முழு ஊரடங்கில் புதிய தளர்வுகள் என்னென்ன?- தமிழக அரசு அறிவிப்பு


கரோனா பரவலைக் கட்டுப்படுத்த தமிழகம் முழுவதும் மே 10-ம் தேதி தொடங்கி வரும் 24-ம் தேதி வரை முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில், தொழில் மற்றும் வணிக சங்க அமைப்புகளின் கோரிக்கையை ஏற்று நிபந்தனைகளுடன் பழ வியாபாரம் மேற்கொள்ளவும், நாட்டு மருந்துக் கடைகள் இயங்கவும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. அதேபோல், இன்னும் சில தளர்வுகளையும் தமிழக அரசு அறிவித்திருக்கிறது.

இது தொடர்பாகத் தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

''கரோனா நோய்த் தொற்றுப் பரவலைத் தடுப்பதற்காக நடைமுறைப்படுத்தப்பட உள்ள முழு ஊரடங்கைச் செயல்படுத்துவது குறித்து தொழில் மற்றும் வணிக சங்க அமைப்புகளுடன் கடந்த 9-5-2021 அன்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில்
சென்னையில் கலந்தாலோசனைக் கூட்டம் ஒன்று நடந்தது.

அந்தக் கலந்தாலோசனைக் கூட்டத்தின்போது தெரிவிக்கப்பட்ட கருத்துகளின் அடிப்படையில் பின்வரும் தளர்வுகள் மற்றும் நடவடிக்கைகள் அறிவிக்கப்படுகின்றன.

1. காய்கறி, மலர்கள் ஆகியவற்றை விற்பனை செய்ய அளிக்கப்பட்ட அனுமதியைப் போன்று, அதே நிபந்தனைகளுடன் பழ வியாபாரமும் மேற்கொள்ளலாம் என்று அறிவிக்கப்படுகிறது.

2. அனைத்துத் தொழில் நிறுவனங்கள் ஊரடங்கு காலத்தில் தொழிற்சாலைகளில் பிற பராமரிப்புப் பணிகளை மேற்கொள்வதற்கு ஒரு நாள் மட்டும் குறைந்த அளவிலான பணியாளர்களுடன் மேற்கொள்ள அனுமதி வழங்கப்படுகிறது.

3. இந்த ஊரடங்கு காலத்தில் செயல்பட அனுமதிக்கப்பட்ட தொடர் உற்பத்தி தொழிற்சாலைகள் மற்றும் அத்தியாவசியப் பொருட்களை உற்பத்தி செய்யும் தொழிற்சாலைகள் (Continuous Process Industries manufacturing Essential items) இயங்குவதில் ஏற்படும் சிக்கல்களுக்கு உதவும் வகையில் ஒரு “சேவை மையம்’’ (Helpline) 24 மணி நேரமும் செயல்படும் வகையில் அமைக்கப்படும்.

சென்னையிலுள்ள தொழில் வழிகாட்டி மைய அலுவலகத்தில் இந்த சேவை மையம் இயங்கும். இதற்கான தொலைபேசி எண்கள் 96771-07722, 99943-39191, 78239-28262, 96291-22906, 99629-93496, 99629-93497.

4. ஆங்கில மருந்துக் கடைகள் இயங்க அளிக்கப்பட்ட அனுமதியைப் போன்று அதே நிபந்தனைகளுடன், நாட்டு மருந்துக் கடைகளும் இயங்கலாம் என்று அறிவிக்கப்படுகிறது''.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments