"மே 2ம் தேதி காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்கும்" - தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு




தமிழகத்தில் கொரோனாவின் 2-வது அலை தினமும் புதிய உச்சத்தை தொட்டே அதிகரித்து வருகிறது. கொரோனா பரவலை கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு கட்ட நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. 

இதற்கிடையில், தமிழக சட்டசபை தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணிக்கை மே 2-ந் தேதி நடைபெற உள்ளது. அன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை என்பதால், முழு ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமலில் இருக்கும். எனவே அன்றைய தினம் திட்டமிட்டபடி ஓட்டு எண்ணிக்கை நடைபெறுமா? அல்லது தள்ளிவைக்கப்படுமா? என்று அரசியல் வட்டாரத்தில் கேள்வி எழுந்தது.


இந்த நிலையில் திட்டமிட்டபடி மே 2ம் தேதி காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்கும் என்று தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தெரிவித்துள்ளார். 

இது தொடர்பாக தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

ஓட்டு எண்ணிக்கைக்கான மேஜைகளை குறைப்பது குறித்து எந்த முடிவும் எடுக்கவில்லை. ஓட்டு எண்ணும் அறை சிறியதாக இருந்தால், 2 அறைகளில் ஓட்டு எண்ணிக்கை நடக்கும். ஒரு அறைக்கு 7 மேஜைகள் என 14 மேஜைகளில் ஓட்டு எண்ணிக்கை நடக்கும்.

வாக்கு எண்ணிக்கை மையங்களுக்கு வருபவர்கள் கொரோனா பரிசோதனை எடுக்க வேண்டுமா? குறித்து சுகாதாரத்துறை அதிகாரிகளுடன் ஆலோசித்து முடிவு செய்யப்படும். 72 மணி நேரத்திற்கு முன் கொரோனா பரிசோதனை செய்யப்பட வேண்டும் என்பதால், இது குறித்து விரைவில் அறிவிக்கப்படும்.

அனைத்து தொகுதிகளிலும் மே 2-ம் தேதி காலை 8:00 மணிக்கு ஓட்டு எண்ணிக்கை துவங்கும். 8:00 மணிக்கு தபால் ஓட்டுகளும், 8:30 மணிக்கு இயந்திரத்தில் பதிவான ஓட்டுகளும் எண்ணப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments