பொதுத்துறை நிறுவனங்களை கார்ப்பரேட்டுகளுக்கு விற்பதைத் தவிர இந்த அரசிடம் உள்ள வேறு திட்டம் என்ன? - மக்களவையில் கே.நவாஸ்கனி கேள்வி





பொதுத்துறை நிறுவனங்களை கார்ப்பரேட்டுகளுக்கு விற்பதைத் தவிர இந்த அரசிடம் வேறு என்ன திட்டம் உள்ளது? என மக்களவையில் கேள்வி எழுப்பப்பட்டது. இதை இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் மாநிலத் துணைத்தலைவரான எம்.பி. நவாஸ்கனி எழுப்பினார்.

இதுகுறித்து பட்ஜெட் விவாதத்தில் நேற்று கலந்துகொண்ட ராமநாதபுரம் தொகுதி எம்.பி.யான கே.நவாஸ்கனி ஆற்றிய உரையில் கூறியதாவது:

"இது கரோனா பேரிடர் தாக்கத்திற்குப் பிறகு தாக்கல் செய்யப்பட்டிருக்கும் முதல் பட்ஜெட். நாட்டு மக்கள் இந்த பட்ஜெட்டில் பல்வேறு எதிர்பார்ப்புகளுடன் காத்துக் கொண்டிருந்தார்கள். ஆனால், அதற்கெல்லாம் பெரும் ஏமாற்றம் அளிப்பதாக இந்த பட்ஜெட் அமைந்துள்ளதை எண்ணி வருந்துகின்றேன்.

இதுவரை இருந்த பொதுத்துறை நிறுவனங்களை கார்ப்பரேட்டுகளுக்கு விற்பனை செய்வதை தவிர இந்த அரசு வேறு என்ன திட்டத்தை வைத்திருக்கின்றது? அடித்தட்டு மக்களின் வாழ்வாதாரத்திற்காக இந்த அரசு என்ன திட்டத்தை வைத்து இருக்கிறது.

அடித்தட்டு மக்கள் தினமும் பயன்படுத்தும் பெட்ரோல், டீசல், கேஸ் சிலிண்டர் பெரும் விலை உயர்வைக் கண்டிருக்கிறது.

அதனால் மக்களின் அத்தியாவசியப் பொருட்களின் விலையும் உயரும் அபாயத்தில் இருக்கிறது. இதற்கு இந்த அரசு என்ன தீர்வு வைத்திருக்கிறது. என்ன திட்டம் உங்களிடத்தில் உள்ளது. அடித்தட்டு மக்களுக்கு வெறும் ஏமாற்றம்தான் மிஞ்சுமோ என்ற அச்சம் எழுகிறது.

இன்றைய சூழலில் சுகாதாரத்துறை மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த துறையாக கருதப்படுகிறது. ஆனால், அதற்கு ஒதுக்கப்பட்டிருக்கும் நிதி என்ன? தற்போது தேர்தலை மனதில் வைத்து தமிழகத்திற்குப் பல்வேறு அறிவிப்புகளை மட்டும் செய்துள்ளது இந்த அரசு.

நம் பிரதமர் தமிழகத்தில் மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனைக்கான அடிக்கல்லை படை பட்டாளத்துடன் வந்து மிக பிரம்மாண்டமாக நாட்டி விட்டுச் சென்றார். நாங்களும் நம்முடைய பகுதியில் எய்ம்ஸ் வந்துவிடும் என்று காத்துக் கொண்டிருக்கின்றோம்.

எங்கே மதுரை எய்ம்ஸ்? இந்த அறிவிப்பு வெறும் அறிவிப்பாகவே இருக்கிறது. நாட்டப்பட்ட அடிக்கல் அடிக்கல்லாகவே இருக்கின்றது.

ஆனால், அதற்குப் பின்பு பல்வேறு மாநிலங்களில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்கும் பணிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. அப்படி என்றால் தமிழர்களான எங்களிடம் மட்டும் ஏன் இந்தப் பாரபட்சம்?

உங்கள் அறிவிப்பின்படி, பிரதமர் அடிக்கல் நாட்டிய திட்டமே இத்தகைய நிலையில் உள்ளது. இப்போது நீங்கள் அறிவித்திருக்கும் அறிவிப்பை மக்கள் எப்படி ஏற்றுக் கொள்வார்கள்?

விவசாயிகள் குறித்து இந்த அரசு எந்த கண்ணோட்டத்தில் உள்ளது என்பதை ஆதங்கத்துடன் இந்த இடத்தில் பதிவு செய்யக் கடமைப்பட்டிருக்கிறேன். இன்று லட்சக்கணக்கான விவசாயிகள் வீதிகளில் நின்று போராடிக் கொண்டிருக்கிறார்கள்.

ஆனால், இந்த அரசு அவர்களைப் பாதிக்க, கூர்மையான ஆணிகளைச் சாலைகளில் அடிப்பதைத் தவிர வேறென்ன செய்திருக்கிறது? அவர்களின் உணர்வுகளைப் புரிந்துகொள்ள இந்த அரசிற்கு நேரமில்லையா?

3 விவசாய மசோதாக்களைத் திரும்பப் பெறக்கோரி நம்நாட்டு விவசாயிகள் போராடிக் கொண்டிருக்கிறார்கள். அதனை ஏன் இந்த அரசு பரிசீலிக்க மறுக்கிறது? உங்களுடைய உதடுகளில் மட்டும் இருக்கும் கருணை மட்டுமே அவர்களைப் பாதுகாத்திடாது பிரதமர் அவர்களே. அவர்களது கோரிக்கையை ஏற்றுக்கொள்ள நீங்கள் முன்வர வேண்டும்.

இந்தக் கரோனா காலத்தில் அரசு 20 லட்சம் கோடி நிதி அறிவித்திருக்கிறது. அந்த நிதி எல்லாம் எங்கே? இதன்மூலம், எந்தெந்தத் துறைகள் அதில் பயனடைந்துள்ளன?

ராமநாதபுரம் மாவட்டத்தில் தற்போது பயிர்கள் விளைந்த நிலையில் மழையின் காரணமாக அறுவடை நேரத்தில் பயிர்கள் வீணாகிவிட்டதால் விவசாயிகள் கடும் பாதிப்பைச் சந்தித்துள்ளார்கள். எனவே, அந்த விவசாயிகளுக்கு நிவாரணம் அளிக்க அரசு முன்வர வேண்டும்.

சமீபத்தில் 4 மீனவர்கள் இலங்கை கடற்படை படகுகள் மோதி உயிரிழந்த சம்பவமும் என்னுடைய தொகுதிக்குட்பட்ட பகுதியில் நடைபெற்றது. இதற்கு ஒரு நிரந்தரத் தீர்வை அரசு காண வேண்டும்.

ஆழ்கடல் மீன்பிடித் தொழிலை ஊக்குவிப்பதன் மூலம் மீனவர்கள் தாக்கப்படுவதைக் கட்டுப்படுத்தலாம். மத்திய, மாநில அரசுகளின் பங்களிப்போடு 80 சதவீதம் மானியமாகவும் 10 சதவிகிதம் வங்கிக் கடனாகவும் வழங்கப்படுகிறது. ஆனால், இது படகின் மதிப்பிற்கு மட்டுமே பொருந்துகிறது.

அது அல்லாமல் மீன்பிடி உபகரணங்கள் 40 லட்சம் மதிப்பீடு வரை வருவதால் இந்தத் திட்டத்தை மீனவர்கள் பயன்படுத்த இயலாத நிலை உள்ளது.

எனவே, மீன்பிடி உபகரணங்களுக்கும் சேர்த்து மொத்தமாக இந்த மானியம் வழங்கப்பட்டால் மீனவர்கள் பெரிதும் பயனடைவார்கள். எனவே இதனைப் பரிசீலனை செய்யுமாறும் கேட்டுக் கொள்கிறேன்.

சிறுபான்மையினர் நலனுக்கு கடந்த ஆண்டு ரூ.5,029 கோடி ஒதுக்கிய அரசு இந்த முறை வெறும் ரூ.4,810 கோடி எனக் குறைத்து ஒதுக்கியுள்ளது. இதில் குறிப்பாக சிறுபான்மையினரின் கல்விக்கான உதவித்தொகை சுமார் ஆறு சதவிகிதம் குறைக்கப்பட்டுள்ளது. இதை உயர்த்தித் தர வேண்டும் என அவைத்தலைவரின் மூலமாகக் கோருகிறேன். நிதி கடந்த 2020-21 ஆம் ஆண்டிற்கான பட்ஜெட்டைவிட தற்போதைய பட்ஜெட்டில் 4.3 சதவீதம் குறைந்துள்ளது.

இது சிறுபான்மையினர் மீது இந்த அரசின் அக்கறையின்மையைக் காட்டுகிறது. கடந்த நிதியாண்டில் ஒதுக்கப்பட்ட நிதியையும் முழுமையாகச் செலவிடாமல் இருப்பது பெரும் வேதனை அளிக்கிறது.

ஏழை எளிய மக்கள் மருத்துவ உதவிக்காக பயன்பெற, PMNRF - எனப்படும் பிரதம மந்திரி தேசிய பேரிடர் நிவாரண நிதி உள்ளது. ஆனால் இதில் ஒதுக்கப்படும் நிதி மருத்துவமனைக்கு வந்து சேர்வதில்லை".

இவ்வாறு நவாஸ்கனி தெரிவித்தார்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments