புல் செதுக்க பிரத்யேக கருவி வடிவமைப்பு: இளைஞர் சாதனை






புதுக்கோட்டை மாவட்டம் கொத்தமங்கலத்தில் புல் செதுக்குவதற்கு பிரத்யேக கருவியை இளைஞர் ஒருவர் வடிவமைத்துள்ளார்.

புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே கொத்தமங்கலத்தைச் சேர்ந்தவர் எம்.வீரமணி (38). இவர், ஆழ்துளைக் கிணறுகளைத் தூர்வாருதல், பழுது நீக்குதல் போன்ற பணிகளை மேற்கொண்டு வருகிறார். இந்நிலையில், தனது சொந்த முயற்சியினால் குழந்தைகளுக்குத் தானியங்கி தொட்டில் ஆட்டும் கருவியை வடிமைத்துள்ளார். மேலும், ஆழ்துளைக் கிணறுகளுக்குள் தவறி விழும் பொருட்களை எடுப்பதற்குப் பல்வேறு விதமான கருவிகளை வடிவமைத்துள்ள இவர், இருசக்கர வாகனங்களில் கட்டி இழுத்துச் செல்வதற்கு சுமை ஏற்றும் இழுவை வண்டிகளையும் வடிவமைத்துள்ளார்.





புதிதாக வடிவமைக்கப்பட்டுள்ள புல் செதுக்கி.
அந்த வகையில், காய்ந்த தோட்டம் மற்றும் தரிசு நிலத்தில் முளைத்திருக்கும் புல்லைச் செதுக்குவதற்கு பிரத்யேக கருவியை வடிவமைத்துப் பயன்படுத்தி வருகிறார்.

சுமார் 5 அடி உரமுள்ள ஒரு கம்பியின் மேல் பகுதியில் கைப்பிடி ஒன்றும், அதன் கீழ் பகுதியில் புல் செதுக்குவதற்கு உரிய ஒரு தட்டையான தகடும் பொருத்தப்பட்டுள்ளது.

எளிதில் நகர்த்துவதற்காக பெரிய சைக்கிளின் ஒரு சக்கரமும் பொருத்தப்பட்டுள்ளது. இதை, நின்றுகொண்டே இயக்கி புல் செதுக்கலாம். சுமார் முக்கால் அடி அகலத்தில் உள்ள அனைத்து விதமான புற்களையும் செதுக்கிவிடுகிறது. இதேபோன்று, அப்பகுதி மக்களும் இந்த நவீனப் புல் செதுக்கும் கருவியை வடிவமைத்து தரச் செய்து பயன்படுத்தத் தொடங்கியுள்ளனர்.

புதிய கருவி மூலம் புல் செதுக்கும் பணியில் ஈடுபட்ட வீரமணி.
இதுகுறித்து எம்.வீரமணி கூறுகையில், "இப்பகுதியில் ஆடு, மாடுகளுக்குப் புல் செதுக்குவதற்கு உழவாரம் எனும் கருவி பயன்படுத்தப்பட்டு வருகிறது. தரையில் அமர்ந்துதான் உழவாரத்தின் மூலம் செதுக்க முடியும். இது, பெரும்பாலும் ஆண்களுக்குச் சாத்தியம் இல்லை என்பதால் இதற்கு மாற்றாக புதிய கருவி வடிவமைக்கப்பட்டுள்ளது.

ஒரே நேரத்தில், சுமார் முக்கால் அடி அகலத்தில் உள்ள புற்களைச் செதுக்கிவிடும். அதோடு, தரையும் சீராகிவிடும். தண்ணீர் பாய்ச்சுவதற்கும் வசதியாக இருக்கும். விரைவாகப் புல் செதுக்கிவிடலாம்" என்றார்.


எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments