12-ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுத விரும்பும் மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு: தேர்வு அட்டவணை வெளியீடு- விண்ணப்பிப்பது எப்படி?







12-ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுத விரும்பும் மாணவர்களுக்கான தேர்வு அட்டவணையை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.


பன்னிரெண்டாம் வகுப்பு மாணவர்களுக்கான துணைத் தேர்வு தேதியை பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ளது.

தமிழ்நாட்டில் கொரோனா பாதிப்பின் காரணமாக 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத் தேர்வு ரத்து செய்யப்பட்டது. மேலும், மாணவர்களுக்கு 10-ம் வகுப்புப் பொதுத்தேர்வு (அதிக மதிப்பெண்கள் பெற்ற மூன்று பாடங்களுடைய சராசரியை வைத்து 50 சதவிகிதம், 11-ம் வகுப்பு பொதுத்தேர்வு (ஒவ்வொரு பாடத்திலும் பெற்ற எழுத்துமுறை மதிப்பெண்களை மட்டும் வைத்து) 20 சதவிகிதம், 12-ம் வகுப்பு செய்முறைத் தேர்வை வைத்து 30 சதவிகிதம் என்று மொத்தம் 100 சதவிகிதத்துக்கு மதிப்பெண் கணக்கிடப்படும் எனத் தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. மேலும், இதில் மதிப்பெண்கள் குறைவாக வந்ததாக கருதும் மாணவர்கள் தேர்வுகளை எழுதலாம் என்றும் அறிவித்தது.

அதன்படி, துணைத் தேர்வு நடைபெறும் தேதியை தமிழக அரசு அறிவித்துள்ளது. இதுதொடர்பாக பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில், ‘2020-2021-ம் கல்வியாண்டில் மேல்நிலை இரண்டாம் ஆண்டு பயின்ற பள்ளி மாணவர்களுக்கு 19-07-2021 அன்று வெளியிடப்பட்ட தேர்வு முடிவுகளில் பெற்ற மதிப்பெண்கள் குறைவாக உள்ளதாக கருதும் மாணவர்களிடமிருந்தும், மே 2021 மேல்நிலை இரண்டாம் ஆண்டு தேர்வெழுத விண்ணப்பிக்கத் தவறிய தகுதியுள்ள தனித் தேர்வர்களிடமிருந்தும் துணைத் தேர்வுக்கு இணையதளம் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்க்கப்படுகிறது.

12-ம் வகுப்பு தேர்வு அட்டவணை



23-7-2021 முதல் 27-07-2021 வரையிலான நாட்களில்(வரும் ஞாயிற்றுக்கிழமை நீங்கலாக) காலை 10 மணி முதல் மாலை 5.45 மணிக்குள் கல்வி மாவட்ட வாரியாக அமைக்கப்பட்டுள்ள அரசுத் தேர்வுத்துறை சேவை மையங்கள் வாயிலாக 2021 மேல்நிலை இரண்டாம் ஆண்டு துணைத் தேர்வினை எழுத விண்ணப்பிக்க வேண்டும். அவ்வாறு விண்ணப்பிக்கும்போது, மாணவர்கள் கட்டாயம் தங்களுக்குரிய அனைத்துப் பாடத்தேர்வுகளையும் எழுதுவதற்கு விண்ணப்பிக்க வேண்டும். அத்தேர்வர்கள் குறிப்பிட்ட பாடத்தேர்வுகளை மட்டும் எழுத விண்ணப்பிக்க இயலாது. மேலும், தற்போது எழுதவுள்ள தேர்வில் பெறப்படும் மதிப்பெண்களை இறுதியானது. தனித்தேர்வர்களுக்கு குறிப்பிட்ட நாள்களில் சேவை மையங்கள் சென்று விண்ணப்பிக்கலாம்.

மே 2021-ம் ஆண்டு மேல்நிலை பொதுத் தேர்வு எழுத விண்ணப்பித்த தனித் தேர்வர்கள், 2021 மேல்நிலை இரண்டாம் ஆண்டு துணைத் தேர்வினை எழுத தற்போது மீண்டும் விண்ணப்பிக்கத் தேவையில்லை.

சிறப்பு அனுமதித் திட்டம்:

23-07-2021 முதல் 27-07-2021 வரையிலான தேதிகளில் விண்ணப்பிக்கத் தவறும் தேர்வர்கள், சிறப்பு அனுமதித் திட்டத்தில் 28-07-2021 அன்று ஆன்லைனில் சேவை மையங்கள் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.

தேர்வு நேரம்: 10 மணி முதல் 1.15 வரை

கொரோனா பரவல் காரணமாக 12ஆம் வகுப்பு பொதுத் தேர்வு ரத்து செய்யப்பட்ட நிலையில் மதிப்பெண்கள் குறிப்பிட்ட சில வழிமுறைகளில் கணக்கிடப்பட்டு அண்மையில் வெளியிடப்பட்டது. இந்நிலையில், நேற்று (ஜூலை-22) காலை 11 மணி முதல் மதிப்பெண்கள் பட்டியலை இணையதளங்களில் மாணவர்கள் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் எனக்கூறி அதற்கான இணையதள பக்கத்தை ( http://www.dge.tn.gov.in, http://www.dge.tn.nic.in ) பள்ளிக்கல்வித் துறை வெளியிட்டது.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments