நெடுவாசல் போராட்ட வழக்குகளை வாபஸ் பெற நடவடிக்கை! அமைச்சர் மெய்யநாதன் தகவல்!!நெடுவாசல் போராட்ட வழக்குகளை வாபஸ் பெற நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் மெய்யநாதன் தெரிவித்தார்.

புதுக்கோட்டை மாவட்டம் பெருங்களூரில் சுற்றுச்சூழல் துறை அமைச்சர் மெய்யநாதன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது, அவர் கூறியதாவது:-

கொரோனாவில் இருந்து பொதுமக்களை மீட்க ஒட்டுமொத்தமாக களத்தில் இறங்கி உள்ளோம். கொரோனா முதல் அலையில் ஆக்சிஜன் தேவை என்பது அதிக அளவு இல்லை. தற்போது 2-வது அலையில் ஆக்சிஜன் தேவை அதிகரித்து காணப்படுகிறது. முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் துரித நடவடிக்கையால் தமிழகத்தில் ஆக்சிஜன் தட்டுப்பாடு இல்லை என்ற நிலையை உருவாக்கி உள்ளார்.

தமிழகத்தில் 15 தினங்களுக்குள் கொரோனா தொற்று கட்டுக்குள் கொண்டு வரப்படும். புதுக்கோட்டை மாவட்டம் நெடுவாசலில் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை மத்திய அரசு கொண்டு வந்தபோது நேரடியாக களத்தில் இறங்கி தி.மு.க. போராடியது. நெடுவாசல் போராட்டத்தின் போது போடப்பட்ட வழக்குகளை வாபஸ் பெறுவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படும். முதல்-அமைச்சரின் கவனத்திற்கு கொண்டு சென்று அதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படும். என் மீது கூட வழக்குகள் போடப்பட்டு உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

புதுக்கோட்டையில் நேற்று மாலை அதிகாரிகளுடன் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து அமைச்சர் மெய்யநாதன் ஆய்வுக்கூட்டம் நடத்தினார். இதில் கலெக்டர் உமாமகேஸ்வரி மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

முன்னதாக மழையூர் ஆரம்ப சுகாதார நிலையத்தில் தடுப்பூசி போடும் பணியை அமைச்சர் மெய்யநாதன் ஆய்வு செய்தார். தொடர்ந்து அங்கு செயல்பட்டுவரும் சித்த மருத்துவ பிரிவை பார்வையிட்டார். பின்னர் கறம்பக்குடி அரசு மருத்துவமனையில் தடுப்பூசி முகாமை பார்வையிட்டார். மருத்துவமனைக்கு சிகிச்சை பெற வந்த புறநோயாளிகளிடம் தடுப்பூசி போட்டுகொள்ளும்படி வலியுறுத்தினார். தொடர்ந்து சிறப்பாக மருத்துவ சேவை ஆற்றிவரும் டாக்டர்கள், செவிலியர்கள், மருத்துவ ஊழியர்களுக்கு சால்வை அணிவித்து பாராட்டினார்.

இதேபோல் கந்தர்வகோட்டை அரசு மருத்துவமனை, ஆதனக்கோட்டை, வெள்ளாளவிடுதி ஆரம்ப சுகாதார நிலையம் மற்றும் புதுப்பட்டி அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் உள்ள கொரோனா தனிமைப்படுத்தும் மையத்தை அமைச்சர் மெய்ய நாதன் ஆய்வு செய்தார். பின்னர் அவர் கூறும்போது, ஒரு நோயாளி அதிக பாதிப்புக்கு உள்ளாகி இருந்தால் அவரை உடனடியாக புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்ப வேண்டும் என்றார். அப்போது, தெற்கு ஒன்றிய தி.மு.க. செயலாளர் பரமசிவம், வடக்கு ஒன்றிய செயலாளர் தமிழ் ஐயா, நகர செயலாளர் ராஜா, ஒன்றியக்குழு தலைவர் மாலா ராஜேந்திரதுரை, ஒன்றியக் குழு உறுப்பினர் ராஜேந்திரன் மற்றும் அதிகாரிகள், கட்சி பிரமுகர்கள் ஆகியோர் உடனிருந்தனர்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments