சுருக்குமடி வலைகளை பயன்படுத்த அனுமதி கேட்டு வழக்கு: தமிழக அரசு முடிவு எடுக்க ஐகோர்ட்டு உத்தரவு!கடலில் சுருக்குமடி வலையை பயன்படுத்தி மீன் பிடிக்க அனுமதி கோரிய மனுவை 4 வாரத்துக்குள் பரிசீலிக்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
கடலூர் மாவட்டம், தேவனாம்பட்டினம் மீனவர் கூட்டுறவு சங்கத் தலைவர் அறிவழகன், சென்னை ஐகோர்ட்டில் தாக்கல் செய்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:-

தமிழக அரசு சுருக்குமடி வலைகளை பயன்படுத்தி கடலில் மீன் பிடிக்க தடை விதித்து கடந்த 2000-ம் ஆண்டு உத்தரவிட்டது. இதற்கிடையே மீன் பிடி தடை காலத்தை மறு ஆய்வு செய்யவும், மீன் வளத்தை மேம்படுத்தவும் ஒன்றிய அரசு ஒரு தொழில் நுட்ப குழுவை அமைத்தது.

கடந்த 2014-ம் ஆண்டு அந்தக்குழு அறிக்கை அளித்தது. அதில், சுருக்குமடி வலைகளை பயன்படுத்த மீனவர்களுக்கு உரிமை உள்ளது என்று கூறியிருந்தது.

இதன்படி, கடந்த 2020-ம் ஆண்டு மார்ச் 23-ந்தேதி சுருக்குமடி வலையை பயன்படுத்த மீனவர்களுக்கு உரிமை உள்ளது என்று ஒன்றிய அரசு உத்தரவிட்டுள்ளது.

ஆனால், தமிழகத்தில் இந்த உத்தரவை அமல்படுத்தவில்லை. எனவே, தமிழகத்தில் சுருக்குமடி வலைகளை பயன்படுத்தி மீன் பிடிக்க அனுமதிக்க உத்தரவிட வேண்டும். இதுதொடர்பாக, தமிழக அரசுக்கு கடந்த ஜூலை மாதம் அளித்துள்ள கோரிக்கை மனுவை பரிசீலித்து தகுந்த உத்தரவு பிறப்பிக்க உத்தரவிடவேண்டும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

இந்த வழக்கு நீதிபதி ஆர்.மகாதேவன் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, தமிழக அரசு தரப்பில் ஆஜரான வக்கீல், தமிழகத்தில் சுருக்குமடி வலையைப் பயன்படுத்தி மீன்பிடி தொழில் செய்வது தொடர்பாக தமிழக அரசு உரிய முடிவு எடுக்கும் என்று விளக்கம் அளித்தார்.

இதைப்பதிவு செய்து கொண்ட நீதிபதி, மனுதாரர் தரப்பில் அளிக்கப்பட்டுள்ள கோரிக்கை மனுவை தமிழக அரசு 4 வார காலத்துக்குள் பரிசீலித்து தகுந்த முடிவு எடுக்க வேண்டும் என்று உத்தரவிட்டார்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments