ரமலான் மாத சிறப்பு தொழுகைக்காக 10 மணி வரை அனுமதிக்க வேண்டும்: இஸ்லாமிய இயக்கத்தலைவர்கள் & அமைப்புகள் வேண்டுகோள்



 


தமிழக அரசு இன்று வெளியிட்ட கரோனா கட்டுப்பாடு அறிவிப்பில் மதவழிப்பாடு செய்ய இரவு 8 மணி வரை அனுமதி என அறிவிக்கப்பட்டுள்ளது. ரமலான் மாதத்தில் 30 நாட்களும் தராவீஹ் எனும் சிறப்பு தொழுகை கூடுதலாக தொழப்படும் என்பதால் 30 நாட்களுக்கு மட்டும் கூடுதலாக 10 மணி வரை தொழுகை நடந்த அனுமதிக்க வேண்டும் என மமக, எஸ்டிபிஐ, மஜக, தவ்ஹீத் ஜமாஅத், முஸ்லிம் மக்கள் கழகம் மற்றும் இதர அமைப்புகள் சார்பில் அரசுக்கு கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.

வரும் 14-ம் தேதி ரமலான் நோன்பு ஆரம்பமாகிறது. 30 நாட்கள் நோன்பு காலத்தில் ஐந்து வேலை தொழுகையைத் தாண்டி கூடுதலாக இரவு 9 மணிமுதல் 10 மணி வரை தராவீஹ் எனும் சிறப்புத்தொழுகை நடக்கும். இன்று அறிவிக்கப்பட்ட அரசின் கட்டுப்பாடு அறிவிப்பில் மதவழிப்பாட்டுக்கான நேரம் இரவு 8 மணி வரை மட்டும் அனுமதி என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் இந்த 30 நாட்கள் இஸ்லாமிய மக்கள் தராவீஹ் தொழுகை நடத்துவதில் சிரமம் ஏற்பட்டுள்ளது.

இதுகுறித்து இஸ்லாமிய இயக்க தலைவர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.


தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழக தலைவர் ஜவாஹிருல்லா இன்று வெளியிட்ட அறிக்கை:

“தமிழகத்தில் கரோனா 2வது அலையின் காரணமாக அதிகரித்து வரும் பாதிப்பினைக் கட்டுப்படுத்தும் நோக்கில் தமிழக அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. அதன்படி, தமிழகத்தில் வரும் ஏப்ரல் 10ம் தேதி முதல் அனைத்து வழிபாட்டுத் தலங்களும் இரவு 8 மணி வரை மட்டுமே பொதுமக்களுக்கு அனுமதியளிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

புனித ரமலான் மாதம் வரும் 14ஆம் தேதி தொடங்கவிருக்கும் நிலையில், இந்த கட்டுப்பாட்டினால் ரமலான் மாத இரவு தொழுகையை முஸ்லிம்கள் பள்ளிவாசல்களில் நிறைவேற்ற முடியாத சூழல் உருவாகும்.

கடந்த ஆண்டு முழு ஊரடங்கு காரணமாகப் பள்ளிவாசல்கள் பூட்டப்பட்டன. புனித ரமலானில் தராவீஹ் எனப்படும் இரவுநேர தொழுகையைப் பள்ளிவாசல்களில் நிறைவேற்ற முடியாமல் முஸ்லிம்கள் கவலை கொண்டனர்.

எனவே, சிறுபான்மை முஸ்லிம்களின் புனித மாதமான ரமலான் மாதத்தில் பள்ளிவாசல்கள் இரவு 8 மணிக்குப் பதிலாக இரவு 10 மணி வரை செயல்படத் தமிழக அரசு அனுமதி அளிக்க வேண்டும்” இவ்வாறு ஜவாஹிருல்லா கோரிக்கை வைத்துள்ளார்.





தமிழக அரசு அறிவித்துள்ள ஊரடங்கு வழிகாட்டுநெறிமுறைகளில் சில தளர்வுகள் வேண்டும் - எஸ்.டி.பி.ஐ. கட்சி கோரிக்கை

அதிகரித்துவரும் கொரோனா 2வது அலை பரவல் தொடர்பாக, தமிழக அரசு வெளியிட்டுள்ள பகுதிநேர ஊரடங்கு வழிகாட்டு நெறிமுறைகளில் சில தளர்வுகள் வேண்டி எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மாநில பொதுச்செயலாளர் அச.உமர் பாரூக் தமிழக தலைமைச் செயலாளர் ராஜூவ் ரஞ்சனுக்கு கோரிக்கை மனு அளித்தார். மாநில செயற்குழு உறுப்பினர்கள் ஏ.கே.கரீம், ராஜா முகமது உடன் இருந்தனர். 
இதுதொடர்பாக அவர் அளித்துள்ள கோரிக்கை மனுவில் கூறியிருப்பதாவது;
கோவிட்-2 வது அலை பரவல் தொடர்பாக ஏப்ரல் 10 முதல் அமல்படுத்தப்பட உள்ள சில வழிமுறைகளுடன் கூடிய பகுதிநேர ஊரடங்கு அறிவிப்பை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. அதன்படி மதவழிபாடு தொடர்பான நிகழ்வுகளுக்கு இரவு 8 மணி முதல் அதிகாலை வரை தடை விதிக்கப்பட்டுள்ளது. எதிர்வரும் ஏப்.14 முதல் இஸ்லாமியர்களின் புனித ரமலான் மாதம் தொடங்குகிறது. இம்மாதத்தில் அதிகமான அளவு இரவுநேர வணக்க வழிபாடுகளில் இஸ்லாமியர்கள் ஈடுபடுவார்கள். கடந்த ஆண்டு கோவிட் பரவல் தொடர்பாக அறிவிக்கப்பட்ட ஊரடங்கால் இஸ்லாமியர்கள் ரமலான் மாத வணக்க வழிபாடுகளை நிறைவேற்றுவதில் பெரும் சிரமத்தை எதிர்கொண்டனர். ஆகவே, இதனை கருத்தில்கொண்டு குறைந்தபட்சம் இரவு 8 மணி முதலான ஊரடங்கு அறிவிப்பை  இரவு 10 மணிக்கு என மாற்றினால் அது இஸ்லாமியர்களின் ரமலான் மாத வணக்க வழிபாடுகளை நிறைவேற்ற மிகவும் உதவிகரமாக இருக்கும் என்பதால், இரவுநேர ஊரடங்கை இரவு 8 மணியிலிருந்து, இரவு 10 மணிக்கு  மாற்றி அறிவிக்க நடவடிக்கை மேற்கொள்ளுமாறு தங்களை வலியுறுத்தி கேட்டுக்கொள்கின்றேன். 
இவ்வாறு அவர் அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.



தமிழக அரசு அறிவித்துள்ள ஊரடங்கு வழிகாட்டுநெறிமுறைகளில் சில தளர்வுகள் வேண்டும் - தவ்ஹீத் ஜமாஅத் கோரிக்கை

தமிழகத்தில் கொரோனா பரவலை அடுத்து புதிய கட்டுப்பாடுகளை எதிர்வரும் 10-ம் தேதி முதல் தமிழக அரசு அமல்படுத்தவுள்ளது.அதில் குறிப்பாக வழிபாட்டுத் தலங்கள் இரவு 8 மணிக்கு மூடப்பட வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இஸ்லாமியர்களைப் பொறுத்தவரையில் இரவு நேர வழிபாடு உட்பட ஐந்து வேலையும் இறைவணக்கம் செய்பவர்கள். அதிலும் குறிப்பாக புனித ரமளான் மாதத்தில் கூடுதலாக இரவு நேரத்தில் வணக்க வழிபாடுகளில் இஸ்லாமிய சமுதாய மக்கள் ஈடுபடுவார்கள் என்பது  தாங்களும் அறிந்த ஒன்றே. இதை கவனத்தில் கொண்டும் அதே சமயம் நோய்பரவலை எதிர்கொள்ளும் வகையிலும் உரிய பாதுகாப்பு ஏற்பாடுகளுடன்  பள்ளிவாசல்களில் இஸ்லாமியர்களின் புனித ரமளான் மாதத்தில் (ஏப்ரல் 13 முதல் மே 15 வரை ) இரவு 10 மணி வரையிலும் வழிபாடுகள் நடந்திட  உரிய உத்தரவையும் வழிகாட்டுதலையும் வழங்குமாறு இஸ்லாமிய சமுதாயத்தின் சார்பாக கேட்டுக்கொள்கிறோம்


மத வழிபாடுகளை பாதிக்காதவாறு பொது முடக்கத்தை அமல்படுத்த.வேண்டும்!

தமிழக அரசுக்கு மஜக பொதுச்செயலாளர் மு தமிமுன் அன்சாரி MLA வேண்டுகோள்!

கொரோனா தொற்றின் இரண்டாவது அலை பரவுவதால் தமிழக அரசு மீண்டும் சில கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. மக்களின் உயிர் காக்கும் நடவடிக்கைகளை எடுப்பது தவிர்க்க இயலாதது என்பதால் இதை வரவேற்கிறோம்.

அதே சமயம் வழிபாட்டுத்தலங்களுக்கு சில விலக்குகள் தேவை என்பதையும் தமிழக அரசு உணர வேண்டும்.

வழிபாட்டு மையங்கள் என்பது மக்கள் மன அமைதி பெறும் இறையில்லங்களாக இருப்பதால் அங்கு மக்கள் கட்டுப்பாடுகளுடன்  வந்து செல்வதற்கு சில சலுகைகளை அளிக்க வேண்டும். 

கோயில், மசூதி, தேவாலயம் என மக்கள் கூடி பிரார்த்திக்கும் இடங்களில் நேரக் கட்டுப்பாடுகள் தளர்த்தப்படுவது குறித்து அரசு பரிசீலிக்க வேண்டும்.

குறிப்பாக புனித ரமலான் மாதம் இம்மாதத்தின் இரண்டாவது வாரத்தில் தொடங்குவதால், மக்கள் இரவு நேர வழிபாட்டை நடத்தும் வகையில் இரவு 10 மணி வரை மசூதிகள் திறந்திருக்க அனுமதிக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறோம். 

இதற்கு மக்கள் பின்பற்ற வேண்டிய விதிமுறைகளை அரசு வெளியிடலாம். இதை எல்லோரும் பின்பற்றுவார்கள் என்பதில் ஐயமில்லை. 

இதே போன்று எல்லா மதங்களையும் சேர்ந்த மக்களின் நியாயமான கோரிக்கைகளையும் ஆன்மீக காரணங்களுக்காக பரிசீலிக்க வேண்டும் என்று தமிழக அரசை கேட்டுக் கொள்கிறோம்.



ரமலான் மாதம் வருவதையடுத்து இஸ்லாமியர்களின் வழிபாட்டு தலங்களுக்கு இரவு 10 மணி வரை அனுமதி வழங்கக்கோரி தமிழக அரசு தலைமைச் செயலாளரிடம் நவாஸ்கனி எம்பி கோரிக்கை

கொரோனா பரவல் காரணமாக விதிக்கப்பட்டுள்ள கூடுதல் கட்டுப்பாடுகளில் வழிபாட்டுத் தலங்களுக்கு இரவு 8 மணி வரை மட்டுமே அனுமதிக்கப்படுவதாக அரசு செய்திக்குறிப்பில் வெளியிட்டுள்ளது.

இதனையடுத்து இராமநாதபுரம் நாடாளுமன்ற உறுப்பினரும், இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் மாநில துணைத் தலைவருமான நவாஸ்கனி எம்பி தமிழக அரசின் தலைமைச் செயலாளருக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.,

அவர் விடுத்துள்ள கோரிக்கையில்.,

கொரோனா பரவல் காரணமாக விதிக்கப்பட்டுள்ள கூடுதல் கட்டுப்பாடுகளில் வழிபாட்டுத் தலங்களுக்கு இரவு 8 மணி வரை மட்டுமே அனுமதிக்கப்படுவதாக அரசு செய்திக்குறிப்பில் வெளியிட்டுள்ளது.

இந்நிலையில் இஸ்லாமியர்கள் புனித மாதமாக கடைபிடிக்கும் ரமலான் மாதம் இன்னும் ஒருசில தினங்களில் வரவிருக்கின்றது.
இதில் இஸ்லாமியர்கள் இரவு நேர வணக்கங்களில் ஈடுபடுவார்கள்.
எனவே, இஸ்லாமியர்கள் இரவு நேர வணக்க வழிபாடுகள் செய்யும் வகையில், கட்டுப்பாடுகளை எட்டு மணியிலிருந்து இரவு பத்து மணி ஆக உயர்த்தி தரும்படி அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.

இவ்வாறு இராமநாதபுரம் நாடாளுமன்ற உறுப்பினரும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநில துணைத் தலைவருமான கே நவாஸ்கனி எம்பி கோரிக்கை விடுத்துள்ளார்.


ரமலான் மாத சிறப்பு தொழுகைக்காக இரவு 10 மணி வரை அனுமதிக்க வேண்டும் : தமிழ்நாடு ஜமாஅத்துல் உலமாசபை கோரிக்கை
 
தமிழக அரசு இன்று வெளியிட்ட கரோனா கட்டுப்பாடு அறிவிப்பில் அனைத்து வழிபாட்டு தளங்களும் இரவு 8  மணி வரை மட்டுமே அனுமதி என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் இஸ்லாமியர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளார்கள்

ஏனெனில் ரமலான் மாதத்தில் இஸ்லாமியர்கள் 30 நாட்களும் நோன்பு இருந்து வழக்கம் போல் 5 வேலை தொழுகை நடத்துவார்கள.மேலும் ரமலான் மாதத்தில் இரவு 8 மணிக்கு மேல்  தராவீஹ் எனும் சிறப்பு தொழுகை கூடுதலாக தொழப்படும் இது இஸ்லாமி வழிபாடுகளில் மிகவும் முக்கியமானது ஆகும்

எனவே ரமலான் இரவு தொழுகைக்கு  30 நாட்களுக்கு மட்டும் கூடுதலாக 10 மணி வரை தொழுகை நடந்த அனுமதிக்க வேண்டும் என  தமிழ்நாடு ஜமாஅத்துல் உலமா சபை சார்பில் கோரிக்கை வைக்கப்ப்ட்டது

மேலும் இது சம்மந்தமாக இன்று (08.04.2021.)  தமிழ்நாடு ஜமாஅத்துல் உலமா சபை சார்பில் முதல்வர் தனிப்பிரிவில் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது அப்போது தமிழ்நாடு ஜமாஅத்துல் உலமா சபை பொதுச்செயலாளர் Dr. அன்வர் பாதுஷாஉலவி, துணைச் செயலாளர் இல்யாஸ் ரியாஜி, சென்னை மாவட்ட தலைவர் அபூதாஹிர் சிராஜி ஆகியோர் தமிழக அரசின் தலைமைச் செயலகத்தில் மனுவை அளித்தனர்.

இதேப்போன்று இஸ்லாமிய இயக்கங்களும் தமிழக அரசுக்குகோரிக்கை வைத்துள்ளனர்




எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments