கொடுத்துவிட்டு, `ரூ49,500 உங்கள் அக்கவுண்டில் போட்டாச்சு’ என கூறியுள்ளார். நாகராஜும் ஜவுளிக்கடைக்கு திரும்பியுள்ளார். பணம் செலுத்தி பல மணி நேரம் ஆன நிலையில், வங்கிக் கணக்கிற்கு பணம் வரவில்லை என்பதை அறிந்த நாகராஜ், வங்கிக்குச் சென்று விசாரிக்க, அவருக்கு அதிர்ச்சி காத்திருந்தது.

வங்கிக்கணக்கில் பணம் வரவு வைக்கப்படவில்லை எனவும், பணம் செலுத்தும் இயந்திரம் மூலம் பணம் எண்ணப்பட்டு இறுதியில் `கேன்சல்’ கொடுக்கப்பட்டது என்றும் வங்கி அதிகாரிகள் கூறியுள்ளனர்.

இது தொடர்பாக, தேனி நகர் காவல்நிலையத்தில் புகார் தெரிவித்தார் நாகராஜ், ஏ.டி.எம் மையத்தில் பொறுத்தப்பட்டிருந்த சி.சி.டி.வி காட்சிகளை ஆய்வு செய்த போலீஸார், ஆண்டிபட்டி அருகே உள்ள கொண்டமநாயக்கன்பட்டியைச் சேர்ந்த ராஜேஷ் கண்ணன் என்பவரது மனைவி மணிமேகலை (வயது 23) என்பவரைக் கைது செய்தனர்.

விசாரணையில், உசிலம்பட்டி மற்றும் விருதுநகர் பகுதிகளில் உள்ள ஏ.டி.எம் மையங்களில் இதே போன்று மோசடி செய்து பணம் சுருட்டியுள்ளதாகவும், அதற்காக கைது செய்யப்பட்டதாகவும் மணிமேகலை கூறியுள்ளார். மேலும் இவர், எங்கெல்லாம் ஏ.டி.எம் மோசடியில் ஈடுபட்டுள்ளார் என்பது குறித்து விசாரிக்க போலீஸார் திட்டமிட்டுள்ளனர்.

கருத்து வேறுபாடு காரணமாக ராஜேஷ் கண்ணனை பிரிந்து தனியாக வாழ்ந்துவரும் மணிமேகலை, இளங்கலை கணினி அறிவியல் பட்டதாரி என்பது குறிப்பிடத்தக்கது. ஏ.டி.எம் மையங்களுக்குச் செல்லும் முதியவர்கள், இது போன்ற பெண்களிடம் உஷாராக இருக்க வேண்டும் என்கின்றனர் காவல்துறையினர்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments