கொரோனா பரவலின்போது அதிகரிக்கும் பருவகால நோய்கள்: டெங்கு-ஜிகா பாதிப்புகளின் தடுப்பு முறைகள்




கொரோனா இரண்டாவது அலை பாதிப்பு கொஞ்சம் தனிந்துவரும் இந்த நேரத்தில், இந்தியாவில் பருவகால நோய்களின் தாக்கம் பரவலாக ஏற்பட்டு வருகிறது. அந்தவகையில் கேரளாவில் ஜிகா வைரஸூம், தமிழ்நாட்டில் டெங்கு வைரஸூம் தனது தாக்கத்தை தீவிரமாகி ஏற்படுத்தி வருகின்றன. சமீபத்திய இவ்விரண்டு நோய்ப் பரவல் குறித்தும், இங்கு சற்று விரிவாக பார்ப்போம்.

 
இவற்றில் ஜிகா வைரஸ், இப்போதுதான் கேரளாவில் தனது தாக்கத்தை தொடங்கியுள்ளது. டெங்கு, ஜிகா போல அல்லாமல் கடந்த சில மாதங்களாகவே தீவிரமாக பரவிவருகிறது. ஜனவரி முதல் மே மாதம் வரையிலான காலத்தில், இந்தியாவில் 6,837 பேருக்கு தொற்று உறுதிசெய்யப்பட்ட நிலையில், அவர்களில் அதிகபட்சமாக 2,008 பேர் தமிழ்நாட்டை சேர்ந்தவர்களாக இருந்தனர். 


தற்போதும் டெங்குவின் தீவிரம் தமிழ்நாட்டில் அதிகமாகவே இருக்கிறது. பருவகாலம் தொடங்குகிறது என்பதால், இதன் பரவும் விகிதமும் அதிகரித்துள்ளது என்கிறார்கள் மருத்துவர்கள். டெங்குவை பொறுத்தவரை அதன் இறப்பு விகிதம், 3 சதவிகிதத்தையொட்டி இருக்குமென சொல்லப்படுகிறது. கொரோனாவுக்கான இறப்பு விகிதம், கிட்டத்தட்ட 1% க்கும் குறைவுதான். ஆக, டெங்கு தடுப்பு நடவடிக்கையில், தமிழ்நாடு சற்று தீவிரமாகவே ஈடுபட வேண்டியுள்ளது. டெங்கு வயது வித்தியாசமின்றி குழந்தைகளிடமும் அதிக தாக்கத்தை ஏற்படுத்தக்கூடியது என்பதால், கூடுதல் விழிப்புணர்வு அவசியப்படுகிறது.

ஜிகா வைரஸூம், டெங்குவை போல ஏடிஸ் கொசு மூலம் பரவக்கூடியது என்றாலும்கூட அது எந்தளவுக்கு தீவிர பாதிப்பை ஏற்படுத்தும் என்பது இப்போதுவரை முழுமையாக தெரியவில்லை. குறிப்பாக ஜிகா ஏற்படுத்தும் இறப்பு விகிதம் பற்றிய எவ்வித தகவலும் இல்லை. ஜிகா கர்ப்பிணிகளை தாக்கும்பட்சத்தில், பிறக்கும் குழந்தைக்கு இறப்பு ஏற்படும் வாய்ப்புள்ளது என்பது மட்டுமே ஜிகா பற்றி இதுவரை வெளிவந்திருக்கும் தகவல். ஜிகா பரவலை பொறுத்தவரை அது உடலுறவு கொள்ளுதல் வழியாக பரவுமென்றும் சொல்லப்படுகிறது.

ஜிகா, டெங்கு – இவை இரண்டுக்கும் சில ஒற்றுமைகள் உள்ளன. அவை, இரண்டுமே பருவகால வைரஸ் நோய்கள்தாம்; இரண்டுமே ஏடிஸ் கொசு  மூலம் பரவக்கூடிய நோய்தாம்; இரண்டுமே காய்ச்சல் – தலைவலி – உடல்சோர்வு – தசை வலி போன்றவற்றையே அறிகுறிகளாக வெளிப்படுத்தும்; அதேபோல இரண்டுமே இருமல் – தும்மல் வழியாக பரவும் தொற்றுநோயல்ல, மாறாக கொசு மூலம் பரவக்கூடிய நோய்தாம்.


இவை இரண்டின் அறிகுறிகளும், ஏறத்தாழ கோவிட் 19 கொரோனாவோடு ஒத்துப்போவது, இன்னும் வேதனை. இதனால், மக்கள் பலரும் குழப்பமடையும் வாய்ப்புள்ளது. உதாரணத்துக்கு கொரோனா பெருந்தொற்று பரவல் இருக்கும் இந்த நேரத்தில் ஒருவருக்கு காய்ச்சல் ஏற்படுகிறதென்றால், அவர் நேரடியாக கொரோனா பரிசோதனை செய்துக்கொள்ளவே செல்வார். அவருக்கு ஏற்பட்டிருப்பது டெங்கு / ஜிகா எனும்பட்சத்தில் கொரோனா நெகடிவ் என வரும். இதனால் அந்நபர் தனக்கு வந்திருப்பது சாதாரண காய்ச்சல்தான் என நினைத்து, சிகிச்சைக்கு காலம் தாழ்த்தக்கூடும். காலம் தாழ்த்துதல், கூடுதல் சிக்கலை தரும்.

இந்த சிக்கல்களையெலாம் தவிர்க்க, மக்கள் என்ன செய்யவேண்டும் என   சிவகங்கையை சேர்ந்த மருத்துவர் ஃபரூக் அப்துல்லாவிடம் பேசினோம். “காய்ச்சல் அறிகுறி வந்தவுடன் முறையாக மருத்துவரை அணுகினாலே பல பிரச்னைகளை நாம் தவிர்க்கலாம். பலரும் அதை செய்யாமல், தாமாக சென்று மாத்திரைகள் வாங்கிக்கொள்வது – மருந்தகங்களில் நிபுணர் அறிவுரையின்றி ஊசி போட்டுக்கொள்வது என்றிருக்கின்றனர். கொரோனாவை பொறுத்தவரை, இப்படி செய்வதால் பாதிப்போ, அறிகுறிகளோ கொஞ்சம்கூட குறையாது. அப்படி குறையாமல் போகும்போது அவர்கள் மருத்துவர்களை அணுகி சிகிச்சையை தொடங்குகின்றனர்.


ஆனால், டெங்குவும், ஜிகாவும் இப்படி அல்ல. இந்த மருந்துகள்யாவும் டெங்கு, ஜிகாவின் அறிகுறிகளை எளிதில் மட்டுப்படுத்திவிடும். அறிகுறிகள் குணமாகியவுடன், இவர்களும் மருத்துவரை அணுகாமலேயே இருந்துவிடுவார்கள். இங்குதான் பிரச்னை. டெங்குவும் ஜிகாவும் உடலில் ஏற்படுத்தும் தாக்கம் அதிகம். அறிகுறிகள் குறைந்தாலும், இந்த தாக்கங்கள் குறையாது. இதனால் உடலின் உள்ளுறுப்புகளில் பாதிப்பு ஏற்படலாம். அது பிரச்னையை தீவிரப்படுத்தலாம். டெங்கு பாதிப்பில் இறப்பு விகிதம் அதிகமென்பதால், தீவிரமாகும்போது இறப்புக்கான வாய்ப்பு வந்துவிடுகிறது. ஜிகாவிலும் இப்படியான சிக்கல் இருக்கிறதென்றாலும், அது முற்றிலும் புதிய நோயாக இருக்கிறது. ஆகவே எந்தளவுக்கு அது தீவிரமானது என்பதை இப்போது கணிக்க முடியவில்லை.

இவை எல்லா சிக்கலையும் தவிர்க்க, காய்ச்சல் – உடல்வலி – தலைவலி போன்ற அறிகுறிகள் தெரியவந்தவுடன் மருத்துவரை அணுகுவது சிறந்த தீர்வு. அதை அனைவரும் செய்யவேண்டும்.

டெங்குவையும் ஜிகாவையும் நம்மால் தடுக்க முடியுமென்பது, ஆறுதலான விஷயம். இவற்றை தடுப்பது மிகவும் எளிது. வீட்டில் கொசு வராமல் பார்த்துக்கொண்டாலே, நம்மை இவற்றிலிருந்து காத்துக்கொள்ளலாம். கொசுவுக்கும் நமக்கும் எந்தளவுக்கு தொடர்பே இல்லாமல் இருக்கிறதோ, அந்தளவுக்கு நமக்கு இந்த பாதிப்புகள் ஏற்படாது. அதற்கு நாம் ஜன்னல்களில் கொசுவலைகளை ஏற்படுத்திக்கொள்வது, உடலில் கொசுவுக்கு எதிரான க்ரீம்களை தேய்த்துக்கொள்வது போன்ற சின்ன சின்ன விஷயங்களை செய்தாலே போதுமானது. உடன் வீட்டில் கொசு உருவாகாமலும் கவனித்துக்கொள்ள வேண்டும். அவ்வளவே! 

டெங்கு மற்றும் ஜிகாவை பரப்பும் ஏடிஸ் கொசு, நல்ல தண்ணீரில் இனப்பெருக்கம் செய்யும் தன்மை கொண்டவை. ஒரு சின்ன தேங்காய் மூடியில் கூட இவை இனப்பெருக்கம் செய்துவிடும். ஆகவே வீடுகளில் சின்ன சின்ன இடங்களில்கூட தண்ணீர் தேங்காமல் பார்த்துக்கொள்ள வேண்டும். பருவகால மாற்றம் நிகழும் நேரத்தில், மழைக்காலத்தில் இது சிரமமான வேலைதான் என்றாலும்கூட மக்கள் கொஞ்சம் சிரமெடுத்து இதை சாத்தியப்படுத்தவேண்டும். வீடுகளின் பொறுப்பு குடும்பங்களெனும்போது, வீதிகளின் பொறுப்பு அரசினுடையது. இதற்கு முன்னரும் டெங்குவை தமிழ்நாடு எதிர்கொண்டிருக்கிறது என்பதால், அரசு தடுப்பு நடவடிக்கையில் சிறந்த பணியையாற்றும் என நம்பலாம்.

ஆகவே இந்த விஷயத்தில் மக்களின் விழிப்புணர்வுதான், அனைத்தையும்விட முதன்மையானது. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் இந்த பருவகாலத்தில் எந்தவொரு அறிகுறியையும் உதாசீனப்படுத்தாமல் இருத்தல் அவசியம்” என்றார்.

மருத்துவத்துறையும் மக்கள் மத்தியில் விழிப்புணர்வை அதிகப்படுத்தவே அறிவுறுத்தியுள்ளது என்பதால், மக்கள் குழப்பமேதுமின்றி எந்தவொரு அறிகுறிக்கும் அருகிலிருக்கும் மருத்துவரை அணுகுவதே இப்போதைக்கு அவசியப்படுகிறது.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments