ஜெகதாப்பட்டினம், ராமேசுவரம், நாகை, காரைக்காலை சேர்ந்த 54 மீனவர்கள் நடுக்கடலில் சிறைபிடிப்பு! இலங்கை கடற்படை அத்துமீறல்!ஒரே நாளில் ராமேசுவரம் உள்பட மீனவர்கள் 54 பேரை 5 படகுகளுடன் இலங்கை கடற்படை நடுக்கடலில் சிறைபிடித்து கொண்டு சென்றது.

இலங்கை கடற்படையால் நடுக்கடலில் தமிழக மீனவர்கள் சிறைபிடிக்கப்படும் சம்பவங்கள் நடந்து வருகின்றன. குறிப்பாக ராமநாதபுரம் மாவட்டம் ராமேசுவரம், பாம்பன், மண்டபம், புதுக்ேகாட்டை மாவட்டம் கோட்டைப்பட்டினம், ஜெகதாப்பட்டினம் மற்றும் தூத்துக்குடி, தஞ்சை, நாகை ஆகிய பகுதிகளை சேர்ந்த மீனவர்களும், புதுச்சேரி மாநிலம் காரைக்காலை சேர்ந்த மீனவர்களும் சிறைபிடிப்புக்கு ஆளாகின்றனர்.

மேலும் இலங்கை கடற்படையால் மீனவர்கள் நடுக்கடலில் தாக்கப்படுவதும், விரட்டப்படுவதும், அவர்கள் வலைகள், மீன்பிடி உபகரணங்கள், படகுகள் சேதப்படுத்தப்படும் சம்பவங்களும் நடந்து வருகின்றன.

சில மாதங்களுக்கு முன்பு ராமேசுவரம் பகுதியை சேர்ந்த 4 மீனவர்களை படகுடன் கடலில் மூழ்கடித்து கொன்ற சம்பவம் மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இந்த நிலையில் மேலும் ஒரு அதிர்ச்சியூட்டும் சம்பவமாக இலங்கை கடற்படையால் நேற்று ஒரே நாளில் 54 மீனவர்கள் சிறைபிடிக்கப்பட்டு உள்ளனர். அவர்களில் 14 பேர் காரைக்காலை சேர்ந்தவர்கள். மற்றவர்கள் தமிழக மீனவர்கள் ஆவர்.

கடந்த 5 ஆண்டுகளில் நடந்த சிறைபிடிப்பு சம்பவங்களில் ஒரே நேரத்தில் 50-க்கும் மேற்பட்ட மீனவர்களை துப்பாக்கி முனையில் இலங்கை கடற்படை பிடித்துச் சென்றது இதுவே முதல்முறை என மீனவர்கள் தெரிவிக்கிறார்கள். இதுபற்றிய விவரம் வருமாறு:-
இலங்கைக்கு கொண்டு செல்லப்பட்ட தமிழக மீனவர்களின் படகுகள்.

ராமேசுவரத்தில் இருந்து நேற்று முன்தினம் 500-க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் சுமார் 2 ஆயிரத்திற்கும் அதிகமான மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்கு சென்று இருந்தனர். அவர்கள் கச்சத்தீவு அருகே உள்ள கடல்பகுதியில் மீன் பிடித்தபோது 5-க்கும் மேற்பட்ட ரோந்து கப்பல்களில் வந்த இலங்கை கடற்படையினர் ராமேசுவரம் மீனவர்களை மீன் பிடிக்க விடாமல் கல் மற்றும் கண்ணாடி பாட்டில்களை வீசி தாக்குதல் நடத்தினர்.

ராமேசுவரத்தை சேர்ந்த மரியசிங்கம், சுப்பிரமணியன் ஆகியோருக்கு சொந்தமான 2 விசைப்படகுகளில் மரியசிங்கம், ராபின்சன், பேசியர், பிராங்கிளின் உள்ளிட்ட 20 மீனவர்கள் இருந்தனர். இவர்களை எல்லை தாண்டி வந்து மீன்பிடித்ததாக கூறி இலங்கை கடற்படையினர் கைது செய்தனர். சிறைபிடிக்கப்பட்ட அவர்களது 2 படகு, 20 மீனவர்களையும் இலங்கையில் மன்னார் கடற்படை முகாமுக்கு கொண்டு சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதேபோல் புதுக்கோட்டை மாவட்டம் ஜெகதாப்பட்டினம் மற்றும், நாகப்பட்டினத்தில் இருந்து மீன் பிடிக்க சென்ற 2 படகுகள் மற்றும் 20 மீனவர்களையும், காரைக்கால் பகுதியில் இருந்து ஒரு படகில் மீன்பிடிக்க சென்ற 14 மீனவர்களையும் எல்லை தாண்டிச் சென்று மீன்பிடித்ததாக கூறி சிறைபிடித்த இலங்கை கடற்படையினர் அவர்களை யாழ்ப்பாணம் மற்றும் திரிகோணமலை கடற்படை முகாம்களுக்கு கொண்டு சென்று விசாரணை நடத்தி வருவதாக தெரியவந்துள்ளது.

ஒரே நாளில் 54 மீனவர்களை இலங்கை கடற்படை அத்துமீறி கைது செய்துள்ள சம்பவம் தமிழக மீனவர்கள் மத்தியில் மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

ஐ.நா. சபையில் இலங்கை அரசாங்கத்திற்கு எதிரான தீர்மானத்தின் மீதான வாக்கெடுப்பில் இந்தியா பங்கேற்காத நிலையில் இந்த சிறைபிடிப்பு சம்பவம் நடந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments