தனியார் மருத்துவமனைகளில் இலவச கரோனா சிகிச்சை: யாரெல்லாம் தகுதியானவர்கள்; எப்படிப் பெறலாம்?- முழு விவரம்





தமிழகத்தின் தற்போதைய முதல்வராகப் பொறுப்பேற்றுள்ள திமுக தலைவர் ஸ்டாலின், முதலமைச்சரின் விரிவான காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் அனைத்து வகையான நோய் சிகிச்சை செலவுகளையும் தனியார் மருத்துவமனைகளுக்கு அரசு வழங்கும் என்று அறிவித்துள்ளார்.

இந்நிலையில் முதலமைச்சரின் விரிவான காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் சிகிச்சை பெற யாரெல்லாம் தகுதியானவர்கள்? காப்பீட்டுத் திட்ட அட்டையை இதுவரை பெறாதவர்கள் எப்படிப் பெறுவது என்று கேள்விகள் எழுந்துள்ளன.

தமிழகத்தில் உள்ள ஏழை எளிய மக்களுக்கு மேம்படுத்தப்பட்ட உயர்தரமருத்துவ வசதிகளை அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகள் மூலமாகக் கட்டணமில்லாமல் வழங்குவதற்காகவும், அனைவருக்கும் சுகாதார வசதி கிடைக்க வேண்டும் என்பதற்காகவும் தமிழக அரசால் முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டுத் திட்டம் தொடங்கப்பட்டு, காப்பீட்டு நிறுவனம் மூலம் செயல்படுத்தப்பட்டு வருகின்றது. இத்திட்டத்தின் மூலம் சுமார் 1.57 கோடி குடும்பங்கள் பயன்பெறுவர்.

இந்தத் திட்டத்தின்கீழ் பச்சிளம் குழந்தைகள் முதல் முதியவர் வரை அனைத்து வயதினரும் சிகிச்சை பெறலாம். இதில் வழக்கமான காப்பீட்டுத் திட்டங்களைப் போல அல்லாமல், மருத்துவ சிகிச்சைகள் மட்டுமல்லாமல் நோய் கண்டறியும் சோதனைகளும் தொடர் சிகிச்சைகளும் வழங்கப்படும்.

யாரெல்லாம் தகுதியானவர்கள்?

ஆண்டு வருமானம் ரூ.72 ஆயிரத்துக்கும் குறைவாக இருப்பவர்கள் அரசின் காப்பீட்டு அட்டையைப் பெறத் தகுதியானவர்கள்.

என்னென்ன சான்றுகள் தேவை?

* குடும்ப அட்டை
* வருமானச் சான்று (கிராமமாக இருந்தால் கிராம நிர்வாக அலுவலரிடம் இருந்தும், சென்னை போன்ற மாநகரங்களில் வட்டாட்சியர் அலுவலகத்தில் உள்ள வருவாய் அலுவலரிடம் இருந்தும் வருமானச் சான்று பெற வேண்டும்)
* ஆதார் அட்டை

மருத்துவக் காப்பீட்டு அட்டையைப் பெறுவது எப்படி?

குடும்ப அட்டை, வருமானச் சான்று மற்றும் ஆதார் அட்டையை மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்தில் இயங்கும் காப்பீட்டு அடையாள அட்டை வழங்கும் மையத்தில் சமர்ப்பித்து காப்பீட்டு அட்டையைப் பெற்றுக்கொள்ளலாம். பழைய மருத்துவ காப்பீட்டு அடையாள அட்டையை அதே மையத்தில் சமர்ப்பித்துப் புதிய அட்டையை பெற்றுக்கொள்ளலாம்.

எவ்வளவு நிதி வரம்பு?

இந்தத் திட்டத்தின்படி அரசு மருத்துவமனைகள் மற்றும் காப்பீட்டுத் திட்ட இணையதளத்தில் உள்ள அங்கீகரிக்கப்பட்ட தனியார் மருத்துவமனைகளில் இலவச சிகிச்சை பெறலாம். ஒரு குடும்பத்துக்கு (ஓர் அட்டைக்கு) அதிகபட்சம் ரூ.5 லட்சம் வரையிலான சிகிச்சைச் செலவை அரசு ஏற்கும்.

கரோனாவுக்கு என்னென்ன சிகிச்சைகள் இலவசம்?

* ஆர்டிபிசிஆர் கரோனா பரிசோதனை

* தீவிரமில்லாத கரோனா நோய்க்கான மருத்துவ சிகிச்சை

* செயற்கைச் சுவாச உதவியுடன் கூடிய தீவிர மருத்துவ சிகிச்சை

* அவசர மருத்துவ சிகிச்சை

தனியார் மருத்துவமனைகளில் இலவச கரோனா சிகிச்சைக்கு, சிகிச்சையின் தன்மை, கால அளவு ஆகியவற்றைப் பொறுத்து வெவ்வேறு பேக்கேஜுகள் நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக முதலமைச்சரின் விரிவான காப்பீட்டுத் திட்டத்தின் கோவை மாவட்ட ஒருங்கிணைப்பாளர் சம்பத் குமார் தெரிவிக்கிறார்.

இதுகுறித்து மேலும் அவர் கூறும்போது, ’’கோவையில் மட்டும் கரோனா சிகிச்சை அளிக்க 31 தனியார் மருத்துவமனைகள் உள்ளன. அதே வேளையில் அரசு மருத்துவமனையிலேயே உயர் மருத்துவ சிகிச்சைகள் வழங்கப்படுகின்றன. போதிய அளவு ஆக்சிஜன் வசதி கொண்ட படுக்கைகள் உள்ளன. தரமான சிகிச்சைக்காகத் தனியாரிடம்தான் போகவேண்டும் என்பதில்லை.

அதேநேரத்தில் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற விரும்பும் கரோனா தொற்றாளர்கள், கரோனா சிகிச்சைக்காக அரசு வழங்கியுள்ள 16 வகையான பேக்கேஜுகளில் ஒன்றைத் தேர்வு செய்ய வேண்டும். மிதமான சிகிச்சை முதல் தீவிர சிகிச்சை வரை, முதல் நாள் முதல் 5 நாட்கள் வரை, அதிகபட்சமாக 14 நாட்கள் வரை என ஒவ்வொன்றுக்கும் வெவ்வேறு வித பேக்கேஜ்கள் உள்ளன. பொது மருத்துவம், நுரையீரல் சிகிச்சை எனவும் இதில் பிரிவுகள் உள்ளன

இவற்றில் தனக்கு தேவையான சிகிச்சையைத் தொற்றாளரோ அவரின் குடும்பத்தினரோ தேர்ந்தெடுத்துக்கொள்ள வேண்டும். தனியார் மருத்துவமனைக்குச் செல்லும் முதல் நாளிலேயே காப்பீட்டுத் திட்டத்தை பயன்படுத்தி சிகிச்சை பெறுகிறோம் என்பதைச் சொல்லிவிட்டு மருத்துவமனையில் சேர்ந்தால் எவ்விதக் கட்டணமும் செலுத்த வேண்டியதில்லை. அரசே முழு சிகிச்சைக் கட்டணத்தையும் ஏற்கும்.

தவிர்க்கமுடியாத நேரங்களில், தொற்று பாதித்த 6-ம் நாளில் இருந்தும் கரோனா சிகிச்சையைக் காப்பீட்டுத் திட்டத்தின் மூலம் பெறலாம்’’ என்று சம்பத் குமார் தெரிவித்தார்.

பேக்கேஜ் குறித்த விவரங்களைக் காண: https://www.cmchistn.com/covidPackage.php

அங்கீகரிக்கப்பட்ட தனியார் மருத்துவமனைகளை அறிந்துகொள்ள: https://www.cmchistn.com/covid_empanlled_hospital.php

மே 10ம் தேதி முதல் ஊரடங்கு அமல்படுத்தப்பட உள்ளதால் முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்ட அட்டையைப் புதிதாகப் பெற விரும்புபவர்கள் மற்றும் புதுப்பிக்க விரும்புபவர்கள் 1800 425 399 என்ற எண்ணை அழைத்தது, தங்களின் மாவட்டத்தைக் கூற வேண்டும். அவர்கள் அளிக்கும் மாவட்ட அதிகாரியின் எண்ணைப் பெற்றுக்கொண்டு நேரத்தைத் தெரிந்துகொண்டு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு செல்லுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

கூடுதல் விவரங்களுக்கு: கட்டணமில்லாத் தொலைபேசி எண்- 1800 425 3993 ( 24 மணி நேரமும் செயல்படும்)

க.சே.ரமணி பிரபா தேவி, தொடர்புக்கு: ramaniprabhadevi.s@hindutamil.co.in

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments