இந்தியாவில் இருந்து துபாய் வரும் விமான சேவை ரத்து 21-ந் தேதி வரை நீட்டிப்புஇந்தியாவில் இருந்து துபாய் வரும் விமான சேவை ரத்து 21-ந் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக எமிரேட்ஸ் விமான நிறுவனம் அறிவித்துள்ளது.


இது குறித்து அந்த நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

இந்தியாவில் ஏற்பட்ட 2-வது கொரோனா தொற்று அலை காரணமாக கடந்த ஏப்ரல் மாதம் 24-ந் தேதி முதல் விமான சேவை தொடர்ந்து ரத்து செய்யப்பட்டுள்ளது. இருப்பினும், கோல்டன் விசா, முதலீட்டு விசா, பங்குதாரர் விசா மற்றும் மருத்துவ பணியாளர்கள் வருவதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளது. தனியார் ஜெட் விமானங்களில் வருவதற்கும் அனுமதிக்கப்பட்டுள்ளது.


பலர் அமீரகம் வருவதற்கு அர்மீனியா, மாலத்தீவு உள்ளிட்ட பல நாடுகளில் 14 நாட்கள் தனிமைப்படுத்திக்கொண்டு பிறகு நாட்டிற்குள் வருகின்றனர். இருந்தாலும் ஆண்டு விடுமுறை மற்றும் பல்வேறு காரணங்களுக்காக சொந்த ஊருக்கு சென்றவர்கள் மீண்டும் அமீரகம் திரும்ப முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில் விமான சேவை ரத்தானது தொடர்ந்து அமலில் இருந்தாலும் இந்தியாவில் உள்ள விமான நிறுவனங்களில் இணையதளங்களில் டிக்கெட் முன்பதிவு தொடங்கியது. குறிப்பாக 15-ந் தேதியில் இருந்து முன்பதிவு செய்ய வசதி செய்து தரப்பட்டது.

இந்த நிலையில் தற்போது எமிரேட்ஸ் விமான நிறுவனம் வருகிற 21-ந் தேதி வரை இந்தியாவில் இருந்து துபாய் வருவதற்கான விமான சேவைக்கான தடையானது தற்காலிகமாக தொடரும் என தெரிவித்துள்ளது. இது மட்டுமல்லாமல் பாகிஸ்தான், வங்காளதேசம் மற்றும் இலங்கை உள்ளிட்ட நாடுகளில் இருந்தும் வருகிற 21-ந் தேதி வரை துபாய் நகருக்கு விமான சேவை இயக்கப்படாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எமிரேட்ஸ் விமானங்களில் ஏற்கனவே முன்பதிவு செய்துள்ளவர்கள் தங்களது பயண தேதிகளை மாற்றிக் கொள்ள முன்பதிவு மையங்களை தொடர்பு கொள்ள கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். பயணத்தின் போது தங்களது டிக்கெட்டை மட்டும் வைத்துக் கொண்டால் போதுமானது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments