எல்லையில் விநோதம்: ஒரே சாலையில் புதுச்சேரி பகுதியில் கடைகள் திறப்பு, தமிழகப் பகுதியில் கடையடைப்புதமிழக - புதுச்சேரி எல்லையில் ஒரே சாலையில் புதுச்சேரி பகுதியில் கடைகள் திறக்கப்பட்டு பரபரப்பாகவும், தமிழகப் பகுதியில் கடைகள் அடைக்கப்பட்டு வெறிச்சோடியும் காணப்படும் விநோதக் காட்சி அரங்கேறி வருகிறது.

புதுச்சேரி பகுதி தமிழகத்தையொட்டி அமைந்துள்ளது. இதில் தமிழகப் பகுதிகளும், புதுச்சேரி பகுதிகளும் மாறி மாறி வரும் தன்மை உடையவை. புதுச்சேரி எல்லைப்பகுதிக்குள் தமிழக கிராமங்களும் உள்ளன.

கரோனா பரவலையொட்டி தமிழகத்தில் முழு ஊரடங்கு நடைமுறையில் வந்துள்ளது. புதுச்சேரியில் பகல் 12 மணி வரை கடைகள் திறந்திருக்கும் பகுதி நேர ஊரடங்கு அமலில் உள்ளது. கிராமப்பகுதிகளில் இந்த ஊரடங்கால் பயனில்லை என்கின்றனர். உதாரணமாக திருக்கனூரில் ஒரே கடைவீதியில் உள்ள புதுச்சேரி பகுதியில் கடைகள் திறந்திருந்தன. அதன் எதிரே தமிழகப் பகுதியிலுள்ள கடைகள் மூடப்பட்டிருந்தன.

இந்தக் கடைவீதி புதுச்சேரி- விழுப்புரம் சாலையில் அமைந்துள்ளது. ஒரு பகுதியில் திருக்கனூர் பகுதியில் கடைகள் திறந்திருக்கும் பகுதி புதுச்சேரியில் வருகிறது. சாலையின் மற்றொரு பகுதி விழுப்புரம் மாவட்டம் சித்தலம்பட்டு பகுதியைச் சேர்ந்தது. இதனால் புதுச்சேரி பகுதியில் வாகனப் போக்குவரத்து பரபரப்பாகவும், தமிழகப் பகுதியில் கடைகள் மூடப்பட்டு வாகனங்கள் ஏதுமின்றியும் காணப்பட்டது.

இதையடுத்துத் தமிழக மக்கள் பொருட்களை வாங்க எளிதாக புதுச்சேரி பகுதிக்கு வந்து சென்றனர். போலீஸார் முடிந்த வரையில் அவர்களை அனுப்பி வைத்தனர். சிலரிடம் கரோனா விழிப்புணர்வு வாசகங்களைத் தந்து படிக்க வைத்து அனுப்பினர்.

இதுதொடர்பாக இப்பகுதி மக்கள் கூறுகையில், "தமிழகப் பகுதியில் முழு ஊரடங்கு உள்ளது. புதுச்சேரி பகுதியில் கடைகள் திறக்கப்பட்டுள்ளன. தமிழக மக்கள் இங்கு 12 மணி வரை அதிகளவில் வருகின்றனர். தற்போது புதுச்சேரியில் கரோனா தொற்று அதிகளவில் உள்ளது. இரு மாநிலங்களிலும் ஒரே வகையில் ஊரடங்கைப் பின்பற்றினால்தான் கரோனாவைக் கட்டுப்படுத்த முடியும்" என்று தெரிவித்தனர்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments