புதுக்கோட்டையில் நள்ளிரவில் வாக்கு எண்ணும் மையத்திற்குள் சென்ற போலீஸ் வேனால் பரபரப்பு `டூல்ஸ்' பெட்டிகள் இருந்ததால் சந்தேகம் என தேர்தல் அதிகாரியிடம் தி.மு.க.வினர் புகார்






புதுக்கோட்டை வாக்கு எண்ணும் மையத்திற்குள் நள்ளிரவில் சென்ற போலீஸ் வேனால் பரபரப்பு ஏற்பட்டது. அதில் `டூல்ஸ்' பெட்டிகள் இருந்ததால் சந்தேகம் இருப்பதாக தேர்தல் அதிகாரியிடம் தி.மு.க.வினர் புகார் அளித்தனர்.

வாக்கு எண்ணும் மையம்

புதுக்கோட்டை மாவட்டத்தில் 6 சட்டமன்ற தொகுதிகளில் நடந்த சட்டமன்ற தேர்தலில் ஓட்டுகள் பதிவான மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் வாக்கு எண்ணும் மையமான புதுக்கோட்டை அரசு மகளிர் கலைக்கல்லூரியில் வைக்கப்பட்டுள்ளது. வாக்கு எண்ணும் மையத்தில் போலீசார், துணை ராணுவ படையினர் 24 மணி நேரம் சுழற்சி முறையில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். தொகுதி வாரியாக ஓட்டுப்பெட்டிகள் வைக்கப்பட்டுள்ளன. மேலும் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு கண்காணிக்கப்படுகின்றன. கண்காணிப்பு கேமராக்களில் பதிவாகும் காட்சிகளை பார்வையிட தனியாக வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. அதில் வேட்பாளர்களின் முகவர்கள் இருந்து கண்காணித்து வருகின்றனர்.

போலீஸ் வேன்

இந்த நிலையில் வாக்கு எண்ணும் மையத்தில் நேற்று முன்தினம் நள்ளிரவு 1.30 மணி அளவில் போலீஸ் வேன் ஒன்று வந்துள்ளது. அந்த வாகனத்தை தி.மு.க. வேட்பாளர்களின் முகவர்கள் மறித்து அதனை பார்வையிட்டுள்ளனர். அதில் கட்டிங் பிளேடு, ஸ்கூரு டிரைவ் உள்ளிட்ட டூல்ஸ் உபகரணங்கள் இருந்த 2 பெட்டிகள் இருந்துள்ளது. இதனால் சந்தேகமடைந்த அவர்கள் இது குறித்து தேர்தல் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர். சம்பந்தப்பட்ட வாகனம் டீ வினியோகிக்க வந்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 
இதற்கிடையில் தி.மு.க. வடக்கு மாவட்ட பொறுப்பாளர் செல்லபாண்டியன் தலைமையில் விராலிமலை தொகுதி தி.மு.க. வேட்பாளர் பழனியப்பன் மற்றும் நிர்வாகிகள் நேற்று மாவட்ட தேர்தல் நடத்தும் அதிகாரியும், கலெக்டருமான உமாமகேஸ்வரியை அவரது முகாம் அலுவலகத்தில் சந்தித்து ஒரு புகார் மனு கொடுத்தனர்.

கண்காணிப்பு கேமராக்கள்

தி.மு.க.வினர் அளித்த அந்த மனுவில், வாக்கு எண்ணும் மையத்திற்குள் வந்த போலீஸ் வாகனத்திற்கு எந்த அனுமதி சான்றும் வழங்கப்படவில்லை. இது எங்களுக்கு சந்தேகத்திற்கு இடமளித்துள்ளது. அதில் வைக்கப்பட்டுள்ள பெட்டியில் கட்டிங் பிளேடு உள்ளிட்ட உபகரணங்கள் இருந்துள்ளது. எனவே விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும். வாக்கு எண்ணும் மையத்தில் நான்கு புறமும் தெரியும் படி கண்காணிப்பு கேமராக்கள் பொருத்த வேண்டும் என தெரிவித்திருந்தனர். 

மனுவை பெற்ற கலெக்டர் நடவடிக்கை எடுப்பதாக கூறியுள்ளார். அந்த போலீஸ் வேன் வெடிகுண்டு தடுப்பு பிரிவினர் பயன்படுத்தக்கூடியது என்பதும், அந்த வாகனம் தான் வாக்கு எண்ணும் மையத்திற்குள் சென்றதாகவும், வேறெதும் இல்லை என போலீஸ் வட்டாரத்தில் தெரிவித்தனர். வாக்கு எண்ணும் மையத்திற்குள் நள்ளிரவில் சென்ற போலீஸ் வேனால் பரபரப்பு ஏற்பட்டது.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments