கூடுதல் கட்டணம் வசூல்: பள்ளிக் கல்வித்துறைக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு..!அரசுப் பள்ளிகளில் பெற்றோர் ஆசிரியர் கழக இணைப்புக் கட்டணம் 50 ரூபாயை விட கூடுதலாக விண்ணப்பக் கட்டணம் வசூலிக்கக் கூடாது என அனைத்து அரசுப் பள்ளிகளுக்கும் அறிவுறுத்தும்படி பள்ளிக் கல்வித்துறை ஆணையருக்கு 
உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மீறும் தலைமை ஆசிரியர் மீது நடவடிக்கை எடுக்கவும் உத்தரவிட்டுள்ளது.

செங்கல்பட்டு மாவட்டம், அனகாபுத்தூரில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியின் பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவராக உள்ள முரளிதரன், சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றைத் தாக்கல் செய்துள்ளார். அவர் தாக்கல் செய்துள்ள மனுவில், அனகாபுத்தூரில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் 6ஆம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்பு வரைக்கும் மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பக் கட்டணமாக 100 ரூபாய் வசூலிக்கப்படுகிறது.

பெற்றோர் ஆசிரியர் கழக இணைப்புக் கட்டணமான 50 ரூபாயைத் தவிர, கூடுதல் தொகையை மாணவர்களிடம் வசூலிக்கக் கூடாது எனக் கடந்த ஜூன் 18-ம் தேதி மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் உத்தரவிட்டுள்ள நிலையில், அதை மீறி, பள்ளித் தலைமை ஆசிரியை ஜீவா ஹட்சன், ஒவ்வொரு விண்ணப்பத்திற்கும் தலா 100 ரூபாய் வசூலிக்கிறார்.

கட்டணம் செலுத்த முடியமல் மாணவர்களின் கல்வி பாதிக்கப்படுவதால், இதுகுறித்து பள்ளிக் கல்வித்துறை ஆணையர் மற்றும் மாவட்டக் கல்வி அலுவலர் ஆகியோரிடம் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. கூடுதல் விண்ணப்பக் கட்டணம் வசூலிக்க இடைக்காலத் தடை விதிக்க வேண்டும். அவ்வாறு வசூலித்த தலைமை ஆசிரியை ஜீவா ஹட்சனைப் பணி நீக்கம் செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்” என மனுவில் கோரிக்கை வைத்துள்ளார்.

இந்த மனு நீதிபதி டி.கிருஷ்ணகுமார் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, அரசுத் தரப்பில், மனுதாரர் முரளிதரன் அனுப்பியதாகப் பள்ளிக் கல்வித்துறை ஆணையரிடமோ, செங்கல்பட்டு மாவட்டக் கல்வி அலுவலரிடமோ எந்த மனுவும் இல்லை. அதேசமயம் பெற்றோர் தரப்பிலிருந்து தலைமை ஆசிரியைக்கு எதிராக புகார் வந்திருந்தால் உரிய விசாரணை நடத்தி தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும்.

மேலும் பெற்றோர் ஆசிரியர் கழகத்திலிருந்து நீக்கம் செய்து மாவட்டக் கல்வி அலுவலர் பிறப்பித்த உத்தரவை எதிர்த்து மனுதாரர் முரளிதரன் தாக்கல் செய்த வழக்கில் இடைக்காலத் தடை விதிக்கப்பட்டு, வழக்கு நிலுவையில் இருக்கிறது” என்று தெரிவிக்கப்பட்டது.

இதைப் பதிவு செய்த நீதிபதி கிருஷ்ணகுமார், தலைமை ஆசிரியை மீதான புகார் மனுவை பள்ளிக் கல்வித்துறை ஆணையரிடம் மனுதாரர் ஒரு வாரத்தில் கொடுக்க வேண்டும். அதில் மாவட்டக் கல்வி அலுவலர் விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டார்.

கூடுதல் விண்ணப்பக் கட்டணம் தொடர்பான இந்த வழக்கையும், பெற்றோர் ஆசிரியர் சங்கத்தில் இருந்து நீக்கியதை எதிர்த்த வழக்கையும் ஒன்றாகப் பட்டியலிட உத்தரவிட்டு, விசாரணையை ஜூலை 14ஆம் தேதிக்கு நீதிபதி ஒத்திவைத்தார்.

மேலும் பெற்றோர் ஆசிரியர் சங்க இணைப்புக் கட்டணமான 50 ரூபாயைத் தவிர கூடுதல் எதையும் வசூலிக்கக் கூடாது என அனைத்து அரசுப் பள்ளிகளுக்கும் அறிவுறுத்தல் வழங்கும்படி பள்ளிக் கல்வித்துறை ஆணையருக்கு உத்தரவிட்ட நீதிபதி, அறிவுறுத்தலை மீறும் தலைமை ஆசிரியர் அல்லது தலைமை ஆசிரியை மீது உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என உத்தரவிட்டார்.


எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments