புதுக்கோட்டைக்கு தேவையான ரெயில் வசதிகள் நிறைவேற்ற மக்கள் பிரதிநிதிகள் நடவடிக்கை எடுப்பார்களா?

    
புதுக்கோட்டைக்கு தேவையான ரெயில் வசதிகள், பயணிகளின் கோரிக்கைகளை நிறைவேற்ற மக்கள் பிரதிநிதிகள் நடவடிக்கை எடுப்பார்களா? என எதிர்பார்த்துள்ளனர்.

ரெயில் பாதை

புதுக்கோட்டை ரெயில் நிலையம் பழமையானது. கடந்த 1886-ம் ஆண்டின் தொடக்கத்தில், புதுக்கோட்டையில் இருந்து திருச்சி மற்றும் பிற இடங்களுடன் இணைக்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டது. ஆனால் அப்போது தென்னிந்தியாவின் பிற பகுதிகள் ஆங்கிலேயர் ஆட்சியின் கீழ் இருந்தது. புதுக்கோட்டை சமஸ்தானம் ஒரு மன்னரால் ஆளப்பட்டதால், இவர்களுக்கிடையில் முன்மொழியப்பட்ட ரெயில் பாதையின் செலவுத் தொகை பங்கீடு குறித்து நீடித்த பேச்சுவார்த்தைகள் நடந்தன. அதன்பின்னர் 35 ஆண்டுகளுக்கு பிறகு 1921-ம் ஆண்டில், திருச்சி- புதுக்கோட்டை-காரைக்குடி பாதையின் போக்குவரத்துக்கான செலவு தென்னிந்திய ரெயில்வே (எஸ்.ஐ.ஆர்) மூலம் கணக்கெடுக்கப்பட்டது.  அதனைத்தொடர்ந்து ரெயில் பாதை அமைக்கும் பணி நடைபெற்றது.

திருச்சி-புதுக்கோட்டை வழித்தடம்

 திருச்சி-புதுக்கோட்டை வழித்தடமானது கடந்த 1929-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 17-ந் தேதி திறக்கப்பட்டது. அதன்பின் 1930-ம் ஆண்டு ஜூலை 1-ந் தேதி புதுக்கோட்டை-மானாமதுரை வழித்தடமானது திறக்கப்பட்டது என தகவல்கள் கூறுகின்றன. புதுக்கோட்டை ரெயில் பாதை திருச்சி-காரைக்குடி வழித்தடத்தில் முக்கியமானதாக கருதப்படுகிறது. புதுக்கோட்டை வழியாக ராமேசுவரம், சென்னை உள்பட தென் மாவட்டங்களுக்கும், வட மாநிலங்களுக்கும் ரெயில்கள் இயக்கப்பட்டு வருகிறது. புதுக்கோட்டை வழியாக ரெயில் பாதைகள் மின்மயமாக்கப்பட்டு வருகின்றன.

வாரணாசி எக்ஸ்பிரஸ்

தற்போது, கொரோனா பரவல் காரணமாக வழக்கமான ரெயில்களுக்கு பதிலாக சிறப்பு ரெயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இந்தநிலையில் புதுக்கோட்டை மாவட்ட ரெயில் பயணிகள் சில கோரிக்கைகளை முன் வைத்துள்ளனர். அதன் விவரம் வருமாறு:- செங்கோட்டை-சென்னை (வாரம் மும்முறை) `சிலம்பு' ரெயிலை தினசரியாக இயக்க வேண்டும். ராமேசுவரம்-கோவை வாராந்திர ரெயிலை தினசரியாக மாற்ற வேண்டும். ராமேசுவரம்-மண்டுவாடி (வாரணாசி) ரெயில் கொரோனாவிற்கு பிறகு இயக்கப்பட்ட சிறப்பு ரெயிலில் புதுக்கோட்டை நிறுத்தம் நீக்கப்பட்டு விட்டது. மீண்டும் 2 நிமிடங்கள் புதுக்கோட்டையில் நின்று செல்ல வேண்டும். மண்டுவாடியில் இருந்து ராமேசுவரம் செல்லும் போது புதுக்கோட்டையில் நின்று செல்வதை போல இயக்கப்பட வேண்டும்.

தஞ்சாவூர் வழித்தடம்

2017-18-ல் சில நாட்கள் மட்டும் இயங்கிய செங்கோட்டை-தாம்பரம்-செங்கோட்டை அந்த்யோதயா ரெயிலை மீண்டும் இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். 2012-13-ல் ரெயில்வே பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டு 2014-15-ம் ஆண்டில் தஞ்சாவூர்-புதுக்கோட்டை (65 கி.மீ.) இடையே கந்தர்வகோட்டை வழியாக புதிய ரெயில் பாதைக்கு ரெயில்வே வாரியத்தின் ஒப்புதல் பெற்று உடனடியாக பணிகள் தொடங்க வேண்டும். திருச்சியிலிருந்து மதுரைக்கு புதுக்கோட்டை வழியாக புதிய `மெமு' ரெயில் ஒன்று திருச்சி-மானாமதுரை மின்மயமாக்கப்பட்டபின் இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். புதுக்கோட்டை ரெயில் நிலையத்திலிருந்து புதுக்கோட்டை பஸ் நிலையத்திற்கும், புதுக்கோட்டை நகர பகுதிகளுக்கும் புதிய நகர பஸ்கள் தொடர்ச்சியாக இயக்க வேண்டும்.

டிஜிட்டல் பலகை

புதுக்கோட்டை ரெயில் நிலையத்திற்கு பெரும்பாலான எக்ஸ்பிரஸ் ரெயில்கள் இரவு நேரத்தில் தான் வருகிறது. அந்த நேரத்தில் பயணிகள் தங்கள் பெட்டிகள் எங்கு நிற்கிறது என்று அறிய மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகின்றனர். பயணிகள் சிரமங்களை போக்க டிஜிட்டல் எல்.இ.டி. பலகை மற்றும் ரெயில் பெட்டிகள் நிற்கும் இடத்தை காட்டும் பலகை வசதிகளை ஏற்படுத்தித் தர வேண்டும். ராமேசுவரம்-பெங்களூரு-யஷ்வந்த்பூருக்கு புதிய ரெயில் ஒன்றை புதுக்கோட்டை வழியாக இயக்க வேண்டும் என தெரிவித்தனர். மேலும் இந்த கோரிக்கைகளை நிறைவேற்ற எம்.பி., எம்.எல்.ஏ.க்கள், அமைச்சர்கள் என மக்கள் பிரதிநிதிகள் முன்னெடுக்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments