தஞ்சை-புதுக்கோட்டை சாலையில் 2 மோட்டார் சைக்கிள்கள் மோதிய விபத்தில் 2 வாலிபர்கள் பலி

   
தஞ்சை புதுக்கோட்டை சாலையில் நேற்று இரண்டு மோட்டார் சைக்கிள்கள், ஒரு ஸ்கூட்டர் மோதிக் கொண்ட விபத்தில் இரண்டு வாலிபர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர்.

தஞ்சையை அடுத்துள்ள வல்லம் அருகே உள்ள சென்னம்பட்டியைச் சேர்ந்த அர்ஜூனன் என்பவரின் மகன் சரத்குமார் (25). இவர் அவருடைய மோட்டார் சைக்கிளில் அற்புதாபுரத்தில் இருந்து வல்லம் நோக்கி வந்து கொண்டிருந்தார். அப்போது மற்றொரு மோட்டார் சைக்கிளில் புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை அருகே உள்ள கல்லாக்கோட்டையைச் சேர்ந்த ‌ஷர்புதீன் என்பவரின் மகன் மன்சூர் (24) தஞ்சையில் இருந்து கல்லாக்கோட்டை நோக்கி சென்று கொண்டிருந்தார்.

பின்னால் தஞ்சையில் இருந்து புனல்குளத்தை சேர்ந்த தியாகராஜன் என்பவர் ஸ்கூட்டரில் வந்து கொண்டிருந்தார். அற்புதாபுரம் சோதனை சாவடி அருகே சரத்குமார் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிளும், மன்சூர் ஓட்டி வந்த மோட்டார்சைக்கிளும் நேருக்கு நேர் மோதியதில் சரத்குமார், மன்சூர் இருவரும் சாலையில் விழுந்தனர்.

அப்போது தியாகராஜன் ஒட்டி வந்த ஸ்கூட்டர் மோட்டார் சைக்கிள்கள் மீது மோதி தியாகராஜனும் விழுந்து படுகாயம் அடைந்தார்.

இந்த விபத்தில் சம்பவ இடத்திலேயே சரத்குமார் உயிர் இழந்தார். பலத்த காயங்களுடன் தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்குக் மன்சூர் கொண்டு செல்லப்பட்டார். ஆனால் வழியிலேயே மன்சூரும் உயிர் இழந்தார்.

தியாகராஜன் தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.

இது குறித்து தகவல் அறிந்த வல்லம் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரித்து வருகின்றனர். விபத்தில் இரண்டு வாலிபர்கள் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments