ஏப்ரல் 1 முதல் 7 வங்கிகளின் காசோலை செல்லாது: வாடிக்கையாளர்கள் கவனத்துக்கு..!




வரும் ஏப்ரல் 1-ம் தேதி முதல் ஏழு பொதுத்துறை வங்கிகளின் காசோலை செல்லாது என அறிவிக்கப்பட்டிருக்கிறது. செக் புத்தகம் மற்றும் வங்கியின் கணக்கு புத்தகம் செல்லாது. பொதுத்துறை வங்கிகள் இணைக்கப்பட்டிருப்பதால் புதிய நடைமுறை அமலுக்கு வர இருக்கிறது. இது தொடர்பாக வங்கி வாடிக்கையாளர்கள் அவசியம் தெரிந்துகொள்ள வேண்டியவை...

விஜயா வங்கி, கார்ப்பரேஷன் வங்கி, ஆந்திரா வங்கி, சிண்டிகேட் வங்கி, ஓரியண்டல் பேங்க் ஆஃப் காமர்ஸ், யுனைடெட் பேங்க் ஆஃப் இந்தியா, அலகாபாத் வங்கி மற்றும் தேனா வங்கி ஆகிய பொதுத்துறை வங்கிகள் இதர முக்கியமான பொதுத்துறை வங்கிகளுடன் இணைக்கப்பட்டன. இதனால், சம்பந்தப்பட்ட வங்கிகளில் கணக்கு வைத்திருப்பவர்களுக்கு சிறு சங்கடம் நேர வாய்ப்பு இருக்கிறது.

ஓரியண்டல் பேங்க் ஆப் காமர்ஸ் மற்றும் யுனைடெட் பேங்க் ஆஃப் இந்தியா ஆகிய இரு வங்கிகள் பஞ்சாப் நேஷனல் வங்கியுடன் இணைக்கப்பட்டிருக்கிறன. அதனால், மேலே குறிப்பிட்ட இரு வங்கிகளில் கணக்கு வைத்துள்ள வாடிக்கையாளர்கள் இனி பஞ்சாப் நேஷனல் வங்கியின் காசோலை மற்றும் கணக்கு புத்தகத்தை பயன்படுத்த வேண்டி இருக்கும்.

தேனா வங்கி மற்றும் விஜயா வங்கி உள்ளிட்ட இரு வங்கிகளும் பேங்க் ஆப் பரோடா வங்கியுடன் இணைக்கப்பட்டிருக்கின்றன. அதனால் மேலே குறிப்பிட்ட இந்த இரு வங்கிகளில் கணக்கு வைத்திருப்பவர்கள் பேங்க் ஆஃப் பரோடா காசோலை புத்தகத்தை பயன்படுத்த வேண்டி இருக்கும்.

அதேபோல கார்ப்பரேஷன் வங்கி மற்றும் ஆந்திரா வங்கி ஆகிய இரு வங்கிகள், யூனியன் பேங்க் ஆப் இந்தியாவுடன் இணைக்கப்பட்டன. இனி இந்த இரு வங்கிகளின் வாடிக்கையாளர்கள் பேங்க் ஆஃப் இந்தியா காசோலையை பயன்படுத்த வேண்டி இருக்கும்.


 
இந்த மாற்றம் தொடர்பாக வங்கிகள் வாடிக்கையாளர்களுக்கு தகவல் கொடுத்திருக்கின்றன. ஒருவேளை உங்களுக்கு தகவல் கிடைக்கவில்லை எனில், சம்பந்தப்பட்ட வங்கியை அணுகி புதிய காசோலை மற்றும் வங்கி கணக்கு புத்தகத்துக்கு விண்ணப்பிக்கலாம்.

சிண்டிகேட் வங்கிக்கு சிறிது அவகாசம்

மற்ற வங்கிகளைபோல சிண்டிகேட் வங்கி மற்றொரு பொதுத்துறை வங்கியான கனரா வங்கியுடன் இணைக்கப்பட்டது. இந்த இணைப்பு கடந்த ஆண்டு ஏப்ரல் 1-ம் தேதி முதல் அமலுக்கு வந்தது. ஆனால், சிண்டிகேட் வங்கி வாடிக்கையாளர்களுக்கு கனரா வங்கி சிறிதளவு கால அவகாசம் வழங்கி இருக்கிறது. வரும் ஜூன் மாதம் 30-ம் தேதி வரை சிண்டிகேட் வங்கியின் கணக்கு புத்தகம் மற்றும் காசோலை செல்லும் என கனரா வங்கி அறிவித்திருக்கிறது.

சிண்டிகேட் வங்கி வாடிக்கையாளர்களுக்கு சிறிது கால அவகாம இருந்தாலும், தற்போதே புதிய காசோலைக்கு விண்ணப்பிக்கும் பட்சத்தில் வங்கி பரிவர்த்தனையை தடையில்லாமல் செய்யலாம்.

இதர மாற்றங்கள்:

சில வங்கிகள் வங்கி கணக்கு எண்ணை மாற்றவில்லை. ஆனால், இதர ஐஎப்எஸ்சி கோடு, எம்ஐசிஆர் கோடு, வங்கி முகவரி உள்ளிட்டவற்றில் மாற்றம் இருக்கும். அதேபோல உங்களது கணக்கில் உங்களது முகவரி, மெயில் ஐடி மொபைல் எண் உள்ளிட்டவை சரியாக பொருந்தி இருக்கிறதா என்பதை உறுதி செய்துகொள்ள வேண்டியது அவசியம். இவை சரியாக இருந்தால் மட்டுமே ஒன் டைம் பாஸ்வோர்ட் நமக்கு கிடைக்கும். மேலும் நாமினியும் சரியாக இருக்கிறதாக என்பதையும் கவனிக்க வேண்டும்.

அதேபோல முதலீடுகள் (மியூச்சுவல் பண்ட் முதலீடு உள்ளிட்ட மாதாந்திர முதலீடுகள்), வீட்டுக்கடன் உள்ளிட்ட இதர கடன்களுக்கான மாத தவணை, காப்பீடு பிரீமியம் உள்ளிட்ட அனைத்து முதலீட்டு திட்டங்களில் கொடுக்கப்பட்டிருக்கும் வங்கி எண்களில் சிக்கல் உருவாகலாம். அதனால், அனைத்து முதலீட்டு திட்டங்களிலும் புதிய வங்கி மற்றும் கணக்கு எண் சரியாக மாற்றப்பட்டிருக்கிறதா என்பதை உறுதி செய்துகொள்வது அவசியம்.

இணைக்கப்படுவதற்கு முன்பாக ஃபிக்ஸட் டெபாசிட் எடுத்திருந்தால், அந்த ஃபிக்ஸட் டெபாசிட்டின் முதிர்வு காலம் வரையிலும் வட்டி விகிதத்தில் எந்த மாற்றத்தையும் செய்ய மாட்டோம் என புதிய வங்கிகள் என அறிவித்திருக்கிறன. ஆனால், முதிர்வு காலத்துக்கு பிறகு, டெபாசிட்டை புதுப்பிக்கும் பட்சத்தில் அப்போதைய சந்தை நிலவரத்துக்கு ஏற்பவே வட்டி வழங்கப்படும். அதேபோல பழைய ஏடிஎம் கார்டுகளை எக்ஸ்பையரி காலம் வரை பயன்படுத்துவதற்கு சில வங்கிகள் அனுமதிக்கின்றன.

அதேபோல இணையதள பரிவர்த்தனைக்கும் பழைய வங்கியின் இணையதளம் மற்றும் செயலியை பயன்படுத்த முடியாது.

மேலே குறிப்பிடப்பட்டுள்ள வங்கியின் வாடிக்கையாளர்கள், கிட்டத்தட்ட புதிய கணக்கு தொடங்குவது போல அனைத்து பணிகளையும் செய்ய வேண்டி இருக்கும். ஆனால் வேறு வழியில்லை. தேவையான அனைத்து பணிகளையும் இப்போதே செய்துவிட்டால் எந்த பிரச்சினையும் இல்லை. அலட்சியமாக இருந்தால், தேவைப்படும் சமயத்தில் வங்கி பரிவர்த்தனை செய்ய முடியாது. அப்போது கூடுதல் காலமும் மன உளைச்சலும் ஏற்படும். ஒரு முறை வங்கி கிளையை அணுகுவது நல்லது.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments