தின்பண்டம் என நினைத்து கிளீனிங் பவுடர் தின்ற சிறுமி உடல் மெலிந்து அவதி உணவுக்குழாய் பாதிப்பால் உருக்குலைந்த துயரம்!






வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் பிளீச்சிங் பவுடரை எடுத்து சிறுமி சாப்பிட்டதால் உணவுக் குழாயில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அதற்கு சிகிச்சை எடுத்துக் கொள்ளாததால் அடைப்பு எற்பட்டு உணவு எடுத்துக் கொள்ள முடியாமல் சிறுமியின் உடல்நலம் பாதிக்கப்பட்டது.

தென்காசி மாவட்டம் செங்கோட்டை, மேலூர் வாட்டர் ஹவுஸ் பகுதியில் வசிப்பவர் முத்துராமன். கூலித் தொழிலாளி. அவர் மனைவி பிரேமா, பீடி சுற்றும் தொழில் செய்து வருகிறார். இவர்கள் காதல் திருமணம் செய்து கொண்டதால் உறவினர்களால் புறக்கணிக்கப்பட்டு யாருடைய உதவியுமின்றி வாடகை வீட்டில் வசித்து வருகிறார்கள்.

முத்துராமன் - பிரேமா தம்பதியின் மகள் இசக்கியம்மாள். ஐந்து வயதுச் சிறுமியான அவர் கடந்த நான்கு மாதங்களுக்கு முன்பு வீட்டில் இருந்த பிளீச்சிங் பவுடரை உணவுப் பொருள் என நினைத்து யாரும் இல்லாத நேரத்தில் சாப்பிட்டு விட்டார். உடனடியாக அவருக்கு எதுவும் செய்யாததால் இது பற்றி யாருக்கும் தெரிந்திருக்கவில்லை.

சிறுமி பிளீச்சிங் பவுடர் உட்கொண்ட சில வாரங்களுக்குப் பின்னர் அவருக்கு வயிற்றில் வலி உள்ளிட்ட பிரச்னைகள் ஏற்பட்டுள்ளன. குழந்தைக்கு சாதாரண வயிற்றுப் பிரச்னை ஏற்பட்டிருப்பதாக நினைத்த பெற்றோர் நாட்டு வைத்தியம் செய்து குணப்படுத்த முயன்றுள்ளனர். ஆனாலும் அவருக்கு தொடர்ந்து உடல்நலம் பாதிக்கப்பட்டிருக்கிறது.

அதனால் சிறுமி இசக்கியம்மாளை மருத்துவரிடம் அழைத்துச் சென்றிருக்கிறார்கள். அவரை பரிசோதித்த மருத்துவர்கள், உணவுக் குழாய் மற்றும் குடல் பகுதியில் பிரச்னை இருப்பதைக் கண்டுபிடித்து நெல்லை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்திருக்கிறார்கள். அங்கு உள்நோயாளியாக சேர்க்கப்பட்ட சிறுமிக்கு பல்வேறு பரிசோதனைகள் நடத்தப்பட்டிருக்கின்றன.

சிறுமியின் குடல் பகுதியை மருத்துவர்கள் பரிசோதித்துப் பார்த்தபோது, அவர் விஷத்தன்மையுள்ள பொருளை உட்கொண்டதால் உணவுக் குழாயில் அடைப்பு ஏற்பட்டிருப்பதைக் கண்டுபிடித்தார்கள். அதனால் சிறுமியால் உணவு மற்றும் தண்ணீர் குடிக்க முடியாமல் அவதிப்பட்டு வந்திருக்கிறார்.

அவரது உணவுக் குழாயில் இருந்த மூன்று அடைப்புகளை மருத்துவர்கள் அறுவை சிகிச்சை மூலம் சரி செய்திருக்கிறார்கள். அதைத் தொடர்ந்து சற்று உடல் நலம் தேறிய நிலையில், சொந்த ஊருக்கு வந்திருக்கிறது அவர் குடும்பம். மீண்டும் சிறுமியால் உணவு சாப்பிட முடியாமல் போனதால் செய்வதறியாது திகைத்துப் போயிருக்கிறார்கள் அவர் பெற்றோர்.

இந்நிலையில், செங்கோட்டை அரசு மருத்துவமனையின் மருத்துவரான ராஜேஷ் கண்ணாவுக்கு சிறுமி குறித்து தெரியவந்திருக்கிறது. அதனால் அவரே சிறுமியின் வீட்டுக்கு நேரில் சென்று பரிசோதித்திருக்கிறார். அதன் பின்னர் மருத்துவமனைக்கு அழைத்து வந்து சிகிச்சை அளித்துள்ளார்.

இது பற்றி பேசிய டாக்டர்.ராஜேஷ் கண்ணன், ``நெல்லை அரசு மருத்துவமனையில் இருந்து வீட்டுக்கு வந்த சிறுமி, மறுபடியும் சாப்பிட முடியாமலும் தண்ணீர் குடிக்க முடியாமலும் அவதிப்படுவது பற்றி தெரியவந்ததும் அவர்களின் குடும்பச் சூழலைக் கவனத்தில் கொண்டு நானே நேரில் சென்று பரிசோதனை செய்ததுடன் அரசு மருத்துவமனைக்கு அழைத்து வந்தேன்.

மருத்துவப் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டதில் சிறுமி உணவுக் குழாயில் மீண்டும் பிரச்னை ஏற்பட்டிருப்பது தெரியவந்தது. முதல் கட்டமாக சிறுமிக்குத் தேவையான மருத்துவ வசதிகள் செய்து கொடுக்கப்பட்டது. அவரை மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்க ஏற்பாடு செய்து வருகிறோம். இது தொடர்பாக மதுரை அரசு மருத்துவமனை டாக்டர்களிடமும் பேசி ஏற்பாடுகளைச் செய்திருக்கிறோம்.

சிறுமியின் பெற்றோர் வறுமையான சூழலில் இருப்பதால் அவர்களுக்கு நண்பர்கள் மூலம் தேவையான உதவிகள் செய்யவும் நடவடிக்கை எடுத்து வருகிறோம். உரிய சிகிச்சைக்குப் பின்னர் சிறுமி மீண்டும் பழைய நிலைக்கு வந்துவிடுவார் என்கிற நம்பிக்கை இருக்கிறது” என்று தெரிவித்தார்.

``ஆபத்து மிகுந்த பொருள்களை குழந்தைகளின் கைக்கு எட்டும் இடத்தில் வைப்பதைப் பெற்றோர் தவிர்க்க வேண்டும். அதை மக்களுக்கு அறிவுறுத்துங்கள்” என்ற வேண்டுகோளையும் டாக்டர்.ராஜேஷ் கண்ணன் முன்வைத்தார்.





எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments