அழுகிய சடலம் முதல் ஆதரவற்றவர்களின் சடலங்கள் வரை தன் குழுவோடு சென்று அடக்கம் செய்யும் கோட்டைப்பட்டினத்தை சேர்ந்த பத்திரிகையாளர்!




கடலில் கரை ஒதுங்கும் அடையாளம் தெரியாத அழுகிய சடலங்கள் முதல் சாலை விபத்தில் இறந்தவர்கள், ஆதரவற்றவர்கள், கரோனாவில் இறந்தவர்கள் என எந்தப் பாகுபாடுமின்றி தன்னலமின்றி தன் குழுவோடு சென்று தூக்கி அடக்கம் செய்துவரும் இளம் பத்திரிகையாளரை ஊரார் பாராட்டுகிறார்கள்.
புதுக்கோட்டை மாவட்டம் கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள கோட்டைப்பட்டினம் கிராமத்தைச் சேர்ந்தவர் ராஜா முகமது (30). பட்டதாரியான இவர், தமிழ்நாட்டின் முன்னனி தினசரி நாளிதழில் செய்தியாளராகவும் உள்ளார். இதையெல்லாம் கடந்து சமூக ஆர்வம் அதிகம்.இந்த ஆர்வத்தால் கிழக்கு கடற்கரை சாலை பகுதியில் ஆதரவற்றவர்கள் இறந்துவிட்டால் அவர்களின் உடலை மரியாதையோடு அடக்கம் செய்ய தனது குழுவினரோடு சென்றுவிடுகிறார்.

கஜா புயலில் ஏற்பட்ட சேதங்களில் இருந்து பல ஊர்களிலும் மீட்பு பணியோடு நிவாரணப் பணியும் செய்தார். கடந்த சில வருடங்களில் 30க்கும் மேற்பட்ட சடலங்களை அடக்கம் செய்துள்ளார். தற்போது கரோனா தொற்றால் இறந்தவர்களை அடக்கம் செய்ய உறவினர்களே தயங்கும்போது தகவல் கிடைத்தால் தனது குழுவினரோடு சென்று உரிய மரியாதைகள் செய்து அடக்கம் செய்யும் பணியைத் தொடர்ந்து செய்துவருகிறார்.

இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறும்போது, “கிழக்கு கடற்கரை சாலையில் விபத்து நடந்தால் உடனே அந்த இடத்திற்குப் போய் மீட்புப் பணியோடு மீட்டவர்களை சிகிச்சைக்கு அனுப்பும் பணியை மேற்கொள்வது, விபத்தில் இறப்பு ஏற்பட்டால் சடலத்தை மருத்துவமனைக்கு அனுப்பும் பணியும் செய்வதோடு, இறந்தவர்களின் உறவினர்கள் யார் என்று தெரியவில்லை என்று போலீசார் அடக்கம் செய்ய சொன்னால் முகம் சுளிக்காமல் அடக்கம் செய்துவருகிறார்கள். அதேபோல கடலில் மிதந்து வந்து கரை ஒதுங்கும் அழுகிய சடலங்களையும் போலீசார் சொன்னால் அடக்கம் செய்வார்கள்.


ஆதரவற்ற இந்து சகோதரர் யாரேனும் இறந்தால் அந்த முறைப்படி அடக்கம் செய்கிறார்கள்.இப்படி ஏராளமான சடலங்களை அடக்கம் செய்யும் ராஜா முகமது இதுவரை 30 முறைக்கு மேல் ரத்தம் கொடுத்து பல உயிர்களைக் காப்பாற்றி இருக்கிறார். மற்றொரு பக்கம் மரக்கன்றுகள் நடுவதையும் ஆர்வமாக செய்வார். 

இதேபோல ஒவ்வொரு கிராமத்திற்கும் ஒரு இளைஞர் இருந்தால் நல்லது என்கிறார்கள். பொது மக்களோடு சேர்ந்து GPM மீடியா வாசகர்களாகிய நாமும், எந்தவித எதிர்பார்ப்பும் இன்றி பெரும் தொண்டு செய்துவரும் ராஜாவை பாராட்டுவோம்.

 

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments