கடைகள் பிற்பகல் 3 மணி வரை செயல்பட அனுமதிக்க வேண்டும்: ஸ்டாலினுக்கு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு கோரிக்கை
தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு சார்பில் 38-வது வணிகர் தின மாநாடு, சென்னை கே.கே.நகரில் எளிய முறையில் நேற்று நடந்தது.

அதில், பேரமைப்பின் தலைவர் ஏ.எம்.விக்கிரமராஜா, பொதுச்செயலர் வீ.கோவிந்தராஜூலு, பொருளாளர் ஏ.எம்.சதகத்துல்லா ஆகியோர், கரோனா தொற்றால் வருவாய் இழந்து தவிக்கும் முடி திருத்துவோர், சலவைத் தொழிலாளர், பூக்கடை வைத்திருப்போர் என 2 ஆயிரம் பேருக்கு தலா 25 கிலோ அரிசி வழங்கினர்.பின்னர் செய்தியாளர்களிடம் ஏ.எம்.விக்கிரமராஜா கூறியதாவது:

ஊரடங்கு, கடைகளை திறக்கும் நேரம் குறைப்பு என அரசு அதிகாரிகள் தன்னிச்சையாக முடிவெடுத்து செயல்படுத்தி உள்ளனர். முழு ஊரடங்கை எங்கள் பேரமைப்பு வரவேற்கிறது. கடைகளை திறந்து, அதிகாரிகளிடம் துன்பப்படுவதைவிட கடைகளை மூடியிருப்பதேமேல். அப்படி ஊரடங்கை அமல்படுத்துவதாக இருந்தால், பொதுமக்களுக்கான அத்தியாவசியப் பொருட்களை கொண்டுபோய் சேர்ப்பது குறித்து வணிகர்களுடன் அரசு கலந்தாலோசித்து முடிவெடுக்க வேண்டும்.

கடைகளை திறக்கும் நேரத்தை குறைத்தால் கூட்டம் அதிகமாகிவிடும். எனவே, முதல்வராக பொறுப்பேற்கும் திமுக தலைவர் ஸ்டாலின், வணிகர்களுடன் கலந்தாலோசித்து கடைகள் திறந்திருக்கும் நேரத்தை நீட்டிக்க வேண்டும். மாலை 3 மணி வரையாவது திறக்க அனுமதிக்க வேண்டும்.

ஜிஎஸ்டி வரி விதிப்பை முறைப்படுத்தி, எளிமைப்படுத்தி அடித்தட்டு வணிகர்களும் புரிந்துகொண்டு வரி செலுத்திட உரிய மாற்றங்கள் கொண்டுவர வேண்டும். ஜிஎஸ்டி உரிமம் பெற்ற வணிகர்கள் செலுத்தும் வரிக்கு ஏற்ப குறிப்பிட்ட சதவீதம் மாதாந்திர ஊதியமாக வழங்க வேண்டும். இரவு நேரங்களில், பேரிடர் கால கட்டுப்பாடுகளை காரணம் காட்டி உணவகங்கள் மற்றும் டீக்கடைகளை போலீஸார் மூட அச்சுறுத்துவதை தடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.


இவ்வாறு அவர் கூறினார்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments