பொதுவிநியோகத் திட்டத்தில் இல்லாத பொருட்களை கட்டாய விற்பனை செய்யக்கூடாது: உணவுப்பொருள் வழங்கல் துறை ஆணையர் உத்தரவு!!



நியாயவிலைக்கடைகளில் பொதுவிநியோகத் திட்டத்தில் சாராத பொருட்களை எக்காரணத்தை கொண்டும் கட்டாய விநியோகம் செய்யக்கூடாது என உணவுப்பொருள் வழங்கல் துறை ஆணையாளர் தெரிவித்துள்ளார். 

இதுகுறித்து உணவுப்பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை ஆணையர் அனைத்து மாவட்ட ஆட்சித்தலைவர்களுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கை:

பொது விநியோகத்திட்டத்தில் விரல் ரேகை பதிவு சரிபார்ப்பு வாயிலாக இன்றியமையாப் பண்டங்கள் விநியோகம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்தநிலையில், நியாயவிலைக் கடைகளுக்கு வருகை தர இயலாத முதியோர்கள், மாற்றுத்திறனாளிகள் உள்ளிட்ட குடும்ப அட்டைதாரர்கள், அவர்களது குடும்பங்களில் கடைகளுக்கு வருகை தரும் வகையில் உறுப்பினர் எவரும் இல்லாத நிலையில் அங்கீகரிக்கப்பட்ட நபர்கள் வாயிலாக பொருட்களை பெற்றுக்கொள்ளலாம் என அறிவுரைகள் வழங்கப்பட்டது.

இவ்வறிவுரைகளை பின்பற்றாத அட்டைதாரர்கள் சிரமத்திற்கு ஆளாக்கப்படின் அப்புகார்களின் தன்மையை ஆராய்ந்து தொடர்புடைய கள அலுவலர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டது. அதன்படி, அநேக அட்டைதாரர்கள் அங்கீகரிக்கப்பட்ட நபர்கள் வாயிலாக தொடர்ந்து பயன் பெற்று வருகிறார்கள். மேலும், நியாயவிலைக் கடைகளில் கட்டுப்பாடற்ற பொருட்களை கட்டாய விற்பனை செய்வதாகவும், அவற்றுக்கு முறையான ரசீது வழங்கப்படுவதில்லை என்றும் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே, கீழ்க்காணும் அறிவுரைகள் வழங்கப்படுகின்றது. அதன்படி, கடைபணியாளர் உரிய பதிவேடு தயார் செய்து போதிய எண்ணிக்கையில் அங்கீகார படிவங்களை தனது கையிருப்பில் வைத்திருப்பது அவசியமாகும்.

மேலும், அட்டைதாரர் குடும்பத்தில் வேறு நபர் எவரும் இல்லாத நிலையில், கோரிக்கை படிவம் பெற்று உடனேயே இன்றியமையாப் பண்டங்களை அங்கீகரிக்கப்பட்ட நபர் வாயிலாக வழங்கி அதன்பின்னர் அக்கோரிக்கை படிவத்தினை உதவி ஆணையாளர், வட்ட வழங்கல் அலுவலகங்களுக்கு அனுப்பி தீர்வாணை பெறலாம். நியாய விலைக்கடையின் செயல்பாட்டுக்கென லாப நோக்குடன் இருப்பில் வைத்து விநியோகிக்கப்படும் பொதுவிநியோகத் திட்டத்தை சாராத கட்டுப்பாடற்ற பொருட்களை எக்காரணத்தை கொண்டும் கட்டாய விநியோகம் செய்யக்கூடாது.

அப்பொருட்கள் அட்டைதாரர் தாமாக முன்வந்து பெற சம்மதிக்கையில் அதனை விநியோகிக்கும் போது அவற்றுக்கென தனியே கடை நடத்தும் நிறுவனத்தின் முறையான அச்சிட்ட ரசீது வழங்கப்பட வேண்டும். இந்த அறிவுரைகள் தவறாது பின்பற்றப்படுவதை தொடர் ஆய்வுகள் மேற்கொண்டு உறுதி செய்துகொள்ள வேண்டும். வருங்காலங்களில் புகார்கள் வெளிவராத வண்ணம் அனைத்து நியாயவிலைக் கடைகளும் உயர்தரத்தில் முறையான சேவை வழங்குவதை உறுதி செய்துகொள்ள வேண்டும். இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments