ரத்த தானம் உயிர் தானம்; தடுப்பூசி செலுத்தும் முன் ரத்தம் கொடுங்கள்
மனித ரத்தத்துக்கு இதுவரை மாற்று இல்லை, அதனாலேயே ரத்தம் உயிர்த் திரவம் என்று கூறப்படுகிறது.

கோவிட் தொற்று தீவிரமாகப் பரவி வரும் நிலையில் தடுப்பூசி போட்டுக் கொள்ளும் முன்னர், தகுதியான இளைஞர்கள் அனைவரும் ரத்த தானம் செய்ய வேண்டும் என்று மருத்துவர்களும் சமூக ஆர்வலர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.


இந்தியாவில் கரோனா வைரஸ் 2-வது அலை கடுமையான பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. நாடு முழுவதும் நாள்தோறும் 3 லட்சத்துக்கு மேற்பட்ட மக்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இறப்பு எண்ணிக்கையும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதையடுத்து, மே 1-ம் தேதி முதல் 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு தடுப்பூசி செலுத்திக்கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

தற்போது இந்தியாவில் சீரம் நிறுவனத்தின் கோவிஷீல்ட், பாரத் பயோடெக்கின் கோவாக்சின் கரோனா தடுப்பு மருந்துகள் பயன்பாட்டில் உள்ளன. 3-வதாக ரஷ்யாவின் ஸ்புட்னிக்-வி தடுப்பூசி மே மாதத்தில் இருந்து, இந்தியாவில் பயன்பாட்டுக்கு வர உள்ளது.

அனைத்துத் தரப்பினருக்கும் நாளை முதல் தடுப்பூசி செலுத்திக்கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ள நிலையில், தகுதியான இளைஞர்கள் அனைவரும் ரத்த தானம் செய்ய வேண்டும் என்று மாநில ரத்தமேற்றும் கழகத்தின் இணை இயக்குநர் மருத்துவர் எஸ்.சுபாஷ் வேண்டுகோள் விடுத்துள்ளார். இதுகுறித்து 'இந்து தமிழ்' இணையதளத்திடம் அவர் கூறுகையில், ''மனித உடலில் சராசரியாக 5 லிட்டர் ரத்தம் இருக்கும். ரத்த தானத்தின்போது 350 மில்லி மட்டுமே எடுக்கப்படுகிறது.

3 பேரைக் காப்பாற்றலாம்

ஒருவர் தானமாகக் கொடுக்கும் ரத்தத்தின் மூலம் 3 பேரைக் காப்பாற்ற முடியும். கொடையாளி அளிக்கும் ரத்தத்தை சிவப்பணுக்கள், வெள்ளையணுக்கள், தட்டணுக்கள் என்று மூன்றாகப் பிரிக்கிறோம். இவற்றைத் தனித்தனியாகப் பெறும் நோயாளிகள் மூவர், காப்பாற்றப்படுகின்றனர்.

18 முதல் 65 வயதுக்கு உட்பட்ட யார் வேண்டுமானாலும் ரத்தத் தானம் செய்யலாம். 18 முதல் 45 வயது வரையிலான நபர்களுக்கு நாளை (மே 1) முதல் தடுப்பூசி போடப்படும் சூழலில், தகுதியும் விருப்பமும் உள்ள தன்னார்வலர்கள், தடுப்பூசி போட்டுக் கொள்ளும் முன்னர் அங்கீகரிக்கப்பட்ட ரத்த வங்கிகளில் ரத்த தானம் செய்ய வேண்டும்.

தடுப்பூசிக்குப் பிறகு எவ்வளவு நாட்கள் கழித்து ரத்த தானம் செய்யலாம்?

கோவிஷீல்டு, கோவாக்சின் இரண்டில் எதுவானாலும் ஒரு தவணை தடுப்பூசி போட்டுக்கொண்ட பிறகு 28 நாட்கள் கழித்து ரத்த தானம் செய்யலாம் என்று தேசிய ரத்தமேற்றும் கழகம் (NBTC- National Blood Transfusion Council) அறிவித்துள்ளது. இதனால் கோவாக்சின் தடுப்பூசி எடுத்துக்கொள்ளும் நபர், முதல் தவணை தடுப்பூசிக்குப் பிறகு 28 நாட்கள், 2-ம் தவணை தடுப்பூசிக்குப் பிறகு 28 நாட்கள் என மொத்தம் 56 நாட்களுக்குப் பிறகே ரத்த தானம் செய்ய முடியும்.கோவிஷீல்ட் தடுப்பூசிக்கு இடையேயான தவணைக்காலம் 6 வாரங்கள் (42 நாட்கள்) என்பதால், ரத்த தானம் செய்ய 70 நாட்கள் காத்திருக்க வேண்டும். இதனால் தன்னார்வலர்களும் தகுதியுள்ள பொதுமக்களும் ரத்த தானம் செய்த பிறகு, தடுப்பூசி போட்டுக் கொள்ளுங்கள். கூடுதல் விவரங்களுக்கு 1097 என்ற எண்ணைத் தொடர்பு கொள்ளலாம்'' என்று மருத்துவர் எஸ்.சுபாஷ் தெரிவித்தார்.

தடுப்பூசி போட்டுக் கொள்வதற்கு முன்பு போதிய அளவு ரத்தம் பெறப்பட்டால் ரத்தத்தின் தேவையைப் பூர்த்தி செய்ய முடியும் என்று கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனை டீன் மருத்துவர் வசந்தாமணி நம்பிக்கை தெரிவிக்கின்றார். மேலும் அவர் கூறும்போது, ''மருத்துவப் பணியாளர்கள், முன்களப் பணியாளர்கள், தேர்தல் பணிகளில் ஈடுபட்டோர்களுக்கு வயது வித்தியாசம் இல்லாமல் அனைவருக்கும் கரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது. நாளை முதல் 18 வயது முதல் அனைத்து மக்களுக்கும் தடுப்பூசி போடப்பட உள்ளது.பொது மக்கள் முடிந்த அளவு பயணங்களைக் குறைக்க வேண்டும். சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு, அரசு கூடுதல் கட்டுப்பாடுகளை விதிக்கும் என்று எதிர்பார்க்கிறோம். இதனால் சாலை விபத்துகள் குறைந்து ரத்தத்தின் தேவை குறையும். தற்போதைய சூழலில் அவசர கால சிகிச்சைகள், பிரசவம் ஆகியவற்றுக்கு மட்டுமே மக்கள் அனுமதிக்கப்படுவதாலும் ரத்தத்தின் தேவை குறைந்துள்ளது. இந்தச் சூழலில், தடுப்பூசிக்கு முன்பு போதிய அளவு ரத்த தானம் செய்தால் ரத்தத்தின் தேவையைப் பூர்த்தி செய்ய முடியும் என்று நம்புகிறேன்.

கரோனாவால் பாதிக்கப்பட்டு மீண்டவர்கள் ரத்த தானம் செய்யலாமா?

கரோனாவில் இருந்து மீண்டவர்கள் ‘தேற்றாளர் ரத்தத் திரவம்’ (Convalescent plasma) மட்டுமே கொடுப்பது வழக்கமாக உள்ளது. அதே நேரத்தில் அவர்கள் ரத்த தானம் செய்யக்கூடாது என்று எங்கும் நிரூபிக்கப்படவில்லை. அவர்கள் 6 வாரங்களுக்குப் பிறகு ரத்த தானம் செய்யலாம்'' என்று மருத்துவர் வசந்தாமணி தெரிவித்தார்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments