6 முதல் 8-ம் வகுப்பு வரை 3 லட்சம் மாணவர்களுக்கு ‘டேப்லெட்’- அமைச்சர் செங்கோட்டையன் தகவல்..6-ம் வகுப்பு முதல் 8-ம் வகுப்பு வரை படிக்கும் 3 லட்சம் மாணவர்களுக்கு விரைவில் ‘டேப்லெட்’ வழங்கப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் கூறினார்.

திருப்பூர் அருகே முதலிபாளையம் வீட்டு வசதி வாரிய பிரிவில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி நடுநிலைப்பள்ளியாக தரம் உயர்த்தப்பட்டுள்ளது. இதுபோல் மங்கலம் அரசு நடுநிலைப்பள்ளி உயர்நிலை பள்ளியாகவும், பெருமாநல்லூர் அரசு பெண்கள் உயர்நிலைப்பள்ளி மேல்நிலைப்பள்ளியாகவும் தரம் உயர்வு செய்யப்பட்டுள்ளது.

தரம் உயர்வு செய்யப்பட்ட 3 பள்ளிகளின் தொடக்க நிகழ்ச்சி அந்த பள்ளிகளில் நேற்று நடைபெற்றது. நிகழ்ச்சியில் பள்ளி கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் பேசியதாவது:-

பொருளாதாரத்தை சீர் செய்வதற்கு கல்வியால் மட்டுமே முடியும். எம்.ஜி.ஆர். சத்துணவு வழங்கி ஏழை குழந்தைகளை பள்ளிக்கு அழைத்து வந்து கல்வி கற்க வைத்தார். காமராஜரும் அதைத்தான் செய்தார். முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதாவும் மாணவர்களுக்கு 14 வகை பொருட்களை வழங்கி ஊக்குவித்தார்.

இந்தியாவில் எந்த மாநிலத்திலும் இல்லாத வகையில் மாணவர்களுக்கு மடிக்கணினி வழங்கியவர் ஜெயலலிதா. அதைத் தொடர்ந்து முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பள்ளி மாணவர்களுக்கு இதுவரை 52 லட்சத்து 17 ஆயிரம் மடிக்கணினிகள் வழங்கி உள்ளார். தமிழகத்தில் தான் இவ்வளவு மடிக்கணினிகள் வழங்கப்பட்டுள்ளது. சிறந்த கல்வியைப்பெறுவதற்கு மடிக்கணினி, மாணவர்களுக்கு உறுதுணையாக இருந்து வருகிறது.

52 லட்சத்து 12 ஆயிரம் மாணவர்களுக்கு விலையில்லா சைக்கிள் வழங்கப்பட்டுள்ளது. 1,029 பள்ளிகளில் தகவல் தொழில்நுட்பம் நிறைந்த ஐடெக் லேப் அமைக்கப்பட்டுள்ளது. வருகிற மார்ச் மாத இறுதிக்குள் அனைத்து பள்ளிகளிலும் ஸ்மார்ட் போர்டுகள் அமைக்கப்படும். அதுபோல் 6-ம் வகுப்பு முதல் 8-ம் வகுப்பு வரை படிக்கும் 3 லட்சம் மாணவர்களுக்கு கையடக்க கணினி (டேப்லெட்) விரைவில் வழங்கப்படும்.

கொரோனா வைரஸ் பரவல் காரணமாக பள்ளிக்கு வர முடியாத சூழ்நிலையில் கல்விக்காக ஒரு தொலைக்காட்சி சேனலை உருவாக்கி கல்வி கற்றுக்கொடுக்கப்படுகிறது. இதனால் ஏழை, எளிய மாணவர்கள் கல்வி கற்கும் வசதி ஏற்பட்டுள்ளது. 7.5 சதவீத இட ஒதுக்கீட்டின் படி அரசுப்பள்ளி மாணவர்கள் 435 பேர் மருத்துவ படிப்பு படிக்கிறார்கள். அவர்களுக்கான கல்வி கட்டணம், விடுதி கட்டணத்தை அரசு ஏற்றுக் கொண்டுள்ளது. சிறுபான்மை மக்களுக்கு உதவிக்கரம் நீட்டும் அரசாக அ.தி.மு.க. அரசு உள்ளது. இறைவனிடம் கையேந்துங்கள் அவன் இல்லையென்று சொல்லுவதில்லை என்பார்கள். ஆனால் கையேந்தாமல் வழங்கும் அரசு அ.தி.மு.க. அரசு. சிறுபான்மை மக்களை பாதுகாக்கும், திட்டங்களைத்தீட்டும் அரசு அ.தி.மு.க. அரசு.

இவர் அவர் பேசினார்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments