புதுக்கோட்டையில் கோரிக்கைகளை வலியுறுத்தி கொளுத்தும் வெயிலில் அங்கன்வாடி ஊழியர்கள் காத்திருப்பு போராட்டம்



புதுக்கோட்டையில் கோரிக்கைகளை வலியுறுத்தி கொளுத்தும் வெயிலில் அங்கன்வாடி ஊழியர்கள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அங்கன்வாடி ஊழியர்கள் மற்றும் உதவியாளர்களை அரசு ஊழியராக்க வேண்டும். முறையான காலமுறை ஊதியம் வழங்க வேண்டும். அங்கன்வாடி ஊழியர்களை 7-வது ஊதிய குழுவில் அரசு ஊழியராக்குவேன் என அறிவித்ததை நிறைவேற்ற வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைளை வலியுறுத்தி புதுக்கோட்டையில் கலெக்டர் அலுவலகம் அருகே அங்கன்வாடி ஊழியர்கள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். 

இந்த போராட்டத்திற்கு மாவட்டத் தலைவர் சந்திரா தலைமை தாங்கினார். போராட்டத்தை தொடங்கி வைத்து சி.ஐ.டி.யு. மாவட்டத் தலைவர் முகமதலிஜின்னா பேசினார். மாநில பொருளாளர் தேவமணி கோரிக்கைகள் குறித்து பேசினார்.

காத்திருப்பு போராட்டத்திற்கு சாமியானா பந்தல் போட போலீசார் அனுமதி மறுத்தனர். இதனால் அங்கன்வாடி ஊழியர்கள் தரையில் கொளுத்தும் வெயிலில் அமர்ந்திருந்தனர். பலர் சேலையால் தலையை மூடியபடி அமர்ந்து காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். 

சிலர் வெயிலின் தாக்கம் தாங்க முடியாமல் குடையை பிடித்தப்படியும், துண்டால் தலையை மூடியபடியும், துணிப்பையை தலையில் வைத்தும் அமர்ந்திருந்தது பரிதாபமாக இருந்தது. ஒரு சிலர் மரத்தடியில் அமர்ந்திருந்தனர். கோரிக்கை நிறைவேறும் வரை போராட்டம் தொடரும் என சங்க நிர்வாகிகள் தெரிவித்தனர்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments