திருவாடானை தொகுதியில் ஒரே குடும்பத்தை சேர்ந்த தாத்தா, தந்தை, மகன் 10-வது முறை எம்எல்ஏவாக தேர்வு


திருவாடானை தொகுதியில் காங்கிரஸ் சட்டப்பேரவை தலைவராக உள்ள கே.ஆர்.ராமசாமியின் மகன் வெற்றி பெற்றுள்ளார். இதன் மூலம் தாத்தா, தந்தை, மகன் என ஒரே குடும்பத்தினர் 10-வது முறையாக எம்எல்ஏவாக தேர்வாகியுள்ளனர்.

ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள 4 தொகுதிகளில் திமுக கூட்டணியில் திருவாடானை சட்டப்பேரவை தொகுதி மட்டும் காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்பட்டது. இதில் தற்போது காங்கிரஸ் கட்சியின் சட்டப்பேரவை தலைவராக உள்ள கே.ஆர்.ராமசாமியின் மகன் ஆர்எம்.கருமாணிக்கம் போட்டியிட்டு, 13,852 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். திருவாடானை தொகுதியில் பாரம்பரியமாக காங்கிரஸ் வேட்பாளர் களே வெற்றி பெற்று வந்துள்ளனர்.

1952 முதல் 2016 வரை 15 முறை நடந்த சட்டப்பேரவை தேர்தலில் திருவாடானை தொகுதியில் சுயேச்சை வேட்பாளர்கள் மற்றும்சுதந்திரா கட்சியினர் தலா 2 முறையும், காங்கிரஸ் 5 முறையும், திமுக மற்றும் தமாகா தலா 2 முறையும், அதிமுக 2 முறையும் (அதிமுக சார்பில் போட்டியிட்ட முக்குலத்தோர் புலிப்படை கருணாஸ் உட்பட) வெற்றி பெற்றுள்ளன.

இதுவரை நடந்த தேர்தல்களில் கே.ஆர்.ராமசாமியின் தந்தை கரியமாணிக்கம் அம்பலம் சுதந்திரா கட்சி மற்றும் காங்கிரஸ் சார்பில்1957, 1962, 1967, 1977 தேர்தல்களில் திருவாடானை தொகுதியில் போட்டியிட்டு 4 முறை எம்எல்ஏவாகியுள்ளார்.

அடுத்ததாக அவரது மகன் கேஆர்.ராமசாமி காங்கிரஸ், தமாகா கட்சிகளில் 1989, 1991,1996, 2001, 2006 ஆகிய தேர்தல்களில் போட்டியிட்டு 5 முறை திருவாடானை எம்எல்ஏவானார்.

தற்போது கே.ஆர்.ராமசாமியின் மகன், 34 வயதான கருமாணிக்கம் திருவாடானை தொகுதியின் எம்எல்ஏவாக ஆகியுள்ளார்.

இதன்மூலம் இத்தொகுதியில் கே.ஆர்.ராமசாமியின் தந்தை கரியமாணிக்கம் அம்பலம் தொடங்கி கே.ஆர்.ராமசாமி, இவரது மகன் கருமாணிக்கம் என இவர்களது குடும்பத்தினரே 10 முறை எம்எல்ஏவாகி சாதனை படைத்துள்ளனர்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments