வரக்கூடிய 3 வாரங்கள் நமக்கு மிகப்பெரிய சவாலாக அமையும்- அமைச்சர் விஜயபாஸ்கர்

   
பொதுமக்கள் முக கவசம் அணிதல், சமூக இடைவெளியை கடைபிடித்தல் உள்ளிட்ட வழிகாட்டு நெறிமுறைகளில் இருந்து தவறக்கூடாது என அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள 6 சட்டமன்ற தொகுதிகளில் பதிவான மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் புதுக்கோட்டை அரசு மகளிர் கலைக்கல்லூரி வாக்கு எண்ணும் மையத்தில் வைக்கப்பட்டுள்ளது. இந்த மையத்தை தமிழக சுகாதாரத்துறை அமைச்சரும், விராலிமலை தொகுதி அ.தி.மு.க. வேட்பாளருமான டாக்டர் சி.விஜயபாஸ்கர் தலைமையில் மற்ற தொகுதி வேட்பாளர்கள் பார்வையிட்டனர்.

பின்னர் அமைச்சர் விஜயபாஸ்கர் நிருபர்களிடம் கூறியதாவது:-

சின்னக் கலைவாணர் என்று அழைக்கப்பட்ட நடிகர் விவேக் மரணம் என்பது மிகவும் அதிர்ச்சிக்குள்ளான வி‌ஷயம். மரங்களை நடுவதில் மிகுந்த அக்கறை காட்டியவர். பல விருதுகளை பெற்றிருக்கிறார். அவருடைய மறைவுக்கு என்னுடைய ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன் என்றார்.

தொடர்ந்து அவரிடம் நடிகர் விவேக்கின் மரணத்திற்கு அவர் கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டதும் ஒரு காரணம் என்று மக்களிடம் வதந்தி பரவுவதாக கேட்கப்பட்ட கேள்விக்கு பதிலளித்த அமைச்சர் விஜயபாஸ்கர், இதுபற்றி ஏற்கனவே சுகாதாரத்துறை செயலாளர் டாக்டர் ராதாகிருஷ்ணன், தெளிவுபடுத்தி இருக்கிறார். மருத்துவமனை நிர்வாகமும் தெளிவான விளக்கத்தை அளித்துள்ளது.

ஒரு நாளைக்கு 2 லட்சத்திற்கும் மேற்பட்டோர் தடுப்பூசி செலுத்தி கொள்கிறார்கள். 45 வயதிற்கும் மேற்பட்டவர்கள் கொரோனா தடுப்பூசியை மறக்காமல் எடுத்துக் கொள்ள வேண்டும். தடுப்பூசியால் எந்தவிதமான பக்க விளைகளும் இல்லை என்பதை பலமுறை விளக்கி கூறியுள்ளோம்.

மக்களுக்கு தடுப்பூசி மீதான நம்பிக்கை என்பது மிகவும் அவசியம். அனைவரும் கொரோனா தடுப்பூசியை போட்டுக்கொள்ள வேண்டும். கொரோனா தொடர்பாக ஆய்வு பணியை மேற்கொள்வதில் தமிழகத்தில் தற்போது நடைமுறையில் உள்ள தேர்தல் நடத்தை விதிகள் முட்டுக்கட்டையாக இருக்கிறது. ஆய்வு பணி மேற்கொள்ள நான் தயாராக இருக்கிறேன். மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்‌ஷவர்த்தனுடன் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினேன்.

அப்போது தமிழகத்தின் நிலையை எடுத்துக்கூறியதுடன், தடுப்பு மருந்தான ரெம்டெசிவர் மருந்து தமிழகத்தில் தடையின்றி கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும், தொடர்ந்து வழங்கவேண்டும் என்றும் கேட்டுக்கொண்டேன். முக கவசம் அணிதல், சமூக இடைவெளியை கடைபிடித்தல் உள்ளிட்ட வழிகாட்டுநெறிமுறைகளில் இருந்து தவறக்கூடாது.

தமிழகத்தில் சுகாதார கட்டமைப்புகள் வலுவாக இருப்பதால் வரும் காலத்தில் சவால்களை எதிர் கொள்ள முடியும். பொது மக்கள் இன்னும் அலட்சியமாக இருந்தால் அடுத்து வரக்கூடிய 3 வாரங்கள் நமக்கு மிகப்பெரிய சவாலாக அமைந்து விடும்.

இவ்வாறு அவர் கூறினார்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments