பொய்யாதநல்லூர் பகுதியில் செல்லும் பாலாற்றில் ஆக்கிரமிப்புகளை அகற்றக்கோரிய வழக்கு: புதுக்கோட்டை கலெக்டர் பதில் அளிக்க, மதுரை ஐகோர்ட்டு உத்தரவு



புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்த யூனுஸ், மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது:-
புதுக்கோட்டை மாவட்டம் விவசாயம் சார்ந்த பகுதி. பாலாற்றின் வரும் தண்ணீரை வைத்து ஆவுடையார்கோவில் தாலுகா பொய்யாதநல்லூர் பகுதி மக்கள் விவசாயம் செய்து வருகின்றனர்.

சிலர் பாலாற்றில் ஆக்கிரமிப்பு செய்து மணலை கொட்டி மேடாக்கி உள்ளனர். இதனால் பாலாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டால் நீர் முழுவதும் ஊருக்குள் புகுந்து விவசாய நிலங்கள் பெருமளவு சேதம் அடையும். மேலும் பொய்யாதநல்லூர் கிராமத்தை சேர்ந்த சிலர் பாலாற்றில் ஆக்கிரமிப்பு செய்து வீட்டுமனைகளாக மாற்றி வியாபாரம் செய்து வருகின்றனர்.

இதனால் பாலாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டால் பொதுமக்களுக்கு பெரும் பாதிப்பு ஏற்பட்டு உயிரிழப்பு ஏற்பட வாய்ப்பு உள்ளது. இந்த ஆக்கிரமிப்புகளை அகற்ற கோரி உயர் அதிகாரிகளுக்கு மனு அளித்தும் எந்த நடவடிக்கையும் இல்லை. எனவே பொய்யாதநல்லூர் பகுதியில் செல்லும் பாலாற்றில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறியிருந்தார். 

இந்த மனு நீதிபதிகள் சிவஞானம், ஆனந்தி ஆகியோர் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், பாலாற்றில் இவ்வளவு ஆக்கிரமிப்புகள் நடந்தது எப்படி? என கேள்வி எழுப்பினர். பின்னர் இந்த வழக்கு குறித்து புதுக்கோட்டை மாவட்ட கலெக்டர் பதில் அளிக்கும்படி நீதிபதிகள் உத்தரவிட்டு, விசாரணையை செப்டம்பர் மாதத்துக்கு ஒத்திவைத்தனர்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments