கோவிஷீல்டு தடுப்பூசியின் 2 ‘டோஸ்’களுக்கு இடையேயான கால இடைவெளியில் மாற்றமா? விவாதங்கள் நடப்பதாக மத்திய அரசு அறிவிப்பு!கோவிஷீல்டு தடுப்பூசியின் 2 ‘டோஸ்’களுக்கு இடையேயான கால இடைவெளியை மாற்றலாமா என்பது தொடர்பாக விவாதங்கள் நடப்பதாக மத்திய அரசு கூறுகிறது.

இந்தியாவில் நடைமுறையில் இருந்து வருகிற இலவச தடுப்பூசி திட்டத்தில் கோவேக்சின், கோவிஷீல்டு ஆகிய இரு தடுப்பூசிகள் பயன்பாட்டில் இருக்கின்றன. கடந்த ஜனவரி 16-ல் இந்த திட்டம் தொடங்கியபோது இவ்விரு தடுப்பூசிகளின் முதல் டோஸ் போட்டு, 4 வாரங்கள் முடிந்த பின்னர் 2-வது டோஸ் போடப்பட வேண்டும் என அறிவிக்கப்பட்டது.
பின்னர் கோவிஷீல்டு தடுப்பூசியின் 2-வது டோஸ்-ஐ 12 முதல் 16 வார இடைவெளியில் போட்டுக்கொள்ளலாம் என கடந்த மாதம் 16-ந் தேதி அறிவிக்கப்பட்டது. ஆனாலும் கோவேக்சின் தடுப்பூசியின் 2-வது டோஸ்க்கான கால இடைவெளி மாற்றப்படவில்லை.

இந்த நிலையில், இது தொடர்பாக இந்தியாவின் கோவிட்-19 பணிக்குழுவின் தலைவர் டாக்டர் என்.கே. அரோரா கூறியதாவது:-
கோவிஷீல்டு தடுப்பூசியின் முதல் டோசுக்கும், 2-வது டோசுக்கும் இடையேயான இடைவெளியை 4 அல்லது 8 வாரங்களாக ஆக்கவேண்டுமா என்பது தொடர்பாக தற்போது விவாதிக்கப்பட்டு வருகிறது.

தடுப்பூசியின் ஒரு டோஸ் போடப்படுகிறபோதும், இரு டோஸ்களும் போடப்படுகிறபோதும் அதன் செயல் திறன் பற்றிய சான்றுகளும், அறிக்கைகளும் ஆராயப்பட்டு வருகின்றன. கோவிஷீல்டு தடுப்பூசியின் முதல் டோஸ் செலுத்தி, 2-வது டோஸ் செலுத்துவதற்கான கால இடைவெளி 4 முதல் 6 வாரங்கள் என்றிருந்ததை, 12-16 வாரங்கள் என மாற்றுவதற்கு அறிவியல் முடிவுகளின் அடிப்படையில்தான் தீர்மானிக்கப்பட்டது. இதில் நோய்த்தடுப்பு தொடர்பான தேசிய தொழில்நுட்ப ஆலோசனைக்குழு உறுப்பினர்களிடையே கருத்து வேறுபாடு இல்லை.

கொரோனாவும், தடுப்பூசியும் மிகவும் மாறக்கூடியவைதான். நாளையே ஒரு தடுப்பூசி தளம் நம் மக்களுக்கு ஒரு குறுகிய இடைவெளி சிறந்தது என்று சொன்னால், அதன் நன்மை 5-10 சதவீதம் ஆக இருந்தாலும், தகுதி அடிப்படையில் குழு முடிவு எடுப்போம். மற்றொரு புறம், தற்போதைய முடிவு நன்றாக உள்ளது என்றால் அது தொடரும்.
இந்த தடுப்பூசியின் 2-வது டோஸ்-ஐ 12 வார இடைவெளியில் போடுகிறபோது அதன் செயல்திறன் 65-88 சதவீத அளவுக்கு இருப்பதாக இங்கிலாந்து பொது சுகாதார அமைப்பு அறிவித்தது.

உருமாறிய ஆல்பா வைரசை அவர்கள் வெல்வதற்கு இது அடிப்படையாக அமைந்தது. 12 வார இடைவெளி என்பது நல்ல யோசனை, அதற்கான அறிவியல் அடிப்படை இருந்தது. எனவே நாங்களும் கோவிஷீல்டு தடுப்பூசியின் முதல் டோசுக்கும், 2-வது டோசுக்கும் இடையேயான இடைவெளி 12-16 வாரங்கள் ஆக்க முடிவு எடுத்தோம். எல்லோரும் துல்லியமாக 12 வாரங்களில் வர முடியாது என்பதால் இதில் ஒரு நெகிழ்வுத்தன்மை உள்ளது.

அறிவியல் அடிப்படையில் முடிவு எடுக்கிற திறந்த, வெளிப்படையான அமைப்பு நம்மிடம் உள்ளது. கோவிட் பணிக்குழு அந்த முடிவை எடுத்தது.

முதலில் 4 வார இடைவெளியில் 2-வது டோஸ் போட வேண்டும் என்று முடிவு எடுத்ததும் அப்போதிருந்த சோதனை தரவுகள் அடிப்படையில்தான்.

2 டோஸ்களுக்கு இடையேயான இடைவெளியை அதிகரிக்கிறபோது, தடுப்பூசியின் செயல்திறன் அதிகரிக்கிறது என பின்னர் தெரிய வந்தது. அதற்கு ஏற்ப முடிவு எடுத்தோம்.
இவ்வாறு அவர் கூறினார்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments