தமிழக சட்டமன்றத் தேர்தலில் ஒரு கோடியே 71 லட்சம் பேர் ஓட்டு போடவில்லை






வாக்குப்பதிவு சதவீதத்தில் கடைசிநிலையில் உள்ள சென்னை மாவட்டத்தில் பெரும்பாலானோர், கொரோனா காலத்தில் வேலை இழந்து சொந்த ஊர் திரும்பியுள்ளனர்.

தமிழகத்தில் 16-வது சட்டமன்ற பொதுத்தேர்தல் நேற்று முன்தினம் 234 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக நடந்து முடிந்தது. மொத்தம் 6 கோடியே 28 லட்சத்து 69 ஆயிரத்து 955 வாக்காளர்கள் வாக்களிக்க இருந்தனர். மொத்தம் 72.78 சதவீதம் வாக்குகள் பதிவாகின.

மாவட்ட அளவில் அதிகபட்சமாக கரூர் மாவட்டத்தில் 83.92 சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளன. குறைந்த அளவாக சென்னை மாவட்டத்தில் 59.06 சதவீதம் பதிவாகியுள்ளன. தொகுதி அளவில் அதிகபட்சமாக பாலக்கோடு தொகுதியில் 87.33 சதவீதமும், குறைந்த அளவாக வில்லிவாக்கம் தொகுதியில் 55.52 சதவீதமும் பதிவாகின.

பதிவான மொத்த வாக்கு சதவீதத்தை வைத்து பார்க்கும்போது, 4 கோடியே 57 லட்சம் பேர் மட்டுமே வாக்களித்து இருக்கின்றனர். ஒரு கோடியே 71 லட்சம் பேர் ஓட்டு போடவில்லை. கொரோனா பரவல் அச்சம், வாக்குப்பதிவு குறைந்ததற்கு காரணமாக சொல்லப்படுகிறது.

வாக்குப்பதிவு சதவீதத்தில் கடைசிநிலையில் உள்ள சென்னை மாவட்டத்தில் பெரும்பாலானோர், கொரோனா காலத்தில் வேலை இழந்து சொந்த ஊர் திரும்பியுள்ளனர். தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களில் பணிபுரியும் பலர் சொந்த ஊரில் வீட்டில் இருந்துகொண்டே கம்ப்யூட்டர் மூலம் வேலைபார்த்துக் கொண்டிருக்கின்றனர். இவர்களுக்கு சென்னையில்தான் ஓட்டு இருக்கிறது என்றாலும், ஓட்டு போட மெனக்கெட்டு செல்ல வேண்டுமா என்ற யோசனையில் வாக்குச்சாவடிக்கு வரவில்லை. இவைதான் வாக்குப்பதிவு குறைந்ததற்கு காரணமாக கருதப்படுகின்றன.

கடந்த 2016-ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் 74.26 சதவீத வாக்குகள் பதிவாகி இருந்தன. அதை வைத்து பார்க்கும்போது, இந்த முறை 1.48 சதவீத வாக்குகள் குறைவாகவே பதிவாகியுள்ளன.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments