11 மருத்துவக்கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை நடைபெறும்; அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேட்டி
புதுக்கோட்டை,  மெகா தடுப்பூசி முகாம்

தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் புதுக்கோட்டையில் நேற்று நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- தமிழகம் முழுவதும் 4-வது வாரமாக மெகா தடுப்பூசி முகாம் சிறப்பாக நடைபெற்றுள்ளது. 20 லட்சம் பேருக்கு தடுப்பூசி செலுத்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டிருந்தது. மழையின் காரணமாக 5 மாவட்டங்களில் தடுப்பூசி செலுத்துவதில் சற்று தொய்வு ஏற்பட்டது. மற்ற மாவட்டங்களில் முழுமையாக செலுத்தப்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் முதல் தவணை தடுப்பூசி 62 சதவீதமும், 2-வது தவணை தடுப்பூசி 20 சதவீதமும் போடப்பட்டுள்ளது. புதுக்கோட்டை மாவட்டத்தில் முதல் தவணை தடுப்பூசி 63 சதவீதம் போடப்பட்டுள்ளது பாராட்டுக்குரியது. புதுக்கோட்டை மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகள், கர்ப்பிணிகள், பாலூட்டும் தாய்மார்களுக்கு தடுப்பூசி போடப்படுவதில் புதுக்கோட்டை மாவட்டம் 100 சதவீதம் எட்டியுள்ளது.

1½ கோடி பேருக்கு தடுப்பூசி

தமிழகத்தில் கர்ப்பிணிகளுக்கு 100 சதவீதம் தடுப்பூசி போடப்பட்டதில் அரியலூர் மாவட்டம் முதலிடமும், முதல் தவணை தடுப்பூசி போடப்பட்டதில் நீலகிரி மாவட்டம் முதலிடத்திலும் உள்ளன. புதுக்கோட்டை மாவட்டம் 3 தரப்பிலும் தடுப்பூசி போடப்பட்டதில் முதல் இடத்தில் உள்ளது. 600-க்கும் மேற்பட்ட கிராமங்களில் 100 சதவீதம் தடுப்பூசி போடப்பட்டுள்ளது. இதில் புதுக்கோட்டையில் 122 கிராமங்களில் செலுத்தி தன்னிறைவு பெற்ற மாவட்டமாக உள்ளது. தமிழகத்தில் கொரோனா 3-வது அலை வரக்கூடாது என்பது தான் எல்லாரும் நினைக்கிறோம். அப்படி வந்தாலும் அதனை சமாளிக்க அனைத்து நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.தமிழகத்தில் கொரோனா தடுப்பூசி முதல் தவணை 62 சதவீதம் செலுத்தப்பட்டுள்ளது. இந்த மாதத்தில் 1½ கோடி பேருக்கு தடுப்பூசி போட இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதன்படி போடப்பட்டால் தடுப்பூசி செலுத்தியவர்களின் எண்ணிக்கை 70 சதவீதமாகும். அதன்பின் பாதிப்பு என்பது பெரிய அளவில் இருக்காது.

டெங்கு காய்ச்சல் தடுப்பு பணி

தமிழகத்தில் டெங்கு காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகளாக கொசு மருந்து அடித்தல் உள்ளிட்ட பணிகள் நடைபெற்று வருகிறது. தமிழக-கேரள எல்லைகளில் ஜிகா, நிபா வைரஸ் தடுப்பு மற்றும் விழிப்புணர்வு பணிகளும் நடைபெறுகிறது. நீட் தேர்வு தொடர்பாக தமிழக சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இதற்கு ஜனாதிபதி ஒப்புதல் அளிப்பார் என்ற நம்பிக்கை உள்ளது.

மருத்துவ மாணவர் சேர்க்கை

தமிழகத்தில் புதிதாக தொடங்கப்பட்ட 11 மருத்துவக்கல்லூரிகளில் 1,650 மாணவர் சேர்க்கைக்கு அனுமதி அளிக்க மருத்துவ கல்வி குழுவினர் ஆய்வு செய்ததில் கட்டுமான பணிகளில் ஒரு சில குறைகளை தெரிவித்தனர். அந்த பணிகள் நடைபெற்று வருகிறது. இதற்கிடையில் 850 இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது. மீதமுள்ள 800 இடங்களும் ஒதுக்கக்கோரி நாளை மறுநாள் (நாளை) மருத்துவ கல்வி இயக்குனர் டெல்லி செல்ல உள்ளார். இதில் ஆய்வுக்குழுவினர் தெரிவித்த குறைகள் நிறைவேற்றப்பட்டதை எடுத்து கூறுவார். 1,650 மருத்துவ மாணவர் சேர்க்கை இந்த ஆண்டிலே நடைபெறும்.
இவ்வாறு அவர் கூறினார்.

பேட்டியின் போது அமைச்சர்கள் ரகுபதி, மெய்யநாதன், அப்துல்லா எம்.பி., கலெக்டர் கவிதாராமு, பொது சுகாதாரம் மற்றும் மருத்துவ துறை இயக்குனர் செல்வவிநாயகம், முன்னாள் அரசு வக்கீல் செல்லபாண்டியன் மற்றும் அதிகாரிகள் உடன் இருந்தனர். புதுக்கோட்டை நகர்மன்றம், நமணசமுத்திரத்தில் நடைபெற்ற கொரோனா தடுப்பூசி முகாமை அமைச்சர் சுப்பிரமணியன் பார்வையிட்டார்.

நிதி வசூல்

தஞ்சாவூரை சேர்ந்த சிறுமி ஒருவரின் சிகிச்சைக்காக ரூ.16 கோடி தேவைப்படுவதாகவும், அதற்காக சிலர் நிதி வசூலில் ஈடுபட்டு வருவது குறித்து அமைச்சர் மா.சுப்பிரமணியனிடம் கூறுகையில், அது தவறானது. அப்படி ஒரு மருந்து இல்லை என ஏற்கனவே தெரிவிக்கப்பட்டு விட்டது என்றார். மேலும் புதுக்கோட்டையில் இது தொடர்பாக நிதி வசூலில் ஈடுபட்டால் நடவடிக்கை எடுக்கும் படி கலெக்டரிடம் அவர் அறிவுறுத்தினார்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments