புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் பச்சிளங் குழந்தைக்கு டயாலிசிஸ் சிகிச்சை




புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிறுநீரக கோளாறு ஏற்பட்ட பச்சிளங் குழந்தைக்கு டயாலசிஸ் சிகிச்சை அளிக்கப்பட்டது.

புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரியில் கடந்த மாதம் 16-தேதி வெள்ளனூர் அருகே பூங்குடியைச் சேர்ந்த ராமு மனைவி ரம்யா (27) க்கு 2.7 கிலோ எடையுடன் கூடிய ஆண் குழந்தை பிறந்தது.


குழந்தை பிறந்த 2 நாட்களுக்கு பிறகு ரத்தம் கலந்து வாந்தி, பேதி ஏற்பட்டதோடு, சுவாசக் கோளாறும் ஏற்பட்டதால் தீவிர சிகிச்சை பிரிவுக்கு குழந்தை மாற்றப்பட்டது.

பரிசோதனையில், குழந்தையின் நுரையீரலிலிருந்து ரத்தகசிவு ஏற்பட்டது தெரியவந்தது. இதையடுத்து, குழந்தைக்கு வெண்டிலேட்டர் கருவி மூலம் செயற்கை சுவாசம் வழங்கப்பட்டது.

ரத்தகசிவை சரி செய்ய 5 முறை ரத்த சிவப்பணுக்கள், ரத்த தட்டணுக்கள் மற்றும் பிளாஸ்மா செலுத்தப்பட்டது.

பின்னர்,குழந்தையை பரிசோதித்துப் பார்த்ததில் குழந்தையின் சிறுநீரகம் செயலிழந்து உப்பு சத்து மிக அதிகமாக இருந்தது கண்டறியப்பட்டது.

பின்னர், மருத்துவ கல்லூரியின் முதல்வர் எம்.பூவதி ஆலோசனையின்படி குழந்தையின் வயிற்றில் குழாய் செலுத்தப்பட்டு டயாலசிஸ் சிகிச்சை ஆரம்பிக்கப்பட்டது.

தொடர்ந்து 2 நாட்கள் நடைபெற்ற டயாலசிஸ் சிகிச்சைக்கு பிறகு குழந்தையின் உப்புசத்து மற்றும் சுவாசம் இயல்பு நிலைக்கு திரும்பியது. செயற்கை சுவாசம் படிப்படியாக நீக்கப்பட்டு குழந்தைக்கு தாய்ப்பாலும் கொடுக்கப்பட்டது.

கிருமித் தொற்றுக்கான ஆன்டிபயாடிக் சிகிச்சை வழங்கப்பட்டது. 25 நாட்கள் சிகிச்சையில் குழந்தை உடல் நலம் தேறிய பின்பு இன்று (பிப்.11) வீட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

மிகவும் ஆபத்தான நிலையில் அனுமதிக்கப்பட்ட பச்சிளங்குழந்தையை துரிதமாக செயல்பட்டு காப்பாற்றிய மருத்துவர்களை முதல்வர் பூவதி பாராட்டினார்.

இது குறித்து எம்.பூவதி கூறியபோது, இது போன்ற மிக அரிதாகவே நடக்கும். குழந்தையின் பிரச்சினைகளை கவனித்து, இங்குள்ள பரிசோதனைகளை செய்து குழந்தையை காப்பாற்றி இருப்பது மருத்துவர்கள், செவிலியர்கள் உன்னதமான பணியாகும்.

இத்தகைய செயலெல்லாம் இம்மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் தரமான சிகிச்சைக்கு கிடைத்த அங்கீகாரம். மருத்துவக் குழுவினருக்கு பாராட்டுகள் என்றார்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments