தனியார் பள்ளிகளில் 25 சதவீதம் இடஒதுக்கீட்டில் மாணவர் சேர்க்கை நடைமுறைகள் என்ன? மெட்ரிகுலேசன் பள்ளிகள் இயக்ககம் விளக்கம்
    

குழந்தைகளுக்கான இலவச கட்டாயக்கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் தனியார் பள்ளிகளில் 25 சதவீத இட ஒதுக்கீட்டில் மாணவர் சேர்க்கை நடைமுறைகள் குறித்து மெட்ரிகுலேசன் பள்ளிகள் இயக்ககம் விளக்கமளித்து இருக்கிறது


25 சதவீதம் இடஒதுக்கீடு

குழந்தைகளுக்கான இலவச மற்றும் கட்டாயக்கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் தனியார் பள்ளிகளில் 25 சதவீத இடஒதுக்கீட்டின் படி மாணவர் சேர்க்கை நடைமுறைகள் குறித்து மெட்ரிகுலேசன் பள்ளிகள் இயக்குனர் அ.கருப்பசாமி வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது:-

குழந்தைகளுக்கான இலவச மற்றும் கட்டாயக்கல்வி உரிமைச் சட்டம் 2009-ன் படி, 2021-22 கல்வி ஆண்டிற்கு 25 சதவீத இட ஒதுக்கீட்டின் கீழ் வாய்ப்பு மறுக்கப்பட்ட மற்றும் நலிவடைந்த பிரிவினரின் குழந்தைகளுக்கு சிறுபான்மை அற்ற தனியார் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை நடைபெற உள்ளது. இந்த மாணவர் சேர்க்கைக்கு வருகிற 5-ந் தேதி முதல் அடுத்த மாதம் (ஆகஸ்டு) 3-ந் தேதி வரை rte.tnschoolsgov.in என்ற இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம். 3-ந் தேதி வரை பெறப்படும் விண்ணப்பங்களை பரிசீலனை செய்து தகுதியான விண்ணப்பங்கள் சார்ந்த விவரங்களும், விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டால் அதற்கான காரணங்களும் இணையதளத்திலும், சம்பந்தப்பட்ட பள்ளி தகவல் பலகையிலும் அடுத்த மாதம் 9-ந் தேதி மாலை 5 மணிக்கு வெளியிடப்படும்.

குலுக்கல்

நிர்ணயிக்கப்பட்ட இடங்களை விட கூடுதலாக விண்ணப்பங்கள் பெறப்பட்டு இருப்பின் சம்பந்தப்பட்ட பள்ளியில் அடுத்த மாதம் 10-ந் தேதியன்று குலுக்கல் நடத்தப்பட்டு சேர்க்கைக்கான குழந்தைகள் தேர்வு செய்யப்படுவார்கள். தேர்வு செய்யப்பட்ட குழந்தைகளின் பெயர் பட்டியல் விண்ணப்ப எண்ணுடன் 10-ந் தேதியன்று இணையதளத்திலும் சம்பந்தப்பட்ட பள்ளியின் தகவல் பலகையிலும் வெளியிடப்படும்.மாணவர் சேர்க்கைக்கு தேர்வு செய்யப்பட்ட குழந்தைகளை அடுத்த மாதம் 14-ந் தேதிக்குள் சம்பந்தப்பட்ட பள்ளியில் சேர்க்க வேண்டும். இதுதொடர்பாக பெற்றோர் ஏதேனும் புகார் அல்லது ஆலோசனைகளை வழங்க விரும்பினால் ஒவ்வொரு மாவட்டத்திலும் முதன்மை கல்வி அலுவலரிடம் அளிக்கலாம். மேலும் மாநில அளவில் மெட்ரிகுலேசன் பள்ளிகள் இயக்குனர், தொடக்க கல்வி இயக்குனர் ஆகியோரிடமும் தெரிவிக்கலாம்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments