புதுக்கோட்டை: குடிநீர் குளத்தில் மருத்துவ கழிவு கலப்பதால் பொதுமக்கள் அச்சம்
புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் இருந்து வெளியாகும் கழிவு நீர் குடிநீர் குளத்தில் கலப்பதால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர்.

மருத்துவமனையில் இருந்து வெளியாகும் கழிவு நீர்

புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை 2016- ஆம் ஆண்டு அதிமுக ஆட்சியில் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டது. மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து  வரும் பொதுமக்கள் அரசு மருத்துவமனை மூலம் சிகிச்சை பெற்று பயனடைகின்றனர். இந்நிலையில் மருத்துவமனை தொடங்கப்பட்ட காலத்திலிருந்தே அதிகளவிலான கழிவு நீர் வெளியேற்றப்படுகிறது. இதனால், அருகிலுள்ள கிராமங்கள் சுகாதார சீர்கேட்டிற்கு தள்ளப்பட்டுள்ளதாக புகார் எழுந்துள்ளது.

புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையிலிருந்து  வெளியாகும் மருத்துவ கழிவுநீர் மற்றும்  பிணக்கூறாய்வு அறையிலிருந்து வெளிவரும் கழிவுநீர், மனிதக்கழிவுகள் அனைத்தும் துர்நாற்றம் மிக்க கழிவு தண்ணீர், பக்கத்தில் உள்ள கிராமங்களான புது ராசாபட்டி குடிநீர் குளத்திலும், முள்ளூர் பசுக்குளம் பாசனகுளத்திலும், தென்னத்திராயன்பட்டி பாசனகுளத்திலும், கலக்கின்றது.

இதனால் செய்வதறியாது திகைத்து நிற்கும் கிராம மக்கள் , சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு புகார் செய்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றும் முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கரிடம் மனு அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என கூறினர். இதையடுத்து கழிவுநீர் கலப்பதை தடுக்க மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து நம்மிடையே பேசிய மதியழகன்,  வேளாண்மையை நம்பி கிராமத்தில் கால்நடைகளுடன் வசித்து வரும் மக்களுக்காக, மருத்துவ கழிவுநீர் குளங்களில் கலப்பதை  தடுத்து நிறுத்தி,  பொதுமக்களின் சுகாதாரத்தை உறுதிப்படுத்த வேண்டும் என கேட்டுக்கொண்டார். பொதுமக்களின் வாழ்வாதாரத்தை தூய்மையானதாக்கி, வாழ வழிவகை செய்ய மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார்

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments