6 முதல் 8-ம் வகுப்பு மாணவர்களுக்கு ‘டேப்’ அமைச்சர் செங்கோட்டையன் தகவல்



  

 
        மத்திய அரசின் உதவியோடு, 6 முதல் 8-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு மடிக்கணினிக்கு அடுத்த நிலையில் உள்ள ‘டேப்’வழங்கப்படும் என பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் தெரிவித்தார்.

ஈரோடு மாவட்டம் கோபியில் அமைச்சர் செங்கோட்டையன் செய்தியாளர்களிடம் கூறியதாவது: அத்திக்கடவு - அவிநாசிதிட்டத்தின் மூலம் பல்வேறு இடங்களில் உள்ள ஏரி, குளங்களை நிரப்ப ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இத்திட்டத்தில் சேர்க்கப்படாத குளங்கள் இணைக்கப்பட்டு, அவற்றுக்கும் நீர் வழங்கப்படும். கடந்த 2017-18 ம் ஆண்டில் பிளஸ் 2 படித்த மாணவர்களுக்கு மடிக்கணினி வழங்கப்படவில்லை. அவர்கள் இப்போது கல்லூரிகளில் படித்து வருகின்றனர். இந்நிலையில் தற்போது, பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 படிக்கும் மாணவர்களுக்கு மடிக்கணினி வழங்கிய பின்னர், அடுத்தகட்டமாக விடுபட்ட மாணவர் களுக்கு வழங்கப்படவுள்ளது.



மத்திய அரசின் உதவியோடு, 6 முதல் 8-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு மடிக்கணினிக்கு அடுத்த நிலையில் உள்ள ‘டேப்’ வழங்கப்படும். 1 முதல் 8-ம் வகுப்பு வரை பள்ளிகள் திறப்பது குறித்து இதுவரை ஆய்வு நடக்கவில்லை. முதல்வருடன் கலந்து பேசி இதுகுறித்து முடிவெடுக்கப்படும்.

தற்போது நடந்து வரும் வகுப்புகளுக்கு விருப்பப்பட்ட மாணவர்கள், பெற்றோர் அனுமதியோடு வரலாம் என நாங்கள் அறிவித்துள்ளோம். அதன்படி, தற்போது பள்ளிக்கு 98.5 சதவீதம் மாணவர்கள் வருகின்றனர்.

சிறப்பாசிரியர்களுக்கு மத்திய அரசு ரூ.5 ஆயிரத்து 500 மட்டுமே சம்பளமாக வழங்குகிறது. தமிழக அரசு இதனை 10 ஆயிரம் ரூபாயாக உயர்த்தி வழங்குகிறது. அவர்கள் வாரத்தில் மூன்று நாட்கள் மட்டும் அரை நாள் பணிபுரிகின்றனர். இம்மாத இறுதிக்குள் ஆசிரியர்கள் காலிப் பணியிடங்கள் குறித்த அறிவிப்பு வெளியாகும்.

இந்த ஆண்டுக்கான நீட் தேர்வு குறித்து மத்திய அரசிடம் இருந்து கடிதம் கிடைத்த பிறகுதான், எப்போது, எப்படி நடத்துவது என்பது முடிவு செய்யப்படும். தலைமை தேர்தல் அதிகாரி தேர்தல் குறித்து ஆய்வு நடத்தி உள்ளார். அதில் எடுக்கப்படும் முடிவுக்கேற்ப 10 மற்றும் பிளஸ் 1 பொதுத்தேர்வு அட்டவணை வெளியிடப்படும் என்றார்.


எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments