கிழக்கு கடற்கரை சாலையில் வாகன வேகத்தை துல்லியமாக கண்காணித்து அபராதம் விதிக்கும் புதிய தொழில்நுட்பம்




சென்னை அக்கரை முதல் மாமல்லபுரம் வரை உள்ள கிழக்கு கடற்கரை சாலையில் நாள்தோறும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் புதுச்சேரிக்கும், தென் மாவட்டங்களுக்கும் செல்கின்றன. அதேபோல் பல்வேறு மாநிலங்களில் இருந்தும், தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் தினமும் நூற்றுக்கணக்கான சுற்றுலா வாகனங்களும் கிழக்கு கடற்கரை சாலை வழியாக மாமல்லபுரம் வருகின்றன.


இந்த நிலையில் சாலையில் கார், வேன், பஸ், மோட்டார் சைக்கிள் போன்ற வாகனங்களில் பயணிப்பவர்கள் போக்குவரத்து விதிமுறைகளை பின்பற்றாமல் அதிவேகத்தில் செல்லும் போது, அதிகளவில் உயிரிழப்புகள் ஏற்பட்ட வண்ணம் உள்ளன.

எனவே இச்சாலையில் பயணிக்கும் வாகனங்களின் வேகத்தை கணக்கிட்டு, அதன் வேகத்தை கட்டுப்படுத்தும் வகையில் எச்சரிக்கும் எலக்ட்ரானிக் பலகையுடன் கூடிய ரேடார் கருவி மற்றும் நவீன கேமரா உள்ளிட்டவைகளை பொருத்த சாலை போக்குவரத்து நிறுவனம் முடிவு செய்தது.

இதையடுத்து தற்போது சென்னை அக்கரை முதல் மாமல்லபுரம் வரை கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள தடுப்பு சுவரில் 25-க்கும் மேற்பட்ட இடங்களில் எலக்ட்ரானிக் பலகையுடன் கூடிய ரேடார் கருவி மற்றும் நவீன கேமரா கிரேன் உதவியுடன் பொருத்தும் பணி நடைபெற்று வருகிறது.

நவீன கேமரா

இந்த நவீன கேமரா 300 மீட்டர் தூரத்தில் வாகனங்கள் வரும்போது அதன் வேகத்தை துல்லியமாக அறிந்து படம் மற்றும் வீடியோ காட்சியுடன் உத்தண்டியில் கம்ப்யூட்டர் மூலம் இணைக்கப்பட்டுள்ள கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவிக்கும்.

பின்னர் அதிவேகமாக வரும் அந்த வாகனங்களின் நம்பர் பலகையில் பதிவு நம்பரை அறிந்து சம்மந்தப்பட்ட வாகனங்களுக்கு போக்குவரத்து போலீஸ் மூலம் எச்சரிக்கை விடப்படும் என்றும், தொடர்ந்து அந்த வாகனங்கள் வேக கட்டுப்பாட்டு விதிமுறைகளை பின்பற்றாமல் வந்தால் அபராதம் விதிக்கப்பட உள்ளதாகவும் கூறப்படுகிறது.

மேலும் 1 கிலோ மீட்டர் தொலைவிற்கு ஒரு எலக்ட்ரானிக் பலகை என பொருத்தப்பட்டு அதில் வாகனங்கள் கடக்கும்போது அதன் வேகம் கேமரா பதிவு காட்சி மூலம் அந்த எலக்ட்ரானிக் பலகையில் காட்டும் வகையில் தயார் செய்யப்பட்டுள்ளது.

இன்னும் சில தினங்களில் நவீன கேமரா வசதி மூலம் வேக கட்டுப்பாட்டினை அறிந்து அபராதம் விதிக்கும் புதிய தொழில்நுட்பம் விரைவில் அமலுக்கு கொண்டு வரப்பட உள்ளதாக அதிகாரிகள் சார்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments