தொண்டி அருகே ராஜராஜசோழன் பெயரில் அமைந்த நெடுஞ்சாலையைக் குறிப்பிடும் கல்வெட்டு கண்டுபிடிப்பு
ராமநாதபுரம் மாவட்டம், தொண்டி அருகிலுள்ள நம்புதாளையில் ராஜராஜசோழன் பெயரில் அமைந்த ராரா பெருவழியை (நெடுஞ்சாலை) குறிப்பிடும், சுமார் 800 ஆண்டுகள் பழமையான பிற்காலப் பாண்டியர் கல்வெட்டை ராமநாதபுரம் தொல்லியல் ஆய்வு நிறுவனம் கண்டுபிடித்துள்ளது.

தொண்டி அருகிலுள்ள நம்புதாளை, நம்பு ஈஸ்வரர் கோயிலில் உள்ள ஒழுங்கமைவு இல்லாத ஒரு பாறைக்கல்லின் மூன்று பக்கத்தில் கல்வெட்டு உள்ளது. ராமநாதபுரம் தொல்லியல் ஆய்வு நிறுவனத்தின் தலைவர் வே.இராஜகுரு இக்கல்வெட்டைப் படியெடுத்து ஆய்வு செய்தார்.இதுகுறித்துத் தொல்லியல் ஆய்வாளர் வே.ராஜகுரு கூறியதாவது,

'' ‘ஸ்வஸ்திஸ்ரீ’ எனத் தொடங்கும் இக்கல்வெட்டில் மொத்தம் 61 வரிகள் உள்ளன. பல ஆண்டுகளாக வெட்டவெளியில் கிடந்ததால் இதன் இரு பக்கங்களில் இருந்த எழுத்துகள் பெருமளவு அழிந்துவிட்டன. இது கோனேரின்மை கொண்டான் எனும் அரசனின் ஆணையாகும். இக்கோயில் நம்புதாளையில் இருந்தாலும், கல்வெட்டில் தொண்டியான பவித்ரமாணிக்கப் பட்டினத்தில் இருப்பதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. கல்வெட்டின் எழுத்தமைதியைக் கொண்டு இது கி.பி.13-ம் நூற்றாண்டைச் சேர்ந்ததாகக் கருதலாம்.

அரசனின் ஆணைப்படி, கங்கை நாராயண சக்கரவத்தி மற்றும் வீரசிகதேவன் ஆகியோர், இக்கோயில் இறைவன் குலசேகர பாண்டீஸ்வரமுடையார்க்கு, உள்ளூரில் விதிக்கப்படும் அந்தராயம், விளைச்சலுக்குத் தக்கவாறு அரசுக்குச் செலுத்தவேண்டிய கடமை, பொதுச் செலவுக்காக விதிக்கும் விநியோகம் ஆகிய வரிகளைத் தானமாக வழங்கியிருக்கிறார்கள். மேலும் மடத்தை நிர்வகிப்பதற்காக சவசிஞான தேவர்க்கு இரண்டு மா அளவுள்ள நன்செய் நிலத்தையும் இவர்கள் தேவதானமாகக் கொடுத்துள்ளனர். இதன் மூலம் சவசிஞான தேவரால் நிர்வகிக்கப்பட்ட ஒரு மடம் இவ்வூரில் இருந்ததை அறிய முடிகிறது.

மடத்துக்கு தானமாக வழங்கிய நிலத்தின் எல்லை குறிப்பிடும்போது கிழக்கில் ராரா பெருவழி குறிப்பிடப்படுகிறது. இது ராஜராஜசோழனின் பெயரில் அழைக்கப்படும் கிழக்குக் கடற்கரைப் பெருவழியாகும். இதனால் பாண்டிய நாட்டின் கிழக்குக் கடற்கரைச் சாலைக்கு ராரா பெருவழி எனப் பெயர் இருந்ததாகக் கருதலாம்.

தற்போது நம்பு ஈஸ்வரர் எனக் கோயில் இறைவன் அழைக்கப்பட்டாலும், கல்வெட்டில் குலசேகர பாண்டீஸ்வரமுடையார் எனப்படுகிறார். இது குலசேகரப் பாண்டியன் எனும் அரசனின் பெயரால் அமைக்கப்பட்ட கோயிலாக உள்ளது. கல்வெட்டில் சொல்லப்படும் கங்கை நாராயண சக்கரவத்தி, திருப்புல்லாணி, தளிர்மருங்கூர், மேல்நெட்டூர், அருவிமலை கோயில் கல்வெட்டுகளிலும் குறிப்பிடப்படுகிறார். இவர் இப்பகுதியின் குறுநிலத் தலைவராகவும், அரசனின் ஆணைகளை நிறைவேற்றுபவராகவும் இருந்துள்ளார்''.

இவ்வாறு ராஜகுரு தெரிவித்தார்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments