புதுக்கோட்டை:"மக்களுக்கு சிறப்பான சிகிச்சை கிடைக்கணும்"- சுற்றுச்சூழல்துறை அமைச்சர் வைத்த கோரிக்கை!


புதுக்கோட்டை மாவட்டத்தில் மருத்துவப் பணியாளர்கள் பற்றாக்குறை இருந்துவருகிறது. மருத்துவ அதிகாரிகள் 50 பேர், செவிலியர்கள் 100 பேர், லேப் டெக்னீஷியன் 20 பேர் உட்பட இதர மருத்துவப் பணியாளர்களைப் பணி நியமனம் செய்து பற்றாக்குறையைப் போக்க வேண்டும்.

நாடு முழுவதுமே கொரோனா வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துவருகிறது. புதுக்கோட்டை மாவட்டத்திலும் ஒவ்வொரு நாளும் தொற்றால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே போகிறது. இந்தநிலையில், புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை கொரோனா சிகிச்சை மையத்தில் தீவிர சிகிச்சைப் பிரிவில் 450 படுக்கைகள் உள்ளன. இவற்றில், 320 படுக்கைகளுக்கு ஆக்ஸிஜன் வசதி உள்ளது. உயிர்காக்கும் மருந்துகளும் பற்றக்குறையாக உள்ளன. எனவே, தொற்றாளர்களின் எண்ணிக்கை கூடக் கூட தேவையும் அதிகரிக்கும். இது பற்றி அறிந்த புதுக்கோட்டையைச் சேர்ந்த சுற்றுச்சூழல் கால நிலைத்துறை, விளையாட்டுத்துறை அமைச்சர் மெய்யநாதன், மாநில மருத்துவம்- மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியனைச் சந்தித்து மனு கொடுத்தார்.

அந்த மனுவில், "புதுக்கோட்டை மாவட்டத்தில் கொரோனா தொற்றாளர்களுக்குச் சிகிச்சையளிக்க ஆக்ஸிஜன், ரெம்டெசிவிர், ஆக்ஸிஜன் கண்காணிப்புக் கருவிகளைக் கூடுதலாக வழங்க வேண்டும். நாள் ஒன்றுக்கு 3,720 லிட்டர் ஆக்ஸிஜன் தேவைப்படுகிறது. ஆனால், 2,500 லிட்டர்தான் கையிருப்பு உள்ளது. தற்போது வந்துள்ள 6,100 லிட்டர் போக தேவையான 12,000 லிட்டருக்கு மேலும் 600 லிட்டர் கூடுதலாகத் தேவை. 198 ரெம்டெசிவிர் மருந்து கையிருப்பு உள்ள நிலையில், 2,000 ரெம்டெசிவிர் மருந்துகள் தேவை. மருத்துவமனைக்குக் கூடுதலாக 300 ஆக்ஸிஜன் கண்காணிப்பு மீட்டர்கள் தேவைப்படுகின்றன" என்று கோரிக்கை வைத்தார். இந்தக் கோரிக்கையை ஏற்றுக்கொண்ட மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர், புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்குக் கூடுதலாக 6,000 லிட்டர் ஆக்ஸிஜன் வழங்க உத்தரவிட்டார்.

உடனே 6,000 லிட்டர் ஆக்ஸிஜன் கொண்டு வந்து நிரப்பப்பட்டது. மேலும், கூடுதலாக உயிர்காக்கும் மருந்துகள் அதிகமாக வழங்குவதுடன், ஆக்ஸிஜன் வசதியுடன் கூடிய படுக்கைகள் வழங்கப்படுவதாகவும் உறுதியளித்திருந்தார். இதற்கிடையேதான், மருந்துகள் வழங்கப்பட்டாலும், மாவட்டத்தில் நோயாளிகளுக்கு சிகிச்சைக்குப் போதுமான மருத்துவர்கள், செவிலியர்கள் பற்றாக்குறை இருந்துவருகிறது. மருத்துவ அதிகாரிகள் 50 பேர், செவிலியர்கள் 100 பேர், லேப் டெக்னீஷியன் 20 பேர் உட்பட இதர மருத்துவப் பணியாளர்களைப் பணி நியமனம் செய்து பற்றாக்குறையைப் போக்க வேண்டும். மாவட்ட மக்களுக்கு உரிய நேரத்தில், தரமான சிகிச்சை கிடைக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். கோரிக்கையை ஏற்ற மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சரும் தேவையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறியிருக்கிறார்.

சுற்றுச்சூழல்,  கால நிலைத்துறை அமைச்சர் மெய்யநாதன்
சுற்றுச்சூழல், கால நிலைத்துறை அமைச்சர் மெய்யநாதன்
இது பற்றிக் கூறிய சுற்றுச்சூழல், கால நிலைத்துறை அமைச்சர் மெய்யநாதன், "கொரோனா தொற்று தடுப்பு நடவடிக்கைகள் குறித்து மாவட்ட ஆட்சியர் மற்றும் மருத்துவமனை டீன் ஆகியோரிடம் கருத்துகளைக் கேட்ட பின் தேவையறிந்து மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சரிடம் கோரிக்கை வைத்துள்ளேன். உடனடியாக ஆக்ஸிஜன் கிடைத்திருக்கிறது. மற்ற கோரிக்கைகளையும் விரைந்து நிறைவேற்றுவதாகக் கூறியிருக்கிறார். மாவட்ட மக்கள் பலரும் என்னிடம் கோரிக்கை வைக்கின்றனர். மாவட்ட மக்களின் தேவையறிந்து, உடனே என்னால் முடிந்தவற்றைச் செய்கிறேன். தொடர்ந்து செய்யணும்" என்கிறார்.எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments